Tuesday, January 29, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 201 சித்ரகேது -1

பரீக்ஷித் கேட்டான்
ப்ரும்மரிஷியே.. வ்ருத்ராசுரன் இயற்கையிலேயே ரஜோ குணமும், தமோகுணமும் நிறைந்த அசுரன். அவனுக்கெப்படி பக்தி உண்டாயிற்று?
ஸத்வகுணமுள்ள தேவர்களுக்கே இத்தகைய பக்தி மிகவும் கடினம்.

இவ்வுலக ஜீவராசிகளின் எண்ணிக்கை பூமியிலுள்ள புழுதியின் எண்ணிக்கை போன்றது. அவற்றுள் சில‌மனிதர்களே தங்கள் ஆத்மநலனுக்காக பாடுபடுகின்றனர். அவர்களிலும்‌ யாரோ ஒருவனுக்குத்தான் கர்மத்தளையிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
மீதி அனைவரும் சிற்றின்பங்களில் உழல்பவர்களே.

இந்த வ்ருத்ராசுரனோ உலகங்கள் அனைத்தையும் கொடூரமாக வாட்டி எடுத்தவன்? ஆனால், போர்முனையில் பகவானிடம் மனத்தை நிலைப்படுத்தினான். இந்திரனே அவனை மெச்சுகிறான். இதெப்படி சாத்தியமாயிற்று?

மிகவும் பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்ட பரிக்ஷித்தை சுகர் மிகவும் பாராட்டினார்.

பின்னர், வ்ருத்ராசுரனின் பூர்வகதையைக் கூறலானார்.
பரீக்ஷித் இக்கதையை நான் என் தந்தையான வியாஸரிடமிருந்தும், தேவரிஷி நாரதரிடமிருந்தும், பின்னர் தேவல முனிவரிடமிருந்தும் கேட்டறிந்தேன். கவனமாகக் கேள் என்றார்.

இது ஒரு பழங்கதை. சூரசேன தேசத்தின் அரசன் சித்ரகேது. அவன் மிகவும் நல்லாட்சி புரிந்துவந்தான்.
அவனுக்கு ஏராளமான மனைவியர் இருந்தும் ஒரு குழந்தைகூட இல்லை. எந்தக் குறையுமற்ற அரசனுக்கு, மிக அழகான மனைவிகள், மிகுந்த செல்வம், காலடிக்கீழுள்ள உலகம் எதுவும் மகிழ்ச்சியைத் தரவில்லை.

பிள்ளைப்பேறின்றி மிகவும் வருந்தினான் அவன். அவ்வமயம் பகவான் ஆங்கீரஸ் தற்செயலாக அவனது அரண்மனைக்கு வந்தார். அவர் வரமும் அளிப்பார். சாபமும் அளிப்பார்.

முனிவரை மிகவும் மரியாதையுடன் முறைப்படி வரவேற்று ஆசனமளித்தான் சித்ரகேது.
மன்னா, உன் ஆட்சியில் அனைவரும் நலமா? எல்லோரும் கீழ்ப்படிகிறார்களா? தர்மம் செழிக்கிறதா? நீ மனக்கவலையோடு இருக்கிறாய் என்று நினைக்கிறேனே. உன் மனவருத்தத்தின் காரணம் யாது?
என்று வினவினார்.
மஹான்களிடம் வாயைத் திறந்து எதுவும் சொல்லவேண்டியதே இல்லை. சேயைக் காணும் தாய்போல் ஜீவன்களைக் கண்டதுமே அவர்களின் கஷ்டத்தை உணர்ந்துவிடுவர் ஸாதுக்கள்.
முனிவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், அவன் வாயிலாக விண்ணப்பிக்கட்டும் என்று கேட்டார்.

சித்ரகேது சொன்னான்
ரிஷியே! தவம், ஞானம் ஆகியவற்றால் சிறந்து விளங்கும் தங்களுக்கு உலகியல் பற்றுக்களால் தவிக்கும் என் உள்ளும் புறமும் தெரியாதா? இருப்பினும் தாங்கள் கேட்பதால் என் கவலையைத் தங்கள் திருவடிகளில் ஸமர்ப்பிக்கிறேன்.

பசியோடு இருப்பவனுக்கு நல்ல ஆடை அணிகலனால் என்ன பயன்? ஒரு பிடி சோறுதான் அவனுக்கு நிம்மதி தரும்.‌அதுபோல் எல்லா செல்வங்களும் இருந்தும், மக்கட்பேறின்றித் தவிக்கிறேன். என் கவலையைப் போக்கி அருள் செய்யுங்கள்.
என்றான்.

அரசன் இவ்வாறு கேட்டதும், ப்ரும்மதேவரின் மகனான ஆங்கீரஸ முனி, த்வஷ்டாவுக்கான கஞ்சியைத் தானே சமைத்து அந்த தேவதையை அரசனின் பொருட்டு ஆராதித்தார். வேள்வியில் எஞ்சிய அவியை, சித்ரகேதுவின் பட்டத்தரசிகளில் மூத்தவளும், குணவதியுமான க்ருதத்யுதிக்குக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.

அரசே! உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் உனக்கு மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பான் என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவியுணவை உண்ட க்ருதத்யுதி கருவுற்றாள். ஒரு நல்ல நாளில் அரசனும் நாட்டு மக்களும் மகிழும்படி ஒரு அழகான குழந்தையைப் பெற்றாள்.

சித்ரகேதுவின் மகிழ்வுக்கு எல்லையே இல்லை. அவன் கைம்மாறு வேண்டா மேகம் போல் அனைவர்க்கும் அவரவர் விரும்பிய பொருள்களை வாரி வழங்கினான்.

வறியவனுக்குத் தான் வருந்தி உழைத்த பொருள்மேல் உண்டாகும் பேராசைபோல் சித்ரகேதுவிற்கு மகன் மீதான பாசம் பெருகிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment