Tuesday, December 18, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 176 புவனகோச வர்ணனை - 7

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.

ராகு கிரகம் சூரியனிலிருந்து பத்தாயிரம் யோஜனைக்குக் கீழ் மேருவைச் சுற்றுகிறான்.

இயற்கையாகவே தீயவனான இவன் சிம்ஹிகையின் மகன். இவனுக்கு தேவனாகும் தகுதி கிடையாது. ஆனாலும்  மோஹினி அவதாரம் எடுத்த பகவானின் கருணையால், கிரகங்களில் ஒருவன் ஆனான். 

இவனைப் பற்றி விரிவாகப் பின்னால்‌ பார்ப்போம்.


ஓளிரும் சூரிய மண்டலம் பதினாயிரம் யோஜனை பரப்புள்ளது. சந்திர மண்டலம் பன்னிரண்டாயிரம் யோஜனை அளவுள்ளது. பகவான் அமுதத்தைப் பகிர்ந்து கொடுத்த போது, ராகு சூரிய சந்திரர்களுக்கு நடுவில் வந்தமர்ந்தான். அவர்கள் அவனைக் காட்டிக் கொடுத்ததால் அவர்களிடம்‌ பகைமை கொண்டு அமாவாசை, பௌர்ணமி காலங்களில் சில சமயம் அவர்களை மறைக்கிறான்.

இதைப் பார்த்த பகவான் ஒளி பொருந்திய தன் சுதர்சனத்தை அவர்கள் அருகில் வைத்தார். அதன் தேஜஸுக்கு பயந்து சற்று நேரம் நின்றுவிட்டு உடனே திரும்பிவிடுகிறான். இதைத்தான் மக்கள் கிரகணம் என்கிறார்கள்.

ராகுவின் இடத்திலிருந்து பத்தாயிரம் யோஜனை கீழே சித்த சாரண, கந்தர்வர்களின் இடம் உள்ளது.

அதற்குக் கீழே வாயுவின் சஞ்சாரம், மேகங்கள் தெரியும் அளவில் யக்ஷ, ராக்ஷஸ, பிசாச, பூத ப்ரேதங்களின் இடம் உள்ளது.

அதற்கும்‌ நூறு யோஜனை கீழே இந்த பூமி உள்ளது.

அன்னம், கழுகு, கருடன் ஆகியவை எவ்வளவு உயரம் பறக்குமோ அதுதான் பூமியின் எல்லை.

பூமியின் அளவை முன்பே பார்த்தோம். பூமிக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பதினாயிரம் யோஜனை தூரத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றின் நீள அகலங்களும் பத்தாயிரம் யோஜனை. 

அதலம், விதலம், சுதலம், தலாதலம், மஹாதலம், ரஸாதலம், பாதாலம் ஆகியவை கீழ் ஏழு லோகங்கள்.

ஏழும் ஒருவிதத்தில் ஸ்வர்கம் போன்றவை. இவற்றில் விண்ணுலகைக்‌ காட்டிலும் காமம், ஐச்வர்யம், மகிழ்ச்சி, மக்கட்செல்வம், ஆகியவை மிக அதிகம்.

 மாயையினால் ஆட்பட்ட நாகர்கள், தைத்யர்கள், தானவர்கள் ஆகியோர் மிகவும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் குடும்பத்துடன்  பல்வேறு வகையான கேளிக்கைகளில் ஈடு்பட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இங்கு அசுர சிற்பி மயனால் கட்டப்பட்ட பற்பல அழகான நகரங்கள் உண்டு. அவை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டவை.

இங்குள்ள மக்கள் சிறந்த மூலிகைச் சாறுகளை அருந்தி, நல்லுணவு உண்டு, நன்னீரில் நீராடுவதால், இவர்களுக்கு உடல் நோய், மனநோய், முடி நரைத்தல், மூப்பு, உடல் வியர்வை, துர்நாற்றம், சோர்வு, ஆயுளுக்கேற்ப உடலின் சக்திக் குறைபாடு ஆகிய மாறுபாடுகளே இல்லை. எப்போதும் அழகோடும் இளமையோடும், வலிமையோடும் வாழ்பவர்கள்.

பகவானின் சுதர்சன சக்கரத்தைத் தவிர வேறெதற்கும் பயப்படாதவர்கள்.

அதலத்தில் மயனின் மகன் பலன் என்பவன் வசிக்கிறான். இவன் தொண்ணூற்றாறு வகையான இந்திர ஜாலங்களை உருவாக்கியிருக்கிறான். அவற்றுள் சிலவற்றை இன்றும்கூட சில செப்படி வித்தைக்காரர்கள்  பயன்படுத்துகின்றனர்.

அதற்குக் கீழே உள்ள விதலத்தில் பகவான் பரமசிவன் ஹாடகேச்வரர் என்னும் திருநாமத்துடன் தன் பூதகணங்களுடன்  வசிக்கிறார். 

ஸுதலத்தில் மிகவும் புகழ் பெற்றவனான பலி வசிக்கிறான். இங்கு அவன் பெற்ற செல்வச் செழிப்பு இந்திர லோகத்தில்கூட இல்லை.

 பகவானின் கருணைக்குப் பாத்திரமானவன்.
இவன் எப்போதும் பகவன் நாமத்தையே ஜபிப்பவன். ஆழ்ந்த பக்தி உடையவன். 

தும்முதல், கீழே விழுதல், கால் இடறுதல், முதலிய சமயங்களிலும் தனது உண்மை நிலை மறந்து உணர்வற்று இருக்கும் நிலையிலும்கூட தன்னையறியாமல் பகவானின் திருப்பெயரைக் கூறுபவன் இவ்வுலகத் தளைகளிலிருந்து நிரந்தரமாக விடுபடுகிறான்.

ஆனால், முக்தி பெற விழையும் பல பெரியோர்கள் பற்பல யோக சாதனைகளையும் உபாயங்களையும் கைக்கொண்டு தங்களை‌ மிகவும் வருத்திக்கொண்டு என்றோ ஒருநாள் கரையேறுகிறார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment