Friday, July 13, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 40 நாரதரின் கேள்விகள்

நாரதர் ப்ரும்மாவிடம் கேட்டார்.
தந்தையே தாங்களே அனைத்திற்கும் முன் தோன்றியவர்.
ஆன்ம தத்துவங்களை விளங்கும்படிச் செய்யும் வழியை உபதேசித்தருளுங்கள்.

ப்ரபஞ்சத்தை விளங்கச் செய்வது யார்?
எந்த சக்தியால் இது இயங்குகிறது?
இதைப் படைத்தது யார்?
கடைசியில் இது எங்கு லயமாகிறது?
எவரை அண்டி இது நிற்கிறது?
இதன் உண்மை ஸ்வரூபமென்ன?
உலகைப் படைக்கும் அறிவு தங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
தங்களுக்கு ஆதாரமாய் இருப்பவர் யார்?
உங்கள் தலைவர் யார்?
யாருக்குக் கட்டுப்பட்டு நீங்கள் உலகைப் படைக்கிறீர்கள்?
தங்களுடைய உண்மை லக்ஷணம் என்ன?
தாங்கள் ஒருவராகவே ஐம்பூதங்களைக் கொண்டு தங்கள் மாயையால் அனைத்து உலகையும் படைக்கிடீர்கள்.
சிலந்தி தன் வாயில் ஊறும் நீர் கொண்டு நூலிழுத்து வலை பின்னி அதில் அங்குமிங்கும் சென்று விளையாடுவது போல் நீங்கள் எவ்வித துன்பமும் இன்றி உலகைப் படைக்கிறீர்களே.
இவ்வுலகிலுள்ள உயிருள்ள, உயிரற்ற, உயர்ந்த, தாழந்த எத்தன்மை கொண்டதாயினும் அது தங்களாலேயே படைக்கப் படுகிறது.
ஆனால், தாங்களும் தவம் செய்கிறீர்கள். உங்களை விட உயர்ந்த சக்தி உள்ளதா?
எனக்கு விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டார்.

ப்ரும்மா இக்கேள்விகளின் பதிலாக படைப்பின் ரகசியத்தைக் கூறினார்.
மகனே, நீ உயர்ந்த கேள்விகளைக் கேட்டாய். என்னை விட உயர்ந்த பகவானைப் பற்றி நீ இன்னும் அறியாததால் என்னை உயர்ந்தவன் என்கிறாய்.
சூரியன், சந்திரன், கிரகங்கள் நக்ஷத்ரங்கள், அக்னி ஆகிய அனைத்துமே இறைவனிடமிருந்து ஒளியைப் பெற்று ஒளிர்கின்றன. அதுபோல் நானும் ஸ்வயம்ப்ரகாசரான இறைவனிடமிருந்து சக்தி பெற்று இவ்வுலகைப் படைக்கிறேன்.
ஆனால், இறைவனின் வெற்றிகொள்ள இயலாத மாயா சக்தியினால், எல்லோரும் என்னை குரு என்கின்றனர்.
மாயை அவர் எதிரில் பயத்தோடு நிற்கிறது.

பஞ்ச மஹா பூதங்களும், பிறவிக்குக் காரணமான கர்மாவும், இவற்றை இயக்கும் காலமும், அவற்றின் மாறுதலுக்கான சுபாவமும், அவற்றை நுகரும் ஜீவாத்மாவும், அனைத்துமே உண்மையில் பகவான் ஸ்ரீ வாசுதேவனே.
வேதங்கள் ஸ்ரீ மன் நாராயணனையே காரணமாகவும், குறிக்கோளாகவும் கொண்டவை.
தேவர்களோ ஸ்ரீ மன் நாராயணனின் திருமேனியில் தோன்றியவர்கள்.
வேள்விகள் அனைத்தும் அவரை மகிழ்விக்கவே செய்யப்படுகின்றன.
ஸ்வர்கம் முதலிய உலகங்களும் அவரிடமே கற்பிக்கப்படுகின்றன.
ப்ராணாயாமம் முதலான அஷ்டாங்க யோகங்களும் அவரை அடையும் ஸாதனங்களே.

தவங்கள் அனைத்தும் நம்மை அவரிடமே அழைத்துச் செல்கின்றன.
நாம் பெற்ற அறிவும் அவரை அறிய உதவும் காரணமாகும்.
அனைத்து ஸாதனைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும் ஸ்ரீ மன் நாராயணனிடமே அடைக்கலம்.
படைப்புத்தொழிலை நான் அவரது விருப்பப்படியே நடத்துகிறேன்.
என்று சொல்லி மேற்கொண்டு எவ்வாறு பஞ்ச பூதங்களைக் கொண்டு படைப்பு நடக்கிறது என்பதை விளக்கினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment