Friday, July 6, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 33 மஹான்களின் கருணை

வயதோ பதினாறு. மென்மையான பாதங்கள், மென்மையான கைகள், மென்மையான உடல், கன்னங்களும் மென்மையானவை. மனோஹரமான உருவம், அகன்ற கண்கள், வளைந்த மூக்கு, சமமான காதுகள், அழகான புருவங்கள், சங்குபோன்ற கழுத்து, பரந்துயர்ந்த திருமார்பு, நீர்ச்சுழல் போன்ற தொப்புள்கொடி, மூன்று மடிப்புடைய வயிறு, எண்டிசைகளே ஆடை, திகமபரர், பரந்து விரிந்த சுருள் சுருளான கேசம், நாராயணன் போல் காந்தி, நீலமேக வர்ணம், நீண்ட கைகள், அழகான புன்சிரிப்பு, பெண்கள் அனைவரும் விரும்பும் அழகு, தன் ஒளியை மறைத்து உலா வருபவர் ஸ்ரீ சுகர். அவரைக் கண்டதும், முனிவர்கள் அனைவரும் சட்டென்று ஆசனத்திலிருந்து எழுந்தனர்.
இவ்வாறு எதேர்ச்சையாக அதிதியாக வந்த ஸ்ரீ சுகரை பரீக்ஷித் வணங்கி வரவேற்றான்.
எதேர்ச்சையாக என்பதற்கு பகவத் க்ருபையால் என்று பொருள் சொல்லப்படுகிறது. எனவே, ஸ்ரீ சுகர் அங்கு வந்தது இறைவனின் ஸங்கல்பமே. தானாக யாரும் குரு என்று கிளம்பமுடியாது. குரு என்பவர் நம்மை ஆட்கொள்ள இறைவனால் அனுப்பப்படுபவர் ஆவார்.
அனைவரும் கொண்டாட அமர்ந்தார் குருதேவர்.
சான்றோர்களுக்கெல்லாம் சான்றோராக விளங்கும் ஸ்ரீ சுகர் நக்ஷத்திரங்களால் சூழப்பட்டு சந்திரன் ஒளிவீசுவதுபோல், மஹரிஷிகளாலும், ராஜரிஷிகளாலும், ப்ரும்மரிஷிகளாலும் சூழப்பட்டு, ஒளிப்பிழம்பாகக் காட்சியளித்தார்.
பரீக்ஷித் பேசினான்.
ப்ரும்மரிஷித் திலகமே! தங்கள் கருணையோடு இங்கு வந்து என்னைப் புனிதனாக்கினீர்கள். என் முன்னோர்களான பாண்டவர்களிடம் அன்பு கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணன் அவர்களது பேரனான என்னிடமும் அன்பு கொண்டார் போலும். இல்லையெனில் வெகுவிரைவில் மரணிக்கப்போகும் எனக்கு, எவராலும் அறியவொண்ணா நடையுடைய சித்தபுருஷரான தங்களின் தரிசனம் எப்படிக் கிடைக்கும்?
உங்களால்தான் மற்றவர்களுக்கு அனுஷ்டானங்களில் சித்தி ஏற்படுகிறது.
மரணத் தருவாயில் இருக்கும் ஒருவன் எதைக் கேட்கவேண்டும்? எத்சி ஜபம் செய்யவேண்டும்? என்ன செயல் செய்யவேண்டும்? எதை நினைக்க வேண்டும்? என்ன பஜனை செய்யவேண்டும்? எதையெல்லாம் செய்யக்கூடாது?
என்பதைக் கூறுங்கள்.
தங்களைப்போன்ற சான்றோர் இல்லறத்தாரின் வீட்டு வாயிலில் மாடு கறக்கும் நேரம் கூடத் தாமதிப்பதில்லையே.
ஸ்ரீ சுகர் மிகவும் இனிமையான குரலில் பதிலிறுக்கத் துவங்கினார்.
மஹான்களுக்குக் கருணை செய்வது என்பது ஒரு அவஸ்தை. அவர்களிடமிருந்து எப்போதும் கருணை வழிந்துகொண்டே இருக்கும். அதை அவர்கள் யார் மீதாவது பொழிந்துகொண்டே இருப்பார்கள். கருணை செய்யாமல் அவர்களால் ஒரு கணம்கூட இருக்க இயலாது.
பசுமாட்டை தினமும் ஒரு நேரத்தில் பால் கறப்பார்கள்.
ஒருநாள் கோனாருக்கு ஏதோ வேலை வந்ததால் வரமுடியாமல் போனால், மாடு பாலைக் கறந்துவிடவேண்டும் என்று தவிக்கும். வருவோர் போவோரை அழைத்துப் பார்க்கும். நேரம் ஆக ஆக யாரும் வரவில்லையெனில், தானே மடிமீது கால்களைப் போட்டு பீய்ச்சி அடித்துவிடும்
அதுபோலத்தான் மஹான்களும். கருணை அவர்களது இயல்பு. எதிரில் இருப்பவரின் தகுதி முக்கியமில்லை. உத்தவனும் கண்ணனின் கண்களிலிருந்து வழியும் கருணை வீணாகக் கூடாதென்று அவனைத் தனியே விடாமல் எப்போதும் அவனுடனேயே இருந்து அதை வாங்கிக் கொள்வதாய்ச் சொல்கிறான்.
ஸ்ரீ மத் பாகவதத்தை ஸ்ரீ சுகாசாரியார் தந்தையான வியாஸ பகவானிடமிருந்து பெற்றதிலிருந்து அவரது நிலைமை மாறிவிட்டது. எப்போதும் நிர்விகல்பமான ப்ரும்மத்தில் லயித்திருந்த அவர் மனத்தில் ப்ரேமை பொங்கி வழிய ஆரம்பித்தது.
தான் பெற்ற ஆனந்தத்தை யாருக்கேனும் பகிர்ந்து கொடுக்கத் தவித்துக் கொண்டிருந்தார். மனிதர்களை வெறுத்து ஏகாந்தத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர் ஸ்ரீ மத் பாகவதம் கிடைத்ததும் அதை உலகோர்க்குப் பகிர விழைந்து தகுந்த பாத்திரத்தைத் தேடினார்.
ஒவ்வொரு வீடாகச் சென்று வாயிலில் நின்றனர். கலியுகம் துவங்கிவிட்டிருந்ததால், சில வீடுகளில் சண்டைச் சத்தம் கேட்டது. சில வீடுகளில் மக்கள் ஏதோ விளையாட்டில் மூழ்கியிருந்தனர். சில வீடுகளில் பிக்ஷைக்கு வந்திருக்கிறார் என்று நினைத்து ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றனர்.
இவர்களுக்கெல்லாம் பாகவதம் கேட்கத் தகுதியில்லை என்று நினைத்தவர், ஒரு கடாக்ஷம் செய்து விட்டுப் போனார்
ஒருக்கால் அப்படி அவர் கண்களிலிருந்து விழுந்த ஒரு துளிக் கடாக்ஷம் நம்மீது பட்டிருக்குமோ என்னவோ. அதனால்தான் நமக்கும் ஸ்ரீ மத் பாகவதம் கிடைத்திருக்கிறது.
சீடன் குருவைத் தேடுவதுபோல், குருவும் தகுந்த சீடனை எதிர்நோக்குகிறார். அப்படி அவருக்குக் கிடைத்த பாகவத ரத்தினம்தான் பரீக்ஷித்.
முதல் ஸ்கந்தம் முற்றிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
படங்கள் :
1. ஸ்ரீ சுகர் பாகவதத்தைப் பொழியும் காட்சியின் வண்ணப்படம் (PC: Google)

2. சுகதால்:
ஸ்ரீ சுகர் பரீக்ஷித்திற்கு ஸ்ரீ மத் பாகவதம் சொன்ன ஆலமரம்.
5000 வருடங்கள் பழமை வாய்ந்த இம்மரத்தடியில் ஏராளமானோர் வந்து பாகவத பாராயணம் செய்கின்றனர். மரத்தில் ஏராளமான கிளிகள் உண்டு. மரத்தின் இலைகளைப் பறிக்க அனுமதி இல்லை. தானாகவே உதிர்ந்து விழும் இலைகளைப் ப்ரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்
3. சுகதாலில் பாயும் கங்கை நதி

No comments:

Post a Comment