Monday, December 3, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 162 ஜடபரதர் - 1

ரிஷப தேவரின் மகனான பரதர் ஆட்சியை ஏற்றார். விஸ்வரூபரின் மகளான பஞ்சஜனீ என்பவளை மணந்தார்.

அவருக்கு ஸுமதி, ராஷ்ட்ரப்ருத், ஸுதர்சனன், ஆவரணன், தூம்ரகேது என்ற ஐந்து மகன்கள்‌ பிறந்தனர்.
அவர்கள் ஐவரும் தந்தைக்கு நிகரானவர்கள்.

இதுவரை அஜநாபம் என்றழைக்கப்பட்ட வர்ஷம் பரதரது காலம் முதல் பாரதவர்ஷம் என்றழைக்கப்பட்டது.

குடிமக்களை தந்தைபோல் காத்தார் பரதர். அந்தந்த காலங்களில் விதிக்கப்பட்ட வேள்விகளைத் தவறாமல் செய்தார். வேள்விகளில் ஒவ்வொரு தேவதையையும்‌ குறித்து வழங்கப்படும் ஹவிர்பாகத்தை யஜமானரான பரதர் பகவான் வாசுதேவருக்கு அர்ப்பணம் செய்தார்.

பகவான்தானே அனைத்து தேவர்க்கும் தேவன். வேள்விகளின் ப்ரதான தேவதையும் யக்ஞ நாராயணனே. ஒவ்வொரு தேவதையையும் பகவானின் உறுப்புகளாக தியானம் செய்து பகவானுக்கே அனைத்தையும் அர்ப்பணித்தார்.

உள்ளத்தூய்மை பெற்ற பரதருக்கு அனைவருடைய ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக விளங்கும்‌ பகவானிடத்து அசையாத பக்தி உண்டாயிற்று.

இவ்வாறு ஒரு கோடி வருஷங்கள் கடந்தபின் அரசபோகங்களில் வெறுப்புற்று, அனைத்தையும் புதல்வர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். பின்னர் ஹரிக்ஷேத்ரம் எனப்படும் புலஹரின் ஆசிரமத்தை அடைந்தார்.

அவ்விடத்தில் பகவான் பல மஹாத்மாக்களுக்கு அவர்கள் விரும்பியபடி இன்னமும் தரிசனம் அளித்துக்கொண்டிருக்கிறார்.

இருபுறமும் சக்ரரேகை கொண்ட உருண்டை வடிவ சாளக்ராமங்கள் நிரம்பிய சக்ரநதி ஓடுகிறது.

அங்கு தனியொருவனாக இருந்து அங்குள்ள தோட்டத்தில் கிடைக்கும் மலர்கள், பழங்கள், காய்கனிகள், துளசி முதலியவற்றால் பகவானை ஆராதனை செய்தார். இதனால் விஷய சுகங்களிலிருந்து விடுதலை பெற்றார்.

இறைவன்பால் காதல் மேலிட்டு மனம் அமைதி கண்டது. உடல் மயிர்க்கூச்செறிந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிப் பார்வையை மறைத்தது.

சிலசமயங்களில் பகவத் பூஜையையும்கூட மறந்து ப்ரும்மானந்தத்தில் லயித்திருப்பார்.

அர்ச்சனை செய்வதற்காகத் துளசியைக் கையில் எடுத்து பகவானின் திருநாமத்தைச் சொன்னதும், அந்நாமம் தொடர்பான லீலையில் மனம் லயித்து ஸமாதியில் ஆழ்ந்துவிடுவார்.

சிலசமயம் கையிலெடுத்த துளசி வாடும் வரை சமாதியில் இருப்பார். (துளசி அவ்வளவு சீக்கிரம் வாடாது. இரண்டு மூன்று நாள்களாகும்.)

உடலில் மான்தோலாடை. மூன்றுவேளையும் நீராடுவதால் பழுப்பு நிறமாகிவிட்ட சடையிட்ட முடி. எனினும் ப்ரும்மதேஜஸ் ஒளிர்வதால் அழகுற விளங்கினார்.

சூரியன் உதயமாகும் நேரத்தில் பொன்மேனியாக ஒளிரும் புருஷோத்தமனான பகவானை கீழ்க்கண்டவாறு வணங்குவார்.

பரோரஜ: ஸவிதுர்ஜாதவேதோ3
தே3வஸ்ய ப4ர்கோ3 மநஸேத3ம் ஜஜாந |
ஸுரேதஸாத3: புநராவிஶ்ய சஷ்டே
ஹம்ஸம் க்3ருத்4ராணம் ந்ருஷத்3ரிங்கி3ராமிம ||

பொருள்:
பகவான் ஸூர்யநாராயணனின் தேஜஸ் மாயைக்கு அப்பாற்பட்டது.
அவரவர் கர்மங்களுக்கேற்ப பலனளிப்பது. சங்கல்பத்தினாலேயே ப்ரபஞ்சத்தைப் படைத்து, அந்தர்யாமியாக உள் நுழைந்து, தன் சித்சக்தியால் காக்கிறது. அத்தகைய தேஜோமயமான வடிவத்தைத் துதிப்போம்.

இவ்வாறு அமைதியாக வாழ்ந்துவந்த பரதருக்கு ஒரு சோதனை வந்தது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment