Wednesday, December 19, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 177 புவனகோச வர்ணனை - 8

ஸ்ரீ சுகர் மேலும் தொடர்ந்தார்.

வாமன பகவானுக்கு பூமிதானம் கொடுக்க வேண்டி தன்னையே ஆத்ம ஸமர்ப்பணம் செய்தான் பலி. அவனுக்கு கைம்மாறாக இறைவன் போகங்களைக் கொடுத்திருந்தால் அருள் புரியவில்லை என்றாகும்.

பகவான் அவனது உயிரைத் தவிர அனைத்தையும் இரந்து பெற்றுக்கொண்டபின் அவனை வருணபாசத்தால் கட்டி மலைக் குகையில் தள்ளினார். அந்நிலையிலும் பலி என்ன சொன்னான் தெரியுமா? 

இந்த இந்திரன் அறிவாளிதான். அனைத்துச் செல்வங்களையும் பெற்றிருந்தும் தனக்கு நன்மையளிப்பது எது என்று தெரிந்துகொள்ளவில்லையே. ப்ருஹஸ்பதியை அலட்சியம் செய்துவிட்டு, பகவான் விஷ்ணுவிடம் அவரது பதத்தை வேண்டாமல், அழியக்கூடிய செல்வத்தை வேண்டினானே. 

பகவானது கரங்களால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டபோதும் என் பாட்டனாரான ப்ரஹ்லாதன் பகவானின் சேவையை வேண்டிப் பெற்றார்.

 அனைத்துலகையும் அவர் தர விரும்பியபோதும் போகங்கள் இறைவனிடமிருந்து தள்ளிவிடுமோ என்று அஞ்சினார். 

ஆனால், இப்போது நான் பகவானாலும் தள்ளப்பட்டேனே. விருப்பு வெறுப்புள்ள நான் அவரது கருணைக்குத் தகுதியற்றவன். என்று வேண்ட, பகவான் அவனை சுதல லோகத்தில் விட்டு தானே கைகளில் கதையேந்தி வாயிற்காவலனாக நிற்கிறார்.

பகவானின் கருணைக்குப் பாத்திரமான 
இந்த பலியின் கதையை பின்னால் (எட்டாவது ஸ்கந்தத்தில்) விரிவாகச்  சொல்கிறேன். 


சுதல லோகத்தின் கீழுள்ள தலாதலத்தில் முப்புரங்களின் தலைவனான அசுர மன்னன் மயன் வசிக்கிறான். உலகின் நன்மைக்காக முப்புரங்களையும் பரமேஸ்வரன் எரித்தார். ஆனால், பின்னர் அவர் அருளாலேயே பதவியைப் பெற்றான் மயன். அவனே மாயாவிகளுக்கெல்லாம் குருவும் ஆவான்.

இவன் பரமேஸ்வரனால் காக்கப்படுகிறான். அங்குள்ளவர்கள் மயனை தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

இதற்கும் கீழே மஹாதலத்தில் கத்ருதேவியின் மக்களான நாகங்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இவை மிகவும் கோபமுடையவை.

 இவற்றுள் குஹகன், தக்ஷகன், காளியன், ஸுஷேணன் ஆகிய சர்ப்பங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. இவையும் கருடனுக்கு அஞ்சி வாழ்கின்றன.

அதன் கீழுள்ள ரஸாதலத்தில் திதியின் மக்களான  அசுரர்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் எப்போதும் தேவர்களுடன் பகை பாராட்டுவர்.
மிகவும் உடல் வலிமையும், துணிவும் கொண்டவர்கள். ஆனால், பகவான் ஸ்ரீ ஹரியிடம் பயந்து ஒளிந்து வாழ்கிறார்கள்.

ரஸாதலத்துக்குக் கீழ் பாதாள லோகம் உள்ளது. இங்கு வாசுகி தலைவனாக இருக்கிறான். 

சங்கன், குளிகன், மஹாசங்கன்,சுவேதன், தனஞ்ஜயன், த்ருதராஷ்ட்ரன், சங்கசூடன், கம்பளன், அசுவதத்தன், தேவதரன் முதலிய நாகங்கள் வசிக்கின்றன. இவையும் மிகுந்த கோபமுள்ளவை. தங்கள் முடிகளில் உள்ள ரத்தினங்களால் பாதாள உலகின் இருளை அகற்றுகின்றன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment