Saturday, July 14, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 41 அண்டத்தின் தோற்றம்

ப்ரம்மா நாரதரிடம் கூறலானார்.
இறைவன் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரது மாயை ரஜோ குணத்தை ஏற்று படைத்தலையும்,
ஸத்வ குணம் கொண்டு காத்தலையும்,
தமோ குணம் கொண்டு அழித்தலையும் செய்கிறது.
ப்ரளய காலத்தில் ஜீவன்களும் அவற்றின் கர்மங்களும் சுபாவமும் பகவானிடமே லயித்திருந்தன. படைக்க வேண்டிய காலம் வரும்போது, இறைவன் தன்னையே பல்வேறு ரூபங்களில் தோற்றுவிக்க எண்ணி தன் ஜீவன்களின் கர்மங்கள் மற்றும் ஸ்வபாவங்களைத் தானே ஏற்றுக்கொண்டார்.

ரஜோ குணம், ஸத்வ குணம் ஆகியவற்றால் பெருகிய மஹத் தத்வம் மாறுதலடைந்து மஹாபூதங்கள், பொறிகள், அவற்றின் அபிமான தேவதைகள் மற்றும் தமோ குணத்தையே மிகுதியாய்க் கொண்ட அஹங்கார தத்வம் ஆகியவற்றைத் தோற்றுவித்தது.

அஹங்கார தத்வம் மேலும் மாறுதலையடைந்து மஹாபூதங்களின் சக்தியான வைகாரிகம், தைஜஸம், தாமசம் ஆகியவை வெளிப்பட்டன. இவை முறையே அறிவு, செயல், பொருள் எனப்படும்.

தாமஸ அஹங்காரமே ஐம்பெரும் பூதங்களின் தோற்றத்திற்குக் காரணம்.
இதிலிருந்து ஆகாயம் தோன்றியது. இதன் தன்மாத்திரையும் குணமும் ஒலி ஆகும்.
இதன் வழியே பார்ப்பவனையும் பார்க்கப்படும் பொருளையும் அறியலாம்.

ஆகாயத்திலிருந்து வாயு வெளிப்பட்டது. அது ஒலியையும், தொடு உணர்வையும் குணங்களாகக் கொண்டது. இதுவே உயிர் வாழக் காரணமான ப்ராணனாகவும், பொறிகளின் வலிமைக்குக் காரணமான ஓஜஸ் திறனாகவும், மனவலிமைக்குக் காரணமான ஸஹஸ்(உற்சாகம்) திறனாகவும், உடல் வலிமைக்குக் காரணமான பலமாகவும் ஆகிறது.

காலம், கர்மம், சுபாவம் ஆகியவற்றால் தூண்டப்பட்ட வாயுவிலிருந்து தேஜஸ்(அக்னி) தோன்றியது. வாயுவிலிருந்து தோன்றியதால், ஒலி, தொடுவுணர்ச்சி ஆகிய குணங்களும் உண்டு.

தேஜஸிலிருந்து ( ஒளி) நீர் தோன்றியது. இதன் குணம் ரஸம் (சுவை) ஆகும். இதற்கு ஒலி, உருவம், தொடுவுணர்ச்சி ஆகிய குணங்களும் உண்டு.

நீரிலிருந்து மண் தோன்றியது. இதன் குணம் மணம். நீரிலிருந்து தோன்றியதால் ஒலி, தொடுவுணர்ச்சி, உருவம், சுவை ஆகிய குணங்களும் உண்டு.

மண் ஒன்றிலேயே ஐங்குணங்களும் உள்ளன. இவையனைத்தும் தாமஸ அஹங்காரத்திலிருந்து வந்தவை.
ஸாத்வீக அஹங்காரத்திலிருந்து மனமும் அதன் தேவதையான சந்திரனும் வந்தார்கள். மேலும், செயற்புலன்கள் ஐந்து மற்றும் அறிவுப்புலன்கள் ஐந்தின் தேவதைகள் அனைத்தும் தோன்றின.

ஒலிக்கு எண்திசைக் காவலர்களும், தொடுவுணர்ச்சிக்கு வாயுதேவனும், ஒளிக்கு சூரியனும், சுவைத் திறனுக்கு வருணனும், (மணம்) கந்த சக்திக்கு அசுவினி தேவர்களும், வாக் சக்திக்கு அக்னியும், கைகளுக்கு இந்திரனும், கால்களுக்கு உபேந்திரனும், ஜீரண சக்திக்கு மித்திரனும், உபஸ்தம் என்ற ஜனன சக்திக்கு ப்ரஜாபதியும் பத்து தேவதைகளாவார்கள்.

ராஜஸ அலங்காரத்திலிருந்து காது, தோல், மூக்கு, கண், நாக்கு ஆகிய ஐந்து அறிவுப்புலன்களும், சொல்(வாக்கு), கைகள், பாதங்கள், விஸர்ஜன இந்திரியம்(பாயு), ஜனனேந்திரியம் (உபஸ்தம்) ஆகிய ஐந்து செயற்புலன்களும் தோன்றின.
அறிவுச் சக்தியான புத்தியும், செயல் திறனான ப்ராணனும் ராஜஸ அஹங்காரத்தின் செயல்கள்.
இவையனைத்தும் ஒன்றோடொன்று இணையாததால், அவைகள் தங்கி இன்பம் அனுபவிக்க கருவியான உடலை உண்டாக்க முடியவில்லை.
இறைவன் இவைகளைத் தூண்டியதும் அவை ஒன்றிணைந்து இந்த ப்ரும்மாண்டத்தையும், பிண்டத்தையும்(உடல்) தோற்றுவித்தன.
உயிரற்ற ப்ரும்மாண்டம் பல்லாயிரம் ஆண்டுகள் நீரிலேயே கிடந்தது. அனைத்திற்கும் ஜீவனை அளிக்கும் இறைவன் காலம், கர்மம், சுபாவம் இவற்றை ஏற்று அதை ஜீவனுள்ளதாக்கினார்.
அந்த அண்டத்தைப் பிளந்துகொண்டு விராட்புருஷனாகத் தோன்றினார்.
ப்ரும்மஸ்வரூபத்தை அறிந்தவர்கள் விராட்புருஷனின் தொடைகளுக்குக் கீழாக அதலம் முதலிய கீழ் ஏழு லோகங்களையும், தொடைகளுக்கு மேல், பூமி முதலான மேல் ஏழு லோகங்களையும் உணர்கிறார்கள்.
முன்பே விளக்கப்பட்ட விராட்புருஷரின் ஸ்வரூபத்தை இங்கு மீண்டும் வர்ணிக்கிறார் ப்ரும்மா.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment