Monday, December 31, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 186 அஜாமிளன் - 4

பரீக்ஷித் கேட்டான்
ரிஷியே! அனைத்து ஜீவராசிகளும் யமதர்மராஜனின் வசத்தில் இருக்கின்றன. அப்படி இருக்க அவரது தூதுவர்களைத் திருப்பி அனுப்பி யமதர்மராஜனின் கட்டளையை விஷ்ணுபார்ஷதர்கள் அவமதித்தனரே. அந்த யமனின் தூதுவர்கள் எல்லாவற்றையும் கூறியபின் என்ன நடந்தது?

ஸ்ரீ சுகர் கூறினார்
யமதூதர்கள் ஸம்யமனி பட்டணம் சென்று யமதர்மராஜனிடம் முறையிட்டார்கள்.

ஜீவனைக் கொண்டுவராமல், வெறும் கையோடு வந்த தூதர்களை விசாரித்தார் தர்மராஜன்.

எங்கே ஜீவன்?

அதைக் கொண்டு வர முடியவில்லை மஹாராஜா..

ஏன்?

அவன் ஒரு கூச்சல் போட்டான். அதன் பிறகு அவன் உயிரை எடுக்க முடியவில்லை.

நாம் போகும் இடத்தில் வரவேற்பார்களா? ஜீவன் கூச்சலிடும். சுற்றி இருப்பவர்கள் அரற்றுவார்கள். அதற்கெல்லாம்‌ பயந்து ஜீவனை எடுக்காமல் வந்தால், எதற்கு உங்களுக்கு இங்கே வேலை?

இல்லை மஹாராஜா. அவன் வேறு விதமாய்க்‌ கூச்சலிட்டான்.
எப்படி?

நாராயணா.. என்று கூச்சலிட்டான். அதைக் கேட்டு நான்குபேர் வந்தனர். அவன் ஜீவனை எடுக்கக்கூடாதென்று தடை செய்தனர்
.
தர்மராஜனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. என்ன சொன்னான்? என்ன சொன்னான்?

நாராயணா என்று சொன்னான். சட்டென்று நெகிழ்ந்துபோனார் யமன்.

கட்டளையை நிறைவேற்றாமல் வந்ததற்கு தண்டனைகிடைக்கும் என்று பயந்த தூதர்களுக்கு தைரியம்‌ வந்தது.

மஹாராஜா..

உலகில் ஜீவன்களின் பாவ புண்யங்களை விசாரித்து பலன் அளிக்கும் அதிகாரிகள் எத்தனை பேர்?

ஒருவருக்கு மேற்பட்ட அதிகாரிகள் இருந்தால் நடைமுறைகள் மாறாதா? தண்டனைகளும் மாறும்‌ என்றால், எவருக்கும் மரியாதை இருக்காதே.தாங்கள் ஒருவரே அனைத்திற்கும் தலைவர் என்று நினைத்தோமே.

இதுவரை தங்கள்‌கட்டளையை எவரும் அவமதித்ததே இல்லை. ஆனால், இன்று நான்கு சித்த புருஷர்கள் வந்து தங்கள் கட்டளையை மீறி ஜீவனை விடுவித்தனரே.

ஒரு பாவியை விடுவிக்கும் அளவிற்கு அதிகாரம்‌ பெற்ற அவர்கள் யார்?
இதில் பெரும் வியப்பு என்னவெனில், அந்த அஜாமிளன் தன் மகனை நாராயணா என்றழைக்கும்போதே அபயம் என்று‌ கூறிக்கொண்டு வேகமாக வந்துவிட்டனர்.

தூதர்கள் இப்படிக் கேட்டதும், யமதர்மராஜன் மிக்க மகிழ்ச்சியடைந்தார். பகவானின் திருவடித் தாமரைகளை த்யானித்தார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. மேனி சிலிர்க்கக் கூறலானார்.

தூதர்களே! எனக்கும் மேல் இந்த ப்ரபஞ்சத்திற்கு ஒரு அதிகாரி இருக்கிறார். துணியில் குறுக்கும் நெடுக்குமாக இழைகள் இருப்பதுபோல் இந்த ப்ரபஞ்சம் அவரிடம் வியாபித்திருக்கிறது. அனைத்துமே அவரது ஆளுமைக்குக் கீழ்ப்பட்டதே.

இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் அவருக்கு பயந்தே கடைமைகளைச் செய்கின்றன. நான் உள்பட அனைத்து தேவர்களும் பகவானின் மாயைக்கு ஆட்பட்டவர்களே.

உலகில் எல்லாவற்றையும் நமக்குக் காட்டும்‌ கண்களை நாம்‌காண இயலாது. அதுபோல் நம்‌ இதயத்தில் சாட்சியாக இருக்கும் பகவானை புத்தி,பொறி, புலன்களால் அறியமுடியாது.

தேவர்களும் கொண்டாடும் அந்த விஷ்ணுதூதர்களின் காட்சி மிகவும் அரியது. அவர்கள் பகவானின் அடியார்களை எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்தும் காத்து வருகின்றனர்.

தர்ம நெறி அனைத்தையும் நிர்ணயம்‌ செய்தவர் பகவானே. ஆனால், அதை முழுதும் அறிந்தவர் எவரும்‌ இலர்.

பாகவத தர்மம் என்ற நெறி பகவத் பக்தியைக் காட்டுவது. தூய்மையானது. ரகசியமானது. அதை அறிவது மிகவும்‌ கடினம். அந்நெறியில் ஒழுகுபவன் பகவத் சரணத்தை அடைவான். அதை அறிந்தவர்கள் பன்னிரண்டு பேர்கள்தான். ப்ரும்மா, நாரதர், பரமேஸ்வரன், ஸனத்குமாரர், கபிலர், ஸ்வாயம்புவமனு, ப்ரஹ்லாதன், ஜனகர், பீஷ்மர், பலி, சுகர் மற்றும் நான் என்றார் யமதர்மராஜன்.

இவ்வுலகில் மனிதனின் முதல்‌ கடைமை பிறவியின் நோக்கத்தை உணர்ந்து நாமகீர்த்தனம் செய்து பக்தி செலுத்துவதே. பகவானின் திருநாமத்தை ஒரே ஒருமுறை சொன்னதற்கே யமபாசத்திலிருந்து விடுபட்டுவிட்டானே அந்த அஜாமிளன்!
மன ஒருமைப்பாடின்றி, உயிர் ஊசலாடும்‌ சமயம்‌ மகனை அழைப்பதற்காக நாராயணா என்றழைத்ததும், அது என் பெயராயிற்றே என்று தன்‌பார்ஷதர்களை அனுப்பிக் காத்தாரே பகவான். அவனது அனைத்துப் பாவங்களும் கணத்தில் நீங்கியதே.

பல பெரியோர்கள் வேதநெறியில் சென்று கர்மங்களைச் செய்துகொண்டிருக்க ஒரு முறை நாமம்‌சொன்னதாலேயே இவனுக்கு முக்தி நிச்சயிக்கப்பட்டுவிட்டதே.

ஆகையால்தான் அறிவாளிகள் பக்தி மார்கத்தைத் தேர்வு செய்கின்றனர்.
இந்தத் தேனில் மூழ்க மறுத்து உலகியல் வாழ்க்கையில் உழலும் கயவர்களை‌ மட்டும் இங்கு அழைத்து வாருங்கள்.

ஸ்ரீ மன் நாராயணனை வணங்குபவர்களுக்கும், அவரது திருநாமத்தை உச்சரிப்பவர்களுக்கும் இங்கு இடமில்லை.

ஹே ! பகவானே! இன்று என் தூதர்கள் தங்கள்‌ பார்ஷதர்களை அவமதித்தனர். தாங்கள் இத்தவறை மன்னி த் து விடுங்கள். அந்தர்யாமியான உங்களை வணங்குகிறேன்
என்றார் யமதர்மராஜன்.

உயிர்களின் பாவங்களை விசாரித்து தண்டனை அளிக்கும் அதிகாரியான யமதர்மராஜனேலேயே கூறப்பட்ட நாம சித்தாந்தம் இதுவே. அதனாலேயே இந்த ஸ்கந்தத்திற்கு மிகவும் ஏற்றம். ஸ்ரீ மத் பாகவதத்தின் உட்கருத்து நடுநாயகமான இந்த ஆறாவது ஸ்கந்தத்தில் விளக்கப்பட்டுள்ளது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment