Friday, July 27, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 54 பிரிவுத்துயர்

விதுரர் உணர்ச்சிப் பெருக்கினால் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, பேச்சற்ற நிலையில் கண்ணீர் வழிந்தோட கண்ணனின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார் உத்தவர்.
ஒரு முஹூர்த்த நேரம் கழித்து சற்று உணர்வு திரும்பியவராய்த் தழுதழுக்கும் குரலில் பேசத் துவங்கினார்.
க்ருஷ்ணனாகிய சூரியன் அந்தமித்துவிட்டது விதுரரே.. அவரின் அத்தனை உறவினர்களும் காலம் என்னும் பாம்பினால் விழுங்கப்பட்டனர்.
நலமா என்று கேட்டால் நான் என்ன சொல்வது?
கண்ணனோடு நெருங்கிப்பழகியும், அவரை பகவான் என்று யாதவர்கள் அறிந்துகொள்ளவில்லையே. கண்ணனைத் தங்களுக்குள் சிறந்தவன் என்றே எண்ணினர்.
தவமே புரியாத யாதவர்களோடு சிலகாலம் பழகிவிட்டு, தன் உடலை மறைத்துக்கொண்டார் கண்ணன். அனைத்து உலகங்களையும் மயக்கும் அழகுத் திருமேனி கொண்டவர். ஏன்? அவரே அதைக் கண்டு வியந்தார்.
தர்மபுத்திரர் நடத்திய ராஜஸூய வேள்வியைக் காண வந்த அனைவரும் ப்ரும்மதேவனின் படைப்புத்திறன் இவரோடு முடிந்ததோ?
இதற்கு மேலான அழகை இனி அவர் படைக்க இயலாதோ என்று நினைத்தனர்.
அவரது உளம்கனிந்த பார்வையாலும், விநோதமான சிரிப்பாலும் இடைப்பெண்கள் அனைவர் மனத்தையும் கவர்ந்தார்.
அவர் பிறப்பற்றவர். ஆயினும் வசுதேவரின் திருமகனாய்ப் பிறந்தார்.
அவர் பயமற்றவர். எனினும் கம்சனிடம் பயந்தவர்போல் கோகுலத்தில் ஒளிக்கப்பட்டு வளர்ந்தார்.
அவரது பராக்ரமம் எல்லையற்றது. இருப்பினும் காலயவனனுக்கு பயந்தவர்போல் வடமதுரையை விடுத்து துவாரகைக்கு ஓடினார்.
இவையெல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
கம்சனைக் கொன்றதும், சிறைக்கு ஓடிச்சென்று தாய் தந்தையரை விடுவித்தார். அவர்கள் கால்களில் விழுந்து என்ன சொன்னார் தெரியுமா?
கம்சனுக்கு பயந்து கோகுலத்தில் ஒளிந்து வசித்த என்னால் தங்களுக்கு எந்தப் பணிவிடையும் செய்ய முடியவில்லை.. தாங்கள் அதை மனத்தில் கொள்ளாது என்னை மன்னிக்கவேண்டும் என்றார். அதை நினைத்தாலே என் மனம் விம்முகிறது.
அவரது இரு புருவங்களிலும் காலதேவன் வசிக்கிறான். அவற்றை நெரித்தே இவ்வுலகின் பாரத்தைக் குறைத்தார்.
தன்னை நிந்தித்த சிசுபாலனுக்கு அவர் ஸாயுஜ்ய பதவி கொடுத்ததை நீங்களும் அறிவீர்கள்தானே.. இப்படிப்பட்டவரின் பிரிவை எவரால் சகிக்க இயலும்?
பாரதப்போரில் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் அவரது திருமுகமண்டலத்தின் அழகைப் பருகியவாறே அவரது உலகை அடைந்தனரே.
அவரே மூவுலகிற்கும் தலைவர். தன் இயல்பான செல்வத்தினால் குறைவற்றவர். அவருக்கு ஈடானவரே இல்லையெனும்போது உயர்ந்தவர் எவரேனும் உண்டா?
இந்திராதி தேவர்களும் லோகபாலர்களும் காணிக்கைகளைக் கையிலேந்திக்கொண்டு அவரைக் காண வரிசையில் நிற்கிறார்கள்.
காணிக்கை செலுத்தும்போது தங்கள் கிரீடங்கள் அவர் திருவடியில் படுமாறு சிரம் தாழ்த்தி வணங்குகிறார்கள்.
அப்படிப்பட்டவர்,
உக்ரசேனரை உயர்ந்த சிங்காசனத்தில் அமர்த்திவிட்டு அவரருகில் கைகட்டி நின்று
அரசே! நான் சொல்வதைக் கேட்டருளுங்கள் என்று கூறி சேவை செய்கிறார்.
மார்பில் விஷம் வைத்துக்கொண்டு பாலூட்ட வந்த பூதனைக்கு யசோதைக்கு அளிக்கும் அதே நற்கதியை அளித்தார். அப்படிப்பட்டவரை விட்டுவிட்டு வேறு யாரைச் சரணடைவது?
அசுரர்கள்கூட பகைமையினால் எப்போதும் தியானித்துக்கொண்டு அவரையே அடைந்தனரே.
பூமிக்கு நலம் செய்ய சிறையிலன்றோ அவதரித்தார்.
யமுனை நதிக்கரையில் பற்பல பறவைக்கூட்டங்கள் நிரம்பிய அடர்ந்த காடுகளில் இடைச்சிறார்களுடன் கன்று மேய்த்து விளையாடினார்.
ஏராளமான குழந்தை விளையாட்டுக்களை இடைச்சிகளுக்குக் காட்டினார்.
சிலசமயம் அழுவார். சிலசமயம் சிரிப்பார்.
ஒன்றுமறியாதவர்போல் மிடுக்காக ஒரு பார்வை பார்ப்பார். அத்தனையும் அழகு சொட்டுமே..
கண்ணனின் மாமனான கம்சன் அவரைக் கொல்வதற்காக விருப்பம்போல் வடிவெடுக்கும் மாயாவிகளான பல அரக்கர்களை அனுப்பினான்.
குழந்தைகள் தம் விருப்பம்போல் விளையாட்டு பொம்மைகளைப் போட்டுடைப்பதுபோல் அத்தனை அரக்கர்களையும் உடல் சிதறச்செய்தார்.
காளியனின் விஷம் கலந்த நீரைக் குடித்து மயங்கிய கோபச்சிறுவர்களை தன் அமுதப்பார்வையால் உயிர்ப்பித்தார்.
காளியனையும் அடக்கி, கடலுக்குத் துரத்தி, நீரை மக்களுக்குப் பயன்படச் செய்தார்.
கண்ணன் வந்து குடியிருந்ததால் நந்தகோபரின் திருமாளிகையில் ஏராளமான செல்வம்‌குவிந்து செல்வச் சுமை ஏற்பட்டது. அதை எப்படி நல்வழியில் செலவழிக்க வேண்டும் என்று வழிகாட்டி நந்தனை உத்தம அந்தணர்களைக்‌கொண்டு கோஸவம் (பசுக்களைப் பூஜிப்பது) என்ற வேள்வியைச் செய்தார்.
இந்திரனின் கர்வத்தை அடக்க, குழந்தைகள் நாய்க்குடையைப் பிடுங்குவதுபோல் கோவர்தன மலையைப் பிடுங்கிக் குடையாய்ப் பிடித்து தன்னையே நம்பியிருக்கும் கோகுலவாசிகளைக் காத்தார்.
இவ்வாறு கண்ணனின் ஒவ்வொரு லீலையையும் சொல்லிச் சொல்லி அழுதார் உத்தவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment