Monday, August 20, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 74 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 18

ஹிரண்யாக்ஷனுக்கும் பகவானுக்கும் சமர் மூண்டது.

ப்ரும்மா தேவகணங்களுடன் அங்கு வந்து,
ப்ரபோ, இவன் மிகுந்த பலசாலியாய் இருக்கிறான். தன் பலத்தினால் பெருகும் கர்வத்தினால் அனைவரையும் துன்புறுத்துகிறான். இப்போது 'அபிஜித்' என்ற புண்ய காலம் வந்துவிட்டது. நீங்கள் விளையாட்டகச் சமர் செய்தது போதும். இவனைக் கொன்றுவிடுங்கள் என்று வேண்டினார்.

ஹிரண்யாக்ஷன் கதை, சூலம் முதலியவற்றைக் கொண்டு தாக்கினான். பகவான் அவற்றையெல்லாம் விளையாட்டாகப் பிடித்தார்.

ஹிரண்யாக்ஷன் ஓடிவந்து பகவானது அகன்ற திருமார்பில் ஒரு குத்து விட்டான். யானையைப் பூமாலையால் அடிப்பதுபோன்று அவர் அசையாமல் நின்றார்.

மிகவும் விரிவாக இப்போரை வர்ணிக்கிறார் மைத்ரேயர்.

ஹிரண்யாக்ஷன் பற்பல மாயைகளை ஏவினான். பகவான் அனைத்தையும் தகர்த்தெறிய சக்கரத்தை ஏவினார். கடைசியில் விளையாடியது போதும் என்று நினைத்தவராக, அவனை விளையாட்டாக ஒரு அடி வைத்தார். இரண்யாக்ஷன் தலை சுற்றியது. முழி பிதுங்கியது. வேரற்ற மரம்போல் விழுந்தான்.

அப்போது பகவான் தன் திருவடியால் அசுரனை உதைக்க, யோகிகளும் ஆசைப்படும் நிலையை அடைந்தான் ஹிரண்யாக்ஷன் அடைந்தான். பகவானது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டே உயிரை விட்டான்.
சூழ்ந்து நின்றிருந்த தேவர்கள் அனைவரும் துதி செய்ய பகவான் வைகுண்டத்தை அடைந்தார்.

இந்த வராஹமூர்த்தியின் திருவிளையாடலைக் கேட்பவர்கள் ப்ரும்மஹத்தி முதலிய எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

இச்சரித்ரம் மிகவும் பவித்ரமானது. செல்வத்தையும், புகழையும் அளிப்பது. ஆயுளை வளர்ப்பது. இதைக் கேட்பவர்களுக்கு பிறவியின் முடிவில் வைகுண்டம்‌ கிட்டும்
என்று பலவிதமான பலச்ருதிகளைக் கூறினார் மைத்ரேயர்.

இதன் பின் ப்ரும்மாவின் படைப்புகளைப் பற்றி விதுரர் மீண்டும் வினா எழுப்ப, மிக விரிவாக ப்ரும்மாவின் ஒவ்வொரு படைப்பு தோன்றும் விதத்தையும் விளக்கினார் மைத்ரேயர்.

அதன் பின் மனுவின் வம்சம் பற்றிக் கேட்டார் விதுரர்.

ஸ்வாயம்புவ மனுவிற்கு மூன்று பெண்களும், இரண்டு ஆண் மகவுகளும் பிறந்தன என்று முன்னமே கூறினீர்கள். அவர்களைப் பற்றிக் கூறுங்கள். மஹாயோகியான கர்தமருக்கு ஸ்வாயம்புவமனு தேவஹூதி என்ற தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார் என்றும் சொன்னீர்கள். மற்ற பெண்களான, ஆகூதி, ப்ரஸூதி ஆகியவர்களின் சந்ததிகள், ப்ரியவிரதன், உத்தானபாதன் ஆகியோரின் ப்ரபாவங்கள் ஆகியவற்றைக் கூறுங்கள்.
மைத்ரேயர், சிரித்துக்கொண்டே கூறலானார்.

கர்தம ப்ரஜாபதி ப்ரும்மாவின் நிழலிலிருந்து தோன்றினார் என்று முன்னமே பார்த்தோம்.

அவரிடம் ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்யும்படி ப்ரும்மா கூறினார்.

கர்தமர் ஸரஸ்வதி நதி தீரத்தில் வந்து பதினாயிரம் ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டார்.

பகவான் ஸ்ரீ ஹரியை ஒருமுகப்பட்ட மனத்துடன் ஆராதனை செய்தார்.
பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்தபின்னர், இறைவனின் தரிசனம் கிட்டவில்லையென்று ஏங்கித் தவித்தார். பக்தியால் அவரது நெஞ்சம் உருகி, கண்ணில் வழியும் நேரம், அவரது ஹ்ருதய கமலத்தில் வீற்றிருந்த பகவான் அவன் கண்முன் தோன்றினார்.
தாமரைக்கண்கள், வெண்தாமரை, நீலத்தாமரைகளால் ஆன மாலை, பொன்னிற ஆடை, அலைபாயும் கறுத்த குழல், ஒளிவீசும் தங்கக் கிரீடம், மகர குண்டலங்கள், சங்கு, சக்ரம் கதை முதலிய ஆயுதங்களோடு, ஹ்ருதயம் கலக்கும் ஆயுதமான தாமரையும் ஏந்தி, புன்னகயோடு கருடன் மேல் எழுந்தருளினார்.

கருடன் கழுத்தைச் சுற்றியிருந்த திருவடித் தாமரைகளின் அழகில் மனத்தைப் பறி கொடுத்தார் கர்தமர்.
நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இறைவனை வணங்கினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment