Monday, July 2, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 29 பாண்டவரின் ஸ்வர்காரோஹணம்


உலகிலுள்ள அசுரர்கள் அனைவரையும் பல யுத்தங்கள் மூலமாக அழித்து முக்தியளித்து பூபாரம் குறைத்த பெருமான், அதற்காகத் தன் உதவிக்கு இறங்கிய பரிவாரத்தின் பாரத்தை, முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் குறைத்தார்.
பின்னர் தன் உடலையும் மறைத்துவிட்டார். ஆம்
உடலைத்தான்.
ஜ்யோதிஸாகக் கிளம்பி ஸ்ரீ மத் பாகவதத்திற்குள் புகுந்துவிட்டான் என்று சொல்கிறது மாஹாத்மியம்.
புராண லக்ஷணத்திற்காக ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்கள், ஸ்வர்க நரகாதி வர்ணனைகள் எல்லாம் சொல்லப்பட்டாலும், பக்தர்களின் மேன்மையும், க்ருஷ்ணலீலைகளையுமே ப்ரதானமாய்ச் சொல்கிறது ஸ்ரீ மத் பாகவதம்.
ஆம், பக்தர்களின் சரித்திரத்திலும், அவனது லீலைகளை விளக்கும் கதைகளிலும், பாடல்களிலும் அவன் பூரண ஸாந்நித்யத்தோடு விளங்குகிறான். அதைப் படிப்பவர், பாடுபவர் நெஞ்சங்களில் குடி கொண்டு அவர்களோடு ப்ரத்யக்ஷமாக விளையாடவும் துவங்குகிறான்.
தர்மபுத்ரர் கலி பிறந்துவிட்டது, தானும் கிளம்பவேண்டிய காலம் வந்தது என்றுணர்ந்தார்.
தன் பேரனான பரீக்ஷித்திற்கு முடி சூட்டினார்.
கார்ஹபத்யம் என்ற அக்னியை ஒரு இஷ்டி யாகம் செய்து தன்மேல் ஏற்றிக்கொண்டார். தினமும் அக்னிஹோத்ரம் செய்து பாதுகாக்கபடும் மூவித அக்னிகளை துறவு பூணும்போது தன்னிடமே ஆவாஹனம் செய்துகொள்ளவேண்டும் என்பது விதி.
பின்னர் அனைத்தையும் துறந்து மனத்தை அடக்கி ப்ரும்மத்தை உணர்ந்தார்.
மரவுரி உடுத்து, பேச்சையடக்கி, உணவை விரித்து, தலை விரிகோலமாய், பார்ப்பவர்கள் பித்தென்றெண்ணும்படியாக ப்ரும்மத்தை த்யானம் செய்துகொண்டு அரண்மனையைவிட்டு வெளியேறி வடதிசை நோக்கிக் கிளம்பினார்.
மற்ற பாண்டவர்களும் மனத்தில் ஸ்ரீ கிருஷ்ணனையே தியானம் செய்து அண்ணனின் வழிச் சென்று நற்கதியை அடைந்தனர்.
த்ரௌபதியும் தன்னைத் தன் கணவர்கள் எதிர் பார்க்காமல் சென்றதை உணர்ந்து ஸ்ரீ க்ருஷ்ணத்யானம் செய்து அவரையே அடைந்தாள்.
இந்த பரம மங்கலமான சரித்திரத்தைச் சிரத்தையுடன் கேட்பவர்கள் பகவானிடம் பக்தி பெற்று மோக்ஷத்தை அடைவர்கள் என்று பலச்ருதி சொல்லப்பட்டிருக்கிறது.
வாழ்வாங்கு வாழ்ந்தபோதிலும், மரணத்தை எவ்வாறு அமைதியுடன் எதிர்கொள்ளவேண்டும் என்று தெளிவாக உரைக்கிறது இந்நிகழ்வு.
பரீக்ஷித் பெரியோர்கள் அறிவுரைப்படி செவ்வனே ஆட்சி செய்துவந்தான். அவன் பிறந்தபோது ஜோதிட வல்லுநர்கள் உரைத்த அத்தனை நற்குணங்களையும் கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். ஸ்வர்கபுரிபோல் பூமியை மாற்றினான்.
தன் மாமன் உத்தரனின் மகளான இராவதியை மணந்து ஜனமேஜயன் முதலான நான்கு புதல்வர்களைப் பெற்றான்.
ஒரு சமயம் திக் விஜயம் செல்லும்போது, ஓரிடத்தில் குரூரமாக நீசன் போலிருந்த ஒருவன், அரச வேஷம் தாங்கி ஒரு காளையையும், பசுவையும் காலால் உதைப்பது கண்டு அவனைப் பிடித்து தண்டித்தான்
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment