Wednesday, August 1, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 59 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 3



புகழுக்குப் புகழ் சேர்க்கும் பகவானின் திருவிளையாடல்களின் பெருமையைப் பற்றித் திரும்ப திரும்பப் பேசுவதே இறைவன் நமக்கு நாக்கு அளித்ததன் பெரும் பயன்.
படித்தறிந்த சான்றோர்கள் திருவாய் மலர்ந்தருளும் இறைவனது திருப்புகழ் அமுதத்தைச் செவியாரப் பருகுவதே செவி படைத்ததன் பயன் என்பதும் சான்றோர்களின் திருவுளம்.
அவரது மாயை மாயாவிகளையும் மயக்குவது.
அந்த பகவானை வணங்குகிறேன்
என்றார் மைத்ரேயர்.

இவற்றைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த வியாசரின் மகனான விதுரர், மேலும் கேட்டார்.
மஹரிஷியே
பகவான் அறிவே வடிவானவர், மாறுதலற்றவர், குறைவற்ற நிறைகுணமுள்ளவர். ஆனாலும் நிர்குணமுள்ளவர்.
அவ்வாறான பகவானுக்கு திருவிளையாடல்களை முன்னிட்டு என்று சொன்னாலும்கூட செயல்களும் குணங்களும் எப்படிப் பொருந்துகின்றன?
குழந்தை ஆசையினால் விளையாடுகிறது. ஆனால், இறைவனோ சுபாவத்திலேயே மனநிறைவு பெற்றவர். ஆத்மாராமரானவர். எதிலும் ஒட்டாதவர். அவர் ஏன் திருவிளையாடல்கள் புரிகிறார்?
இடம், காலம், சூழல், தன்னியல்பு வேறு எந்த காரணங்களாலும் பாதிக்கப்படாத ஞானமே வடிவான பகவான் எவ்வாறு மாயையுடன் ஒன்றுபடுவார்?
அனைத்துயிர்களின் சாட்சியான இறைவனுக்குக் கர்மங்களினால் ஏற்படும் துன்பமோ, ஆனந்தக் குறைவோ எப்படி ஏற்படும்?
அறியாமைக் கோட்டைக்குள் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறேன். தயை கூர்ந்து என் ஐயத்தைத் தெளிவுபடுத்துங்கள்.
யான் எனது என்ற செருக்கற்ற மைத்ரேயர், புன்னகை மலர்ந்த திருமுகத்தோடு பேசத் துவங்கினார்.
ஆன்மா எதிலும் ஒட்டாது. தனிப்பட்டது.
கனவில் ஒருவன் தான் வெட்டப்பட்டதாகக் காண்கிறான். ஆனால், உண்மை அதுவல்ல அல்லவா?
கனவு கலைந்ததும் உண்மை புலப்படுகிறது. ஆனால், கனவு நீடிக்கும்வரை அது உண்மையென்றே நினைக்கிறான்.
கனவில் அவன் ஆழ்ந்திருந்தபோதும் அவனது உண்மை நிலை இருந்தது. ஆனால் சலனமற்று உறக்கத்தில் இருந்தது.
நீரில் நிலவின் பிம்பம் தெரிகிறது. நீரில் அலை ஏற்படும்போது, நிலவு அசைவதுபோல் இருக்கிறது.
மேலே நிமிர்ந்து பார்த்தால் நிலவு அசையவில்லை.
அசைவது நீர்.
ஆனால் நிலவு அசைவது போல் தோன்றச் செய்வது மாயை.
அதுபோல் ஆன்மாவுக்கு எந்த குணமும் இல்லை. ஆனால் உடலைக் கொண்டே அறியப்படுவதால் கர்ம வாசனைகளின் பாதிப்புகளான குணங்கள் உள்ளுறையும் ஆன்மாவின் குணங்களாகத் தெரிகின்றன.
உலகின் பற்றுக்களைத் துறந்து அறநெறியைக் கடைப்பிடித்து ஒழுகுபவனுக்கு பகவானின் அருளால் பெற்ற பக்தியோகத்தினால் மாயையின் தோற்றம் சிறிது சிறிதாக இப்பிறவியிலேயே விலகும்.
நீருக்கு வடிவம் இல்லை. அது வைக்கப்படும் பாத்திரத்தின் வடிவை எடுத்துக்கொள்கிறது. ஆனால் அதைக் காண இயலும்.
அதைக் குளிர வைத்தால் பனிக்கட்டியாகிறது. பனிக்கட்டிக்கு ஸ்திரத்தன்மை உண்டு. எனவே வடிவம் கொள்கிறது. காணவும் இயலும்.
அதே நீரை காய்ச்சினால் ஆவியாகிறது. அப்போது வடிவமும் இல்லை. காணவும் இயலாது.
ஒரே நீர் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு குணம் கொண்டதாக விளங்குகிறது.
அந்ததந்த திருவிளையாடல்களுக்கு ஏற்ப ஒரே இறைவன் பல்வேறு ரூபங்களையும் ஸ்வபாவங்களையும் ஏற்கிறான்.
ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவனின் கண்கள் பார்ப்பதில்லை. காதுகள் கேட்பதில்லை. அதுபோல் அந்தர்யாமியான இறைவனிடத்தில் ஈடுபடுட்டதும் பொறிகள் நிலைபெற்றுவிடுகின்றன. அவனுக்கு விருப்பு, வெறுப்பு முதலிய தோஷங்கள் அழிந்துவிடுகின்றன.‌
பகவான் சர்வ சாட்சியாகையால் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.
அவனிடம் மனத்தை ஒருமுகப்படுத்திய ஜீவனுக்கும் எந்த பாதிப்பும் இல்லை
என்றார் மைத்ரேயர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment