Thursday, July 12, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 39 எங்கும் நிறைந்த இறை

ஸூதர் சொன்னார்.
ஸ்ரீ சுகாசார்யாரின் விளக்கங்களைக் கேட்ட பரிக்ஷித் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மனத்தைப் பறிகொடுத்தான். பற்றுக்கள் அனைத்தையும் துறந்தான். பிறகு, நீங்கள்(ரிஷிகள்) என்னிடம் கேட்ட கேள்விகளையே அவனும் சுகரிடம் கேட்டான்.

மாசற்றவரே! தாங்கள் அனைத்துமறிந்தவர். தங்களது வாக்கினால் என் மன இருள் அகல்கிறது.
ப்ரும்மா எவ்விதம் இவ்வுலகைப் படைக்கிறார்?
எவ்விதம் காப்பாற்றுகிறார்?
எவ்விதம் அழிக்கிறார்?
கற்பனைக் கெட்டாத சக்திகளை உடைய பகவான் எந்தெந்த சக்திகளைக் கொண்டு மணல்வீடு கட்டி விளையாடுவதுபோல் தன்னைத்தானே பல உருவங்களாக்கிக் கொண்டு பலவித லீலைகளைச் செய்கிறார்?
பகவானின் லீலைகள் ஊகித்தறிய முடியாதவையாக விநோதமாக உள்ளன.
பலவித ரூபங்களை ஏற்கும் பகவான் எல்லாச் செயல்களையும் முறைப்படி செய்கிறார். எல்லா சக்திகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்கிறாரா? அல்லது ஒவ்வொன்றாகவா?

இவ்வாறு வேண்டப்பட்ட ஸ்ரீ சுகர், பகவானை தியானம் செய்து கூறலானார்.
புருஷோத்தமனான பகவான், ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களையும் ஏற்று, ப்ரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று திருவுருவங்களிலும் விளங்குகிறார். எல்லா உயிரினங்களிலும் அந்தர்யாமியாகக் காட்சியளிக்கிறார்.
ஸாதுக்களின் துன்பத்தைத் துடைத்துப் பாவங்களைப் போக்கி பக்தியை அளிக்கிறார்.
தீயோரை அடக்கி, நற்கதி தருபவர். துறவிகளுக்கு ஆத்மானுபவம் அளிக்கிறார். அசையும் அசையாப் பொடுள்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டவர். தானும் அவற்றுள் விளங்குபவர்.
பக்ஷபாதம் அற்றவர்.
பக்தர்களைப் பரிபாலிக்கிறார். பிடிவாதத்துடன் சாதனை செய்யும் வேஷதாரிகளால் அறிய முடியாதவர்.
அவருக்கு ஒப்பானவரே இல்லை எனும்போது மேலானவர் எப்படி இருக்கமுடியும்?
ஒத்தார் மிக்கார் இலையாய மாமாயா என்கிறார் ஆழ்வார்.
அவரைப் பற்றிப் பேசினாலும், நினைத்தாலும், கண்டாலும், வணங்கினாலும், பூஜை செய்தாலும் ஜீவராசிகளின் பாவங்கள் உடனே அழிகின்றன.
தவம் செய்பவர்கள், புகழ் படைத்தவர்கள், நல்மனம் படைத்தவர்கள், மந்திரமும், அதன் பொருளும் அறிந்து கர்மானுஷ்டானம் செய்பவர்கள், ஒழுக்கம் தவறாத பக்தர்கள் யாராகினும், தங்களது தவம், தானம் முதலியவற்றின் பலனை பகவத் அர்ப்பணம் செய்தாலொழிய அவற்றின் பயனைப் பெறுவதில்லை.
பல்வேறு பிரிவைச் சேர்ந்த மாபாவிகளாயினும் அவர்கள் இறை அடியாரை அண்டி பாவங்களைத் தொலைத்து தூய்மை பெறுகிறார்கள்.
பகவான் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிப்பவர்.
வேள்விகள் அனைத்திற்கும் தலைவர். அவற்றை அனுபவித்து பலனளிப்பவர். அவரே யதுகுலத்தில் அவதரித்தார்.
பகவானே ஸாதுஜனங்களின் ஒரே பற்றுக்கோடாவார்.

ப்ரம்ம தேவருக்கு படைப்புத் திறனைத் தூண்டுவதற்காக ஞானத்தின் தலைவியான ஸரஸ்வதி தேவியை பகவான் ஏவினார்.
அவள், ப்ரும்மாவின் திரு முகத்திலிருந்து, சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் ஆகிய ஆறு அங்கங்களுடன் வேதரூபமாக வெளித் தோன்றினாள்.
இறைவனே ஐம்புலன்களின் சேர்க்கையால் இவ்வுடலை ஆக்கித் தந்து அதில் ஜீவாத்மாவாக குடி புகுகிறார். அதனாலேயே அவன் புருஷன் என்றழைக்கப்படுகிறான்.
ஐந்து ஞானேந்திரியங்கள் (அறிவுப்புலன்கள்),
ஐந்து கர்மேந்திரியங்கள் (செயற்புலன்கள்),
ஐந்து ப்ராணன்கள், மனம் ஆகிய பதினாறு சாதனங்களைக்கொண்டு குணங்களை வெளிப்படுத்துகிறார்.
இப்படிப்பட்ட பகவானுக்கு நமஸ்காரம். அவர் அனைவர்க்கும் நலம் புரியட்டும்.
ப்ரும்மா இது விஷயமாக பகவானிடம் கேட்டறிந்ததை தன் மகனான நாரதர்க்குச் சொன்னார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment