Monday, December 17, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 175 புவனகோச வர்ணனை - 6

சிம்சுமார சக்ரம்


நக்ஷத்ர மண்டலங்கள் அனைத்தும் மேருவை வலமாகச் சுற்றுகின்றன. இவற்றிலிருந்து இரண்டு லக்ஷம் யோஜனை உயரத்தில் சுக்கிரன் இருக்கிறார். இவர் சூரியனின் வேகத்தை அனுசரித்து முன்னும் பின்னுமாகவோ, இணைந்தோ செல்கிறார். இவர் மழையருளும் கிரகம். பெரும்பாலும் நன்மையே செய்பவர். மழையைத் தடை செய்யும் கிரகங்களைக்கூட சாந்தப்படுத்துபவர்.

சுக்ரனும் புதனும் சமமான நடையை உடையவர்கள். 

சந்திரனின் மகனான புதன் சுக்ரனுக்கு மேல் இரண்டு லக்ஷம் யோஜனை தூரத்தில் இருக்கிறார். இவரும் அநேகமாக நன்மையே செய்பவர். ஆனால், சூரியனிடமிருந்து விலகிச் செல்லும்போது அதிகமான மழை, அல்லது மழையின்மை பற்றிய பயத்தை விளைவிக்கிறான்.

இதற்கு இரண்டு லக்ஷம் யோஜனைக்கு மேல் செவ்வாய் உள்ளது. இவர் வக்ர நடையில் செல்லாமல் நேராகச் சென்றால் ஒவ்வொரு ராசியிலும் மூன்று மூன்று பட்சங்கள்  (45 நாள்கள்) தங்கிச் செல்வார். இவர் தீய விளைவுகளை உணர்த்தும் கிரகம் ஆவார்.

அதற்கு இரண்டு லக்ஷம் யோஜனைக்கு மேல் ப்ருஹஸ்பதி பகவான்  இருக்கிறார். இவரும் வக்ர கதியில் செல்லாமல் நேராகச் சென்றால் ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் தங்குவார்.

குருவிற்கு இரண்டு லக்ஷம் யோஜனைக்கு மேல் சனி பகவான் விளங்குகிறார்.

அவர் ஒவ்வொரு ராசியிலும் முப்பது மாதங்கள் தங்குவார். இவர் பன்னிரண்டு ராசிகளையும் கடக்க முப்பது வருடங்கள் ஆகும். பெரும்பாலும் தீமையை விளைவிப்பவர்.

இவை அனைத்திற்கும்‌ மேல் பதினோரு லக்ஷம் யோஜனை உயரத்தில் கச்யபர் முதலிய ஸப்தரிஷிகள் உள்ளனர். இவர்கள் உலக மக்களின் நன்மை வேண்டி, பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் துருவ பதத்தை வலம் வருகின்றனர்.

ஸப்தரிஷி மண்டலத்திற்கு மேல் பதிமூன்று லக்ஷம் யோஜனை உயரத்தில் துருவ மண்டலம் உள்ளது. இங்குதான் உத்தானபாதனின் மகனான துருவன் இருக்கிறார். கல்ப காலம் முடிந்து ப்ரளயம் வரும் வரை ஸப்தரிஷிகளும் இவரை வலம் வருகின்றனர்.
இவரது பெருமையை நான்காவது ஸ்கந்த்ததில் பார்த்தோம்.

கிரகங்கள், ஒளி மண்டலங்களை ஆளும் காலதேவன் அவை அனைத்திற்கும் ஆதாரமாக இந்த துருவ மண்டலத்தை நியமித்துள்ளார். ஆகவே அது சுற்றாமல் ஒரே இடத்தில் நிலையாக நின்று ஒளிர்கிறது.

அனைத்து கிரகங்களும் முளையில் கட்டிய மாடுகள் போல் ஒரே ஆதாரத்தைக் கொண்டு தத்தம் நடையில் சுற்றுவதால் விழாமல்‌ இருக்கின்றன.

பகவானது யோகமாயையின் ஆதாரத்தில் இருப்பதால் இந்த ஒளி மண்டலத்தை சிம்சுமார (திமிங்கலம்) வடிவில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த சிம்சுமாரம் சுருண்ட வண்ணம் தலைகீழாக உள்ளது. இதன் வால் நுனியில் துருவன் இருக்கிறார். வாலின் மத்தியில் கச்யபர், அக்னி, இந்திரன், தர்மதேவதை ஆகியோரும், வாலின் அடியில் தாதா, விதாதா என்ற  இருவரும் உள்ளனர். 

இடுப்பில் ஸப்தரிஷிகள் உள்ளனர். வலமாகச் சுருண்டிருக்கும் இந்த சிம்சுமாரத்தின் வலப்புறம் வலமாகச் சுற்றும் 14 உத்தராயண நக்ஷத்ரங்கள்‌ (அபிஜித் முதல் புனர்வசு வரை) உள்ளன. 
தக்ஷிணாயண நக்ஷத்ரங்கள் பதினான்கும் ( பூசம் முதல் உத்திராடம்) இடது புறம் உள்ளன. இதன் பின்புறம் மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய நக்ஷத்ரங்கள் கொண்ட அஜவீதியும், வயிற்றில் ஆகாய கங்கையும் உள்ளன.

மேல் முகவாய்க்கட்டையில்  அகஸ்தியர், கீழ் முக வாய் க் கட்டை யில் யமன், முகத்தில் செவ்வாய், கழுத்தில் குரு பகவான், மார்பில்‌சூரியன், ஹ்ருதயத்தில் பகவான் நாராயணன் மனத்தில் சந்திரன், தொப்புளில் சுக்கிரன் இன்னும் சிம்சுமாரத்தின் உருவம் முழுவதும் மற்றும் பல தேவர்களும் உள்ளனர்.

இந்த சிம்சுமார ஸ்வரூபம் அனைத்து தேவர்களின் உருவமான ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் திருவடிவம். இவ்வுருவை தினமும் சந்தி வேளையில் நீராடித் தூய்மையாக தியானிக்கவேண்டும். இவ்வாறு தியானிப்பவனின் பாவங்கள் உடனே அழிந்து விடுகின்றன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment