Saturday, August 18, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 72 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 16



பகவானின் விநயம்

தம்மை வைகுந்த வாயிலில் தடுத்த பார்ஷதர்களான ஜெய விஜயர்களை ஸனகாதிகள் அசுரர்களாகும்படி சபித்தனர்.

ஸகல ஜீவர்களின் அந்தராத்மாவாக விளங்கும் பகவானுக்கு வாசலில் நடப்பது தெரியாதா..
எல்லாம் முடிந்தபின்னர், தாமரைப் பூவைச் சுழற்றிக்கொண்டு வந்தார்.
அவரது திருவிளையாடலுக்கு வேறு யார் வசனம் எழுத இயலும்? புதிய அவதாரங்களுக்காக விதை போட்டவர் அவரே..

பகவானின் அத்யந்த பக்தர்களான பார்ஷதர்களுக்கு வந்திருப்பவர்களைப் பற்றித் தெரியாதா? அப்படித் தெரியாதவர்கள் பார்ஷதர்கள் ஆக முடியுமா?
ஸனகாதியர் பெரும் ஞானிகள். அவர்களுக்குத்தான் ஒரு இடத்திற்குப் போனால், அங்குள்ள வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று தெரியாதா? வாயிற்காவலரின் வேலை வருபவர்களை விசாரிப்பது என்று அறியாதவர்களா?
இரு பக்கமும் அவர்கள் தன்னிலை இழந்து இப்படி நிகழ்ந்ததன் காரணம் என்ன?

அனைவரின் ஹ்ருதயத் தாமரைகளையும் ஆட்டுவிப்பவன் நானே என்பதாக தாமரையைச் சுழற்றிக்கொண்டு வந்தார் போலும். அதற்கேற்றபடியே பேசவும் செய்கிறார்.
பகவானைப் பார்த்ததும் ஸனகாதி முனிவர்கள் பிறந்த பயனை அடைந்ததாக மகிழ்ந்தனர். துதி செய்யத் துவங்கினர்.

முதலும் முடிவுமற்ற இறைவா, நல்லோர் தீயோர் அனைவர் மனத்திலும் விளங்கும் அந்தர்யாமி தாங்களே. ஆனால், ஸ்வரூபத்தை மறைத்துக்கொள்கிறீர்கள். எங்கள் தந்தையான ப்ரும்மா, தங்களைப் பற்றிய தத்துவங்களை எங்களுக்கு உபதேசித்தார். அப்போதே எங்கள் ஹ்ருதயத்தில் வந்து அமர்ந்து விட்டீர்கள்.

இன்று பரம ஸத்வ ரூபமான தங்களை தரிசிக்கும் பேறு பெற்றோம். யான் எனது என்ற அஹங்காரத்தையும், விருப்பு வெறுப்பையும் விட்ட முனிவர்களும் பக்தி யோகத்தின் வாயிலாகவே தங்களின் இந்த ரூபத்தைக் காண்கிறார்கள்.
நாங்கள் இதற்கு முன் செய்த பாவங்களால் நரகவாசம் கிட்டினாலும் பரவாயில்லை. ஆனால், எப்போதும் எங்கள் மனம் வண்டுபோல் தங்கள் திருவடித் தாமரைகளையே சுற்றவேண்டும். எங்கள் வாக்கு தங்களையே பாடவேண்டும். செவிகள் தங்கள் திருப்புகழையே கேட்கவேண்டும். தங்களைத் திரும்ப திரும்ப வணங்குகிறோம்.
இதைக்கேட்ட பகவான் மிகவும் மகிழ்ச்சியடைந்து கூறலானார்.

முனிவர்களே, என் பார்ஷதர்கள், என் எண்ணம் அறியாது, தங்களுக்கு அபசாரம்‌ செய்துவிட்டனர். உங்களை அவமதித்த இவர்களுக்கு நீங்கள் விதித்த தண்டனை உகந்ததே. உங்களுக்கு இழைக்கப்பட்ட அபசாரம் உண்மையில்‌ எனக்கிழைத்ததாகும்.
அவர்கள் சார்பாக நான் உங்களிடம்‌ மன்னிப்பு வேண்டுகிறேன்.

வேலையாள் செய்த தவற்றை எஜமானனின் குற்றம் என்று தான் பொதுமக்கள் சொல்வார்கள். அது யஜமானனின் நற்பெயரை அழித்துவிடும். அந்தணர்களிடம் அபசாரப்படுபவர்களை நான் வெறுக்கிறேன்.

நான் உங்களைப்போன்ற முனிவர்களுக்குச் செய்யும் பணிவிடையால்தான் என் திருவடிகளுக்கு இவ்வளவு மகிமை. திருமகளும் எனைவிட்டு அகலாமல் இருக்கிறாள். வேள்விகளால் நான் நிறைவு பெறுவதில்லை. தங்களைப்போன்ற பக்தர்கள் நல் உணவைப் புசித்தால் ஒவ்வொரு பிடியையும் நானே உண்பதுபோல் மனநிறைவு அடைகிறேன்.

யோகமாயையின் எல்லையற்ற சக்திகள் அனைத்தும் எனக்கடிமை. ஆனால் நானோ தங்களைப் போன்ற அடியார்களின் திருவடித் தூளியை என் சிரசில் தாங்குகிறேன்.

அந்தணர்களும், பசுக்களும், காப்பவர் அற்றுத்திரியும் ஸகல ப்ராணிகளும் என் திருமேனியே ஆகும். அவற்றை என்னிடமிருந்து வேறாய்க் காண்பவர்களை யமதூதர்கள் கிழிப்பார்கள்.

என் பார்ஷதர்கள் தவற்றை உணர்ந்து வணங்கி நிற்கிறார்கள். அவர்களது சாபத்திலிருந்து சீக்கிரமாக விமோசனம் அடையவேண்டும். அதற்கு நீங்கள் தயை கூர்ந்து அருள் புரியவேண்டும்.
ஈரேழு லோகங்களையும் அதன் ஜீவன்களையும் படைக்கும் பகவான், எப்படி தான் என்ற எண்ணம் துளியும்‌ இல்லாமல் தன் பக்தர்களிடமே விநயமாய்ப் பேசுகிறான்..
ப்ரும்மா மேலும் சொல்கிறார்.
தேவாதிதேவனைக் கண்டதுமே ஸனகாதியரின் சினம் மறைந்துவிட்டது. அவர் அந்தணர்களைப் புகழ்ந்து பேசியதும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றனர். பின்னர் உடல் புல்லரிக்கக் கைகூப்பிய வண்ணம், பகவானைப் பலவாறு துதி செய்தனர். பின்னர்,
தாங்கள் இந்த பார்ஷதர்களுக்கு வேறு தண்டனையளித்தாலும் சரி, அல்லது தங்களிடமே வைத்துக்கொண்டாலும் சரி. இவர்களைச் சபித்ததற்காக எங்களுக்கு ஏதேனும் தண்டனை அளித்தாலும் சரி. எதுவாயினும் ஏற்கிறோம்
என்றனர்.

பகவான் சொன்னார்
அந்தண ஸ்ரேஷ்டர்களே, தாங்கள் இவர்களுக்கு அளித்த தண்டனை முன்பே நிச்சயிக்கப்பட்டது. தாங்கள் வருந்தவேண்டா. இவர்கள் அசுரப் பிறப்பை அடைந்து என்னையே ஒருமுகமாய் நினைத்து விரைவில் என்னை அடைவார்கள்.
அதன்பின் ஸனகாதியர் பகவானை மீண்டும் வணங்கி விடை பெற்றுக்கொண்டு சென்றனர்.

அவர்கள் சென்றதும் பகவான் ஜெய விஜயர்களைப் பார்த்து,
நீங்கள் பயமின்றிச் செல்லுங்கள். நீங்கள் வாயிற்காவல் பணியில் இருப்பதால் உங்கள் கடைமையைத் தான் செய்தீர்கள். நான் எல்லாம் வல்லவன் ஆயினும், அந்தண சாபத்தை மாற்ற விரும்பவில்லை. முன்பு நான் யோக நித்திரையில் இருந்தபோது, மஹாலக்ஷ்மியை இவ்வாறு தடுத்தீர்கள். அப்போது அவளும் இதே சாபத்தை அளித்தாள்.
எனவே, அசுரராய்ப் பிறந்து என்னிடம் பகைமை கொண்டு வேறு எண்ணமே இல்லாமல் என் தியானத்திலேயே இருங்கள். அதுவே யோகமாகி, பாவம்‌ நீங்கப் பெற்று என்னை அடைவீர்கள்.
என்று அவர்களுக்கு ஆறுதல் தரும் வண்ணம் கனிவுடன் பேசிவிட்டு, தன் இருப்பிடம்‌ சென்றார்.
சமயத்திற்குத் தக்கவாறு, எதிரிலிருப்பவரின் மனோபாவம் தெரிந்து ஆறுதலாய்ப் பேசும் கலை பகவானுக்கே உரியது..
ஸமயானிகி தகு மாடலாடனே..- ஸ்ரீ ஸ்ரீ தியாகராஜர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment