Wednesday, July 18, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 45 பரிக்ஷித்தின் கேள்விகள்


ப்ரும்மா நாரதரிடம் மேலும் சொன்னார்
பகவானது உண்மை நிலை எப்போதும் அழிவற்றது. அமைதியானது.
இன்பமே வடிவெடுத்தது. அறிவொளியாலானது. இரண்டற்றது.
பயமற்றது.
சோகமற்றது.
மாயை எனும் மலமற்றது.
அதனால் புலன் வழிச் செல்லுதல் இல்லை.
ஸத், அஸத் இரண்டையும் கடந்தது. உபநிடதங்களாலும் விளக்க இயலாதது.
ஏதோ ஒரு பொருளை உதாரணமாக வைத்துக் கூற முற்பட்டாலும், சொல்ல இயலாதது.
செயல், செய்பவன், காரணம், மூன்றும் இன்னும் பல கர்மாக்களும் கூட அவரிடம் அழைத்துச் செல்ல முடியாது.
மாயை அவரைக் கண்டாலே நாணம் கொண்டு ஓடி ஒளிகிறது.
பொறி புலன்களை அடக்கிய பெரியோர் மனத்தை இறைவனிடம் ஒருநிலைப்படுத்தி அவரை அடைந்துவிடுகிறார்கள். வேறு தனியான முயற்சி அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. வருணனுக்கு நீர் வேண்டுமெனில் கடப்பாரையை எடுத்து பூமியைத் தோண்டுவானா என்ன? அதுபோல்தான்.
அனைத்துச் செயல்களுக்கும் பலன் தருபவன் இறைவனே. மனிதன் தன் தாதுக்களின்(பஞ்ச பூதங்களின்) சக்தியை இழந்து இறக்கும்போது, உடற்கூட்டினுள் இருக்கும் இறைவன் அழிவதில்லை. ஆகாயத்திற்கு அழிவுண்டா? அதுபோல.
தன் இச்சையினாலேயே ப்ரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் பகவான் அவற்றில் ஒட்டாது தனித்து நிற்கிறான். அந்த பகவானான ஸ்ரீ ஹரியின் மகிமைகளை சுருக்கமாகக் கூறினேன்.
இந்த பாகவதத்தை எனக்கு பகவான் உபதேசித்தார். நான் சுருக்கமாகக் கூறிய பகவானின் மகிமைகளை, உலகோர்க்கு அன்பேவ்வடிவான பக்தி உண்டாகும்படி நீ விரிவாக எடுத்துக் கூறுவாய்.
பகவானின் திருவிளையாடல்களை விவரித்துக் கூறுபவரும், அதை பக்தியுடன் கேட்பவரும் எக்காலத்திலும் மாயைக்கு ஆட்படுவதில்லை
என்றார்.
எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட பரிக்ஷித் நிறைய சந்தேகங்களைக் கேட்டான்.
மஹரிஷியே, நாரதர் தன்னிடம் வருபவர் அனைவர்க்கும் இறைவனின் அருளையும் தரிசனத்தையும் பெற்றுத்தருபவராயிற்றே.
பகவானின் மகிமைகளை அவர் யார்யாருக்கு எவ்வெவ்விதமாக உபதேசித்தார்?
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மனத்தைச் செலுத்தி இவ்வூனுடலை உதறித் தள்ளும் வழியைக் கூறுங்கள்.
பகவானின் பெருமையைக் கேட்பவர்கள் இதயத்தில் அவன் குடியேறுகிறான். அவர்களது உள்ள மலங்கள் அழிகின்றன.
ரிஷியே ஜீவாத்மாவிற்கு பஞ்சபூதங்களோடு தொடர்பில்லை. ஆனால், பஞ்ச பூதங்களாலான இவ்வுடலோடு தொடர்புள்ளதே. அது இயற்கையா? வேறு காரணம் உண்டா?
மனிதனின் அங்கங்களைப்போல் விராட் ஸ்வரூபனின் அங்கங்களும் எல்லைக்குட்பட்டதா?
பகவான் எப்படி மாயையை விட்டு ஆனால் அனைவருள்ளும் அந்தர்யாமியாய் விளங்குகிறார்?
மஹாப்ரளயம், அவாந்திர ப்ரளயம், இவற்றின் கால அளவென்ன? முக்காலங்களின் நிகழ்வு எவ்வாறு கணிக்கப்படுகிறது? மனிதர் மற்றும் தேவர்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
வினாடி முதல் வருடம் வரை எவ்வாறு அறியப்படுகிறது?
தங்கள் கர்மங்களால் ஜீவர்கள் அடையும் கதிகள் எவ்வளவு? அவை என்னென்ன? எவ்வாறு அடையப்படுகின்றன?
தேவன், மானிடன், அரக்கன் முதலிய பிறவிகள் ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் பரிணாமத்தால் ஏற்படுகின்றன. அத்தகைய பிறவிகளை அடைய ஜீவன்கள் என்னென்ன கர்மாக்கள் செய்யவேண்டும்?
பூமி, பாதாளம், திசைகள், ஆகாயம், கிரகங்கள், நக்ஷத்ரங்கள், மலைகள், கடல்கள், நதிகள், தீவுகள் ஆகியவையும், அவற்றில் வாழும் உயிரினங்களும் எவ்வாறு தோன்றின?
ப்ரும்மாண்டத்தின் உள், வெளி அளவு எவ்வளவு?
சான்றோர்களின் நடத்தை என்ன? வர்ணாஸ்ரமங்களின் நெறிமுறை என்ன?
யுகங்கள் எத்தனை? அவற்றின் கால அளவுகள் என்ன? அவற்றின் கால நெறிமுறைகள் என்னென்ன? ஒவ்வொரு யுகத்திலும் பகவான் எவ்வாறு திருத்தோற்றங்கள் கொள்கிறார்?
மனிதனின் பொது தர்மம், விசேஷ தர்மம், தொழில் தர்மம், ஆகியவற்றைக் கூறுங்கள் மன்னர்களின் தர்மம் என்ன?
துன்பப்படுவோரின் தர்மம் என்ன?
ப்ரக்ருதி தத்துவங்கள் எத்தனை? அவற்றின் உண்மைத் தோற்றம் என்ன? இறைவனை வழிபடும் முறை யாது? அஷ்டாங்கயோகத்தின் வழிமுறை என்ன?
அஷ்ட சித்திகள் எவ்வாறு பெறப்படுகின்றன? அவர்கள் முக்தியடையும் மார்கம் யாது? அவர்களது உடல் எவ்வாறு அழியும்?
இதிஹாஸ புராணங்களின் இவற்றின் உள்கருத்து என்ன?
உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது? கர்மங்களும், நியமங்களும், அவற்றின் பலன்களும் ஒன்றுக்கொன்று எவ்வாறு முரண்படாமல் விளங்குகின்றன?
நாஸ்திகன் எவ்வாறு உருவாகிறான்?
ப்ரளயத்தில் ப்ரக்ருதியோடு லயமாகும் ஜீவன் மீண்டும் எப்படித் தோன்றுகிறான்? ஜீவனின் தளையும், விடுதலையும் எவ்வாறு? ஆத்மா எப்படித் தனித்து நிற்கிறது?
அனைத்துமறிந்த தங்களிடம் என் ஐயங்கள் அனைத்தையும் கேட்டுவிட்டேன். எனக்கு தயை கூர்ந்து விளக்கவேண்டும். எனக்கு ஏழுநாட்களுக்கு மரணம் இல்லை. தங்களின் வாக்காகிய அமுதத்தைப் பருகுவதால் பசி, தாகம் முதலியவையும் இல்லை.
இவற்றைக் கேட்டதும் ஸ்ரீ சுகர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். அழகிய புன்முறுவலுடன் பதில் கூறத் துவங்கினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment