Saturday, January 5, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 190 அதிதியின் வம்சம்

பரீக்ஷித்! அதிதியின் வயிற்றில்தான் பகவான் ஸ்ரீ மன் நாராயணன் வாமன மூர்த்தியாகத் திருவவதாரம் செய்தார்.

அதிதியின் புதல்வர்கள் விவஸ்வான், அர்யமா, பூஷா, த்வஷ்டா, ஸவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்ரன், இந்திரன், மற்றும் வாமன மூர்த்தி. இவர்கள் பன்னிரண்டு ஆதித்யர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

விவஸ்வான் எனப்படும் சூரியனின் மனைவி ஸம்க்ஞா. அவள் வயிற்றில் சிராத்ததேவனான வைவஸ்வத மனுவும், யமன், யமி ஆகிய இரட்டையரும் பிறந்தனர். பின்னர் ஸம்க்ஞாதேவி பெண்குதிரை வடிவம்‌ எடுத்து சூரியன் மூலம் அச்வினி குமாரர்களைப் பெற்றாள்.

விவஸ்வானின் இன்னொரு மனைவி சாயா. இவளது மக்கள் சனைச்சரன், ஸாவர்ணீ ஆகியவர்களும், தபதி என்ற பெண்ணும். ஸாவர்ணீ என்பவன் மன்வந்தராதிபதியானான். தபதி ஸம்வரணன் என்பவனை மணந்தாள்.

அர்யமாவின் மனைவி மாத்ருகை. அவர்களது புதல்வன் சர்ஷணி. இவர்களுக்கு செய்யத் தகுந்த தகாத செயல்கள்‌ பற்றிய ஞானம் இருந்ததால் ப்ரும்மா இவர்களை வைத்து வர்ணாச்ரம தர்மத்தை வகுத்தார்.

பூஷாவிற்கு மக்கட்பேறில்லை. முன்னர் தக்ஷனின் யாகத்தில் பரமேச்வரனிடம் பகைமை கொண்டு பற்களைக் காட்டி ஏளனமாகச் சிரித்ததால், வீரபத்ரன் இவனது பற்களை உடைத்துவிட்டான். அதுமுதல் மாவுப்பண்டங்களே இவன் உணவாயிற்று.

த்வஷ்டாவின் மனைவி அசுரர்களின் ரசனா. அவளுக்கு ஸந்நிவேசனும், விச்வரூபனும் பிறந்தனர்.

முன்பொரு சமயம், இந்திரன் அவமதித்ததால் தேவகுருவான ப்ருஹஸ்பதி தேவர்களை விட்டு விலகிச் சென்றார். அப்போது, தேவர்கள் தங்கள் பகைவர்களான அசுரர்களின் மருமகனான விச்வரூபனையே குருவாக ஏற்றனர்.

பரீக்ஷித் கேட்டான்.

ரிஷியே.. தேவகுரு ஏன் தேவர்களை விட்டு விலகினார்? கருணாமூர்த்தியான குருவே வருந்திக் கைவிடும்படி தேவர்கள்‌ என்ன செய்தனர்?

சுகர் பதில் கூறத் துவங்கினார்.
மூவுலகங்களுக்கும் தலைவனான தேவேந்திரன் செல்வச் செருக்கால் அறநெறிகளை விடுத்தான். ஒழுக்கத்தை விட்டான்.

ஒருநாள் தன் மனைவியான சசிதேவியுடன் இந்திர சபையில் அமர்ந்திருந்தான். நாற்பத்தொன்பது மருத்துக்கள், அஷ்ட வஸுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள், ருபுகணங்கள், விச்வேதேவர்கள், ஸாத்யர்கள், அச்வினிதேவர்கள் அனைவரும் நிறைந்த சபை. சித்த சாரணர்கள், கந்தர்வர்கள், வேதமோதும் முனிவர்கள், வித்யாதரர்கள், அப்ஸரஸ்கள் , கின்னரர்கள், பறவைக்கூட்டங்கள், நாகர்கள் அனைவரும் சூழ்ந்து அவன் புகழ் பாடினர்.

தலைக்குமேல் நிலவுபோன்ற வெண்கொற்றக்குடை. அச்சமயத்தில் வியாழ பகவானான குரு அங்கு வரவே அனைவரும் எழுந்து நின்று அவரை வணங்கினர்.

இந்திரன் அவரைக் கண்டான். ஆனால், எழுந்திருக்கவோ, வரவேற்கவோ, ஆசனம் அளித்து மரியாதை செய்வதோ இன்றி கண்டும் காணாதவன் போல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

எந்த ஒரு குருவின் ஆசீர்வதத்தால் இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்தானோ அவரையே செல்வச் செருக்கால் அலட்சியப்படுத்தினான்.

கருணாமூர்த்தியான அவர், இது செருக்கினால் வந்த குற்றம் என்று புரிந்துகொண்டு, பேசாமல் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

அவர் சென்றதுமே இந்திரன் தவற்றை உணர்ந்து வருந்தினான். குருவை அவமதிப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்று கலங்கினான்.

ஸார்வபௌமனானாலும் ஸாதுக்களை அலட்சியம் செய்பவன் பாறாங்கல் ஏற்றிய தோணியில் பயணிப்பவர் அழிவதுபோல் அழிவான்.

தேவகுருவான வியாழபகவான் அறிவுக்கடல். நானோ மூர்க்கன். நான் அவரது திருவடிகளில் என் தலையை முட்டிக்கொண்டு மன்னிக்க வேண்டுவேன் என்று கூறிக்கொண்டு அவரை த் தேடிப் போனான்.
ஆனால், அவரோ யோகத்தினால் தன்னை மறைத்துக்கொண்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment