Sunday, January 6, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 191 குரு மகிமை

ப்ருஹஸ்பதி இந்திரன்மேல் வருத்தமுற்று தன்னை மறைத்துக்கொண்டார். குருகடாக்ஷமின்றி தேவேந்திரன் பலவீனமடைந்தான். அவனது தேஜஸ் குறைந்தது.

இந்நிலையில் தேவலோகத்திற்குப் பாதுகாப்பில்லை என்று எண்ணினான். தேவர்கள் அனைவரையும்‌ கூட்டி ஆலோசனை செய்தான். அவன் மனம் அமைதியின்றித் தவித்தது.

குருவை இழந்து தவிக்கும் தேவர்களைக் கண்ட அசுரர்கள்‌ இதுதான் சமயம் என்று தங்கள் குருவான சுக்ராசார்யாரை அணுகினர். அவரது கட்டளைப்படி தேவர்கள் மீது படையெடுத்தனர்.

அனைத்து தேவர்களையும் பந்தாடினர். தேவர்களின் கைகால்கள் வெட்டுண்டன.
இந்திரனும் மற்ற தேவர்களும்‌ தப்பியோடிச் சென்று ப்ரும்மாவைச் சரணடைந்தனர்.

ப்ரும்மா அவர்கள் மீது கருணைகொண்டு சமாதானம் செய்தார்.

செல்வச் செருக்கால், ப்ரும்மத்தை அறிந்த, வேதம் கற்றுணர்ந்த, அடக்கமே உருவான அந்தணரை அவமத்தித்துவிட்டீர்கள்.

உங்கள் பகைவர்களான அசுரர்களும் முன்னொரு முறை அவர்களது குருவான சுக்ராசார்யாரின் பேச்சைக் கேளாமல் தாழ்நிலையை அடைந்தனர். அதுமுதல் அவர்கள் அவரை தெய்வமாக் மதிக்கின்றனர். அவரது கடாக்ஷத்தினாலேயே இம்முறை அவர்கள் தேவலோகமென்ன , ப்ரும்மலோகத்தைக்கூடக் கைப்பற்றிவிடுவார்கள்.

அவர் ப்ருகு வம்சத்தில் வந்தவர். அர்த்தசாஸ்திரத்தை முழுமையாக அறிந்தவர். அவரது ஆலோசனைகள்‌ மிகவும் ரகசியமானவை.

அந்தணர்கள் கோவிந்தனான பகவானையும், காயத்ரி மந்திரத்தையும், கோ(பசு)வையும் மிகவும் போற்றுபவர்கள். அவர்களுக்குத் துன்பங்கள் என்பதே இல்லை.

நீங்கள் குருகடாக்ஷத்தை இழந்ததாலேயே இத்தகைய துன்பங்கள் ஏற்பட்டன. ப்ருஹஸ்பதி பகவானை சமாதனம் செய்யும்வரை தற்காலிகமாக ஒரு குருவைச் சரணாகதி செய்யுங்கள்.

உடனே சென்று த்வஷ்டாவின் புதல்வரான விச்வரூபரை குருவாகக் கொள்ளுங்கள். அவர் உண்மையான அந்தணர். தபஸ்வி. மிகுந்த மன அடக்கமும், புலனடக்கமும் உள்ளவர். ஆனால், அவரது சீடர்களான அசுரர்களிடமும் நீங்கள் அன்பு பாராட்டினால் தான் அவர் உங்களுக்கு உதவுவார்.

ப்ரும்மா சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த தேவர்கள், தேவேந்திரனுடன் கிளம்பி விச்வரூபனிடம் சென்றனர். அவர் மிகவும் சிறியவர் ஆகையால், தேவேந்திரன் வாத்சல்யத்துடன் கட்டித் தழுவிக்கொண்டு கூறாலானான்.

குழந்தாய்! உனக்கு மங்களமுண்டாகட்டும். இப்போது நாங்கள் உன் விருந்தினராக இங்கு வந்திருக்கிறோம். உன் தந்தைக்கு சமமான எங்கள் விருப்பத்தை நிறைவேற்றித்தரவேண்டும்.

உபநயனம் செய்வித்து வேதம் கற்றுத்தரும் ஆசார்யன் வேதத்தின் திருவுருவம். தந்தை ப்ரும்மாவின் உருவம். சகோதரன் இந்திரனின் உருவம். அன்னை பூமிப்பிராட்டியின் திருவுருவம்.

அதிதியாக வருபவர்கள் தர்மதேவதையின் உருவமாவர். என்றோ ஒரே ஒருநாள் வரும் விருந்தாளி அக்னிதேவனின் உருவமாவார். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆன்மா ஸ்ரீ மன் நாராயணனின் ஸ்வரூபமே. எனவே எல்லா ஜீவர்களையும் தன்னைப்போலவே கருதவேண்டும்.

நாங்கள் உன் தந்தையார் போன்றவர்கள். எனவே பகைவர்களால் துன்புறும் எங்களது துக்கம், ஏழ்மை, தோல்வி ஆகியவற்றை உன் தவத்தால் போக்கவேண்டும்.

ப்ரும்மநிஷ்டனான உன்னை எங்கள் ஆசார்யனாக வரிக்கிறோம்.
குழந்தையானாலும் வேதம் கற்றறிந்த அறிஞரை விழுந்து வணங்குதலே நன்மை தரும். நீ வயதில் சிறியவனானாலும் எங்களை விடப் பெரியவன்.
என்று கூறினர்.

விச்வரூபன் மகிழ்ச்சியுடன் தேவகுருவாக இருக்க ஒப்புக்கொண்டார்.
பெரியோர் வேண்டுதலை என்னால் மறுக்க இயலுமா? நான் தங்களுக்கு சேவை வெய்யவேண்டியவன். நிச்சயமாகத் தங்கள் வேண்டுகோளை மறுக்காமல் செய்துமுடிப்பேன் என்றார் விச்வரூபன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment