Sunday, August 19, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 73 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 17



பார்ஷதனா? அசுரனா?

ஸனகாதியரின் சாபம் பெற்ற ஜெய விஜயர்கள் தங்கள் சோபையையும் பெருமையையும்‌ இழந்தனர். அவர்கள் வைகுண்டத்திலிருந்து கீழே விழும்போது அத்தனை தேவர்களும் திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள்தான் இப்போது கச்யபர் மூலமாக திதியின் வயிற்றில் உள்ளனர். அவர்களுடைய தேஜஸால் உங்கள் அனைவரின் தேஜஸும்‌மங்கியுள்ளது. இவ்விஷயத்தில் பகவான் தலையிட்டு அனைவர்க்கும் நன்மை புரிவார். கவலை வேண்டாம்.
என்று ப்ரும்மா சொன்னதும், தேவர்கள் கலைந்து ஸ்வர்கம் சென்றனர்.

மைத்ரேயர் மேலும் கூறத் துவங்கினார்.
திதி தேவி நூறாண்டுகள் கழித்து இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். அப்போது எல்லா லோகங்களிலும் ஏராளமான தீய சகுனங்கள் தோன்றின. அவற்றைக்கண்டு ஸனகாதியர் தவிர மற்ற அனைத்து லோகங்களில் உள்ளோரும் பயந்துபோனார்கள்.

அந்த அசுரர்கள் இருவரும் பிறவியிலேயே மிகுந்த பராக்ரமமும், பாறை போன்ற உடலும், கொண்டு மலை போல் வளர்ந்தனர். இருவரும் இரட்டையர்கள்.

மூத்தவனுக்கு ஹிரண்யகசிபு என்றும் இளையவனுக்கு ஹிரண்யாக்ஷன் என்றும் பெயரிட்டார் கச்யபர்.

ஹிரண்யகசிபு தன் பராக்ரமத்தாலும், தபோ வலிமையாலும் மூவுலகங்களையும் லோகபாலர்களையும் தன்வசப்படுத்திக்கொண்டு, மிகுந்த செருக்குடன் அலைந்தான்.

தம்பியான ஹிரண்யாக்ஷன் அண்ணன் மேல் ‌மிகுந்த பிரியம்‌ கொண்டு அவனுக்குப் பிடித்தவற்றையே செய்தான். போரில் மிகுந்த விருப்பம் கொண்டவனாக கையில் கதையேந்திக்கொண்டு அமரலோகம் சென்றான்.

மலை பெயர்ந்து வருவது போல் வரும் அவனைக்‌கண்டு தேவர்கள் அஞ்சி ஒளிந்தனர். அவர்கள் ஒளிவதைக் கண்ட ஹிரண்யாக்ஷனுக்கு கர்வம் அதிகரித்தது. பெரிய கர்ஜனை செய்துகொண்டு, ஸ்வர்கத்தை விட்டுக் கிளம்பினான்.

நீர் விளையாட்டு விளையாட எண்ணி ஸமுத்திரத்தில் மதயானை போல் குதித்தான். நீர்வாழ் பிராணிகள் அனைத்தும் பயந்து நடுங்கி வெகு தொலைவில் ஓடின. அவன் நீரையளைவதால் ஆர்ப்பரிக்கும் அலைகளை கதையால் ஓங்கி அடித்தான்.

சண்டை செய்ய யாருமின்றி சுற்றித் திரிந்தவன், வருணனின் தலைநகரமான விபாவரி பட்டணத்தை அடைந்தான்.
அங்கு சென்று அசுரலோகத்தின் தலைவனான வருண தேவனைப் பரிஹாசம் செய்ய எண்ணி, ஒரு பணியாளன் போல்,
அரசே! தாங்கள் ராஜசூய வேள்வி செய்து அனைத்து அரசர்களையும் வெற்றி கொண்டீர்கள். லோகபாலராகவும், பெரும் புகழ் பெற்றீர்கள். எனக்குப் போர்ப் பிச்சை அளிக்கவேண்டும்!
என்றான்.

வருண தேவர் பொங்கியெழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, பொறுமையாக,
நண்பனே! நான் ஓய்வு பெற்றுக்கொண்டுவிட்டேனே. உனக்கு இணையாகப் போர் செய்யத் தகுந்தவர் பகவான் மஹாவிஷ்ணுவே ஆவார். அவரைத் தவிர வேறெவரும் உன்னோடு சமர் செய்யத் தகுந்தவர் அல்லர். நீயோ பெரும் போர் வீரன். எனவே, அவரைத் தேடிச் செல். அவர் உன்னை வெற்றி கொண்டு உன் செருக்கை அழிப்பார்
என்றார்.

உனக்கீடாக சண்டை செய்ய ஒருவர் உள்ளார் என்பதைக் கேட்ட ஹிரண்யாக்ஷன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். வேறெதையும் கவனிக்காமல் நாரதரைப் பிடித்து மிரட்டி, ஸ்ரீ ஹரி பாதள லோகம் வந்திருக்கிறார் என்று அறிந்துகொண்டான்.
பாதாள லோகத்தில் ஸ்ரீ ஹரியைத் தேடியலைந்த ஹிரண்யாக்ஷன் அங்கு தன்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியைத் தன் தெற்றிப் பற்களின் நுனியால் தாங்கிக்கொண்டு ஒரு வராஹம் மேலெழுவதைக் கண்டு மிகுந்த சினம் கொண்டான்.
பகவானைக் கண்டதும் ஹிரண்யாக்ஷன் பலவாறு கத்த ஆரம்பித்தான்.

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நிந்தனை போல் தோன்றினாலும், அவை உண்மையில் ஸ்துதிகளே. அவற்றில் உதாரணத்திற்கு ஒன்று.

ஆஹைநமேஹ்யக்ஞ மஹீம் விமுஞ்ச நோ
ரஸௌகஸாம் விஶ்வஸ்ருஜேயமர்பிதா|
ந ஸ்வஸ்தி யாஸ்யஸ்நயா மமேக்ஷத:
ஸுராதமாஸாதிதஸூகராக்ருதே||

மேலோட்டமாகப் பார்த்தால், அறிவில்லாதவனே! இங்கு வா! இந்த பூமி பாதாளவாசிகளுக்காக ப்ரும்மதேவரால் பரிசாகக் கொடுக்கப்பட்டது. காட்டுப் பன்றி உருவில் வந்த தேவர்களில் கடையனே! நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது நீ இந்த பூமியை எடுத்துக்கொண்டு சுகமாகச் செல்லமுடியுமா?

இதன் உண்மைப் பொருளாகப் பெரியோர் சொல்வது,
எவரைக் காட்டிலும் மேலான அறிவாளி ஒருவர் இல்லையோ, அத்தகைய மேதாவியே!
தேவர்கள் அனைவரும் எவரைக் காட்டிலும் கடையர்களோ, அத்தகைய தலைவரே!
தன் விருப்பத்தினால் விளையாட்டாகக் காட்டுப்பன்றி உருவை எடுத்தவரே! நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீங்கள் இந்த பூமியையும், பரந்த அரசையும் அடைவது நிச்சயம். இதில் சந்தேகமே‌இல்லை. ஆனால், தயை கூர்ந்து பூமியை எங்களுக்காகத் தந்துவிடுங்கள்..

அசுரனாயிருந்தாலும் பார்ஷதனாயிருந்தாதால், இகழ்வது போல் பேசி பகவானைப் புகழ்ந்து பேசுகிறான் ஹிரண்யாக்ஷன்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment