Thursday, July 5, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம்- 32 தேடி வந்த ஸத்குரு

பகவன் நாமம் சொல்பவர்களைக் கலி ஒன்றும் செய்வதில்லை. மிகமிகச் சுலபமான நாம ஸாதனத்தை ஆதரிப்பதாலேயே கலி ஸாது என்று மஹாத்மாக்கள் கூறுகிறார்கள்.
அன்பினால் அடக்கப்பட்டவர்கள் அன்பை மீறமாட்டார்
பராக்ரமத்தால் அடக்கப்பட்டவரோ மறுபடி வீழ்த்த சமயம் நோக்குவார்.
சிறுவன் ச்ருங்கி அரசனுக்கு சாபமிட்டதை ஞானத்ருஷ்டியில் உணர்ந்த ஸமீக மஹரிஷி மிகவும் வருந்தினார்.
அவனைக் கடிந்துகொண்டார்.
மகனே! அரசன் என்ற பெயரில் ஸ்ரீ மன் நாராயணனே இவ்வுலகைக் காக்கிறான். அரசன் இல்லாத நாட்டில் திருடர்கள் மலிந்து மக்கள் ஆட்டுமந்தைபோல் அழிக்கப்படுவார்கள். அரசன் இல்லாவிடில் நாட்டில் குழப்பம் ஏற்படும். அனைவரும் தத்தளிப்பார்கள். கலவரங்கள் மலியும். அத்தனை பாவமும் நம்மை வந்து சேரும். மக்களிடம் ஒழுக்கக் கட்டுப்பாடு குறையும்.
பரீக்ஷித் தர்மவான். மக்களைக் காப்பவன். பக்தன். அரசர்களுள் ரிஷி போன்றவன். பசியாலும் தாகத்தாலும் வாடியிருந்த அவனை நாம் அன்போடு கவனித்திருக்கவேண்டும். அவனைச் சபித்தல் தவறு.
இறைவா! முதிர்ச்சியற்ற இந்த பாலகன் குற்றமற்ற அரசனுக்குச் செய்த தீங்கை கன்னி த் து விடுங்கள். உண்மையான பக்தர்கள், தங்களைத் துன்புறுத்துபவருக்குத் தீங்கிழைக்கமாட்டார்கள்.
இவ்வாறு வருந்திய முனிவர் அரசனின் தவறை ஒரு பொருட்டாகக் கருதவே இல்லை
பிறகு தன் வேறு இரண்டு சீடர்களை அழைத்து, இந்த சாபத்தை அரசனுக்குத் தெரியப்படுத்திவிட்டு வாருங்கள். அவன் ஏதாவது பரிகாரம் செய்துகொள்ளட்டும்.
என்று சொல்லி அனுப்பினார்.
ஏதோ ஒரு வேகத்தில் பசியாலும் தாகத்தாலும் ஆட்பட்டுத் தவறு செய்துவிட்ட பரீக்ஷித், அரண்மனைக்குச் சென்றதும் மனம் வருந்தத் துவங்கினான்.
எப்பேர்ப்பட்ட தவறிழைத்தேன். முனிவரை அவமதித்தேனே. இதற்கு எனக்கு சரியான தண்டனை கிடைத்தால் ஒழிய என் மனம் அமைதியடையாது. உயர்ந்த பரம்பரையில் வந்துவிட்டு இப்படி ஒரு தவறு செய்தேன். முனிவர்கள், தெய்வம், முன்னோர்கள் அனைவரும் பழிக்கும் இழிசெயல் செய்த எனக்கு ஏதாவது பெரிய தண்டனை அவசியம் வேண்டும். அதுதான் ப்ராயசித்தம்
என்று புலம்பினான்.
முனிவரின் சீடர்கள் வந்து ச்ருங்கியின் சாபத்தைச் சொன்னார்கள்.
சபையோர் அனைவரும் துடித்துப்போனார்கள்.
ஒருவர் ம்ருத்யுஞ்ஜய யாகம் செய்யலாம் என்றார்.
ஒருவர் பாம்புகள் வராதபடி கருடனுக்கு ப்ரீதி செய்யலாம் என்றார்கள். சபையில் ஒவ்வொருவரும் ஆளுக்கொன்று சொன்னார்கள்.
பரீக்ஷித் 
போதும் என்ற ஒற்றைச்சொல்லால் அனைவரையும் அடக்கினான்.
இந்த சாபத்திற்கு நான் தகுதியானவன்தான். தண்டனையை ஏற்கிறேன். எனக்கு ஏழுநாள்களில் மரணம். மரணம் வருவதற்குள் நான் என்னென்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வேன்.
என்று சொல்லி, தன் மகன் ஜனமேயஜயனுக்கு அக்கணமே அரசனாக பட்டாபிஷேகம் செய்வித்தான்.
பின்னர் அனைத்தையும் துறந்து மரவுரி உடுத்து, பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் சேவையே சிறந்தது என்று கருதி, பகவானிடமே மனத்தை இருத்தி கங்கைக் கரையை அடைந்தான்
அங்கு அமர்ந்து ப்ராயோபவேசம் அதாவது வடக்கிருத்தலை மேற்கொண்டான்.
வடக்கிருத்தல் என்பது வடக்கு நோக்கி அமர்ந்து உயிர் பிரியும் வரை உண்ணாநோன்பிருத்தல். பரிக்ஷித் ஸ்ரீ க்ருஷ்ணனையே த்யானம் செய்யத் துவங்கினான்.
அவனது உயர்ந்த செயலைக் கண்ட மேலோர் அனைவரும் அங்கு கூடினர்.
ஸாதுக்களே இவ்வுலகைத் தூய்மை செய்கின்றனர். தீர்த்த யாத்திரை என்ற பெயரில் உண்மையில் அவர்கள் நதிகளையும் தீர்த்தங்களை யும் புனிதமாக்குகின்றனர்.
அதனாலேயே எவ்வளவு பேர் வந்து ஸ்நானம் செய்து தங்கள் பாவங்களைப் போக்கிகொண்டாலும் புண்யநதிகள் ஸாந்நித்யத்தை இழக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கங்கைக் கரையில் பரீக்ஷித்தைக் காண, அத்ரி, வசிஷ்டர், ச்யவனர், சரத்வான், அரிஷ்டநேமி, ப்ருகு, ஆங்கிரஸ், பராசரர், விஸ்வாமித்ரர், பரசுராமர், உதத்யர், இந்த்ரப்ரதமர், இத்மவாஹர், மேதாதிதி, தேவலர், ஆர்ஷ்டிஷேணர், பரத்வாஜர், கௌதமர், பிப்பலாதர், மைத்ரேயர், ஔர்வர், கவஷர், அகஸ்தியர், வியாஸர், நாரதர், தேவரிஷிகள், ப்ரும்மரிஷிகள், அருணன் முதலிய இன்னும் பல ரிஷிகளும் வந்து சேர்ந்தனர்.
பரீக்ஷித் அனைவரையும் வணங்கினான்.
சான்றோர்களான தங்களைக் காண்பதே பெரும் பாக்யம். என்னைப் போன்று நிந்திக்கத்தக்க செயலைச் செய்த அரசர்கள், தங்கள் பாத தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்ளவும் அருகதையற்றவர்கள்.
கொடிய செயல் செய்த என்னை தக்ஷகன் வந்து நன்றாகக் கடிக்கட்டும். நாங்கள் உங்களிடம் வணக்கமுடையவன் என்று நீங்கள் தெரிந்து கொண்டாலே போதும். நான் மன்னிப்பு வேண்டவில்லை. தண்டனைக்கே தகுதியானவன். தக்ஷகன் வரும் வரையில் நீங்கள் எனக்கு பகவானின் கதைகளைக் கூறுங்கள்.
உங்கள் அனைவருக்கும் என் நமஸ்காரங்கள்.
அவனது உயர்ந்த குணத்தைக் கண்ட மஹரிஷிகள் மகிழ்ந்து அவனை ஆசீர்வதித்தனர்.
அரசாட்சியையே துறந்து நீ இப்படி வந்தது ஒன்றும் வியப்பல்ல. உன் முன்னோரின் குலப்பெயரைக் காப்பாற்றிவிட்டாய். ஸாதுக்களையே தெய்வமாய் வணங்கும் பரம்பரையில் வந்த நீ வீடுபேறடையும் வரை நாங்கள் அனைவரும் உன்னுடனேயே இருப்போம்.
மீண்டும் மகிழ்ந்து நமஸ்காரம் செய்த பரீக்ஷித், கேட்டான்
ஒருவன் மரணத் தறுவாயில் செய்யவேண்டியது என்ன?
ஒவ்வொரு முனிவரும் ஒரு வழியை விவாதம் செய்யத் துவங்கினர்.
அப்போது, மனம்போனபடி உலாவுபவரும், திகம்பரரும், ப்ரும்மானந்தத்திலேயே எப்போதும் திளைப்பவருமான ஸ்ரீ சுக மஹரிஷி அங்கு வந்தார்.
ஒருவன் உண்மையாக பக்தி செய்து இறைவனை அடைய விரும்புவானாயின் அவனைத் தேடி ஒரு உத்தம குரு தானே வந்து சேர்வார் என்பது ஸத்யமாயிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment