Sunday, December 2, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 161 ரிஷபதேவர் - 3

திகம்பர ஸன்யாசியாகி உன்மத்த நிலையை அடைந்த ரிஷபதேவர் ஊர் ஊராகச் சுற்றினார்.

வனத்தில் திரியும் காட்டு யானையை ஈக்கள்‌ துன்புறுத்துவதுபோல் மக்கள் அவரைத் துன்புறுத்தினர். அடித்தனர். துப்பினர். அதட்டினர். சாணி, புழுதி, கல் ஆகியவற்றை வாரி இறைத்தனர். அவர் எதையும் பொருட்படுத்தவில்லை என்பதைவிட எதையும் உணரவே இல்லை. பூமி எப்படி நாம் செய்யும் தீங்குகளைப் பொறுத்து அமைதியாய்த் தாங்குகிறதோ அதுபோல் அனைத்தையும் அமைதியாய்க் கடந்தார். நான் என்ற எண்ணமே இல்லாமல், பரந்த ப்ரும்மத்துடன் ஒன்றிவிட்டிருந்தார்.

பரந்த மார்பு, அகன்ற தோள்கள், நம்பிக்கை தரும் தும்பிக்கை போன்ற திருக்கைகள், அழகிய புன்முறுவல், சமமான கன்னங்கள், சங்கு போன்ற கழுத்து, சுருண்ட நீண்ட கேசம், உடல் முழுதும் புழுதி படிந்த திருக்கோலம். மேகம் மறைத்த சூரியனாய் விளங்கும் தேஜஸ். இவைகளைக் கண்டவர் அனைவரும் காமுற்றனர்.

மக்கள் யோகசாதனைகளுக்கு எதிராக இருப்பது கண்டு அலைவதை விடுத்து, அஜகர வ்ருத்தியை ஏற்றார்.

ஸன்னியாசத்தில் மதுகர வ்ருத்தி, அஜகர வ்ருத்தி என்று இரண்டு தர்மங்கள் உண்டு.

மதுகர வ்ருத்தி என்பது செல்லும் வழியில் ஏழு வீடுகளில்‌ மட்டும் பிக்ஷை எடுத்து, அதில் எது கிடைத்தாலும் ஏற்பது. இல்லற தர்மம் பின்பற்றுபவர்களிடம் அவர்களை வற்புறுத்தாமல் வண்டு தேனை மலருக்கு பாதிப்பின்றி எடுப்பது போல் பிக்ஷை ஏற்றல். தேனை எடுக்கும் வண்டினால் மலரைச் சுமக்கும் தாவரத்திற்கும் பயன் உண்டு.

அஜகர வ்ருத்தி என்பது மலைப் பாம்புபோல் ஒரே இடத்தில் இருப்பது. தானாக வந்து எவராவது உணவிட்டால் ஏற்பது, இல்லையெனில் உபவாசம்.

இருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம்கூட நகராமல் கிடந்தார். அங்கேயே உணவு, படுப்பது, மலம்‌ கழிப்பது அனைத்துமே நடைபெற்றது. மேனியில் மலத்தையே பூசிக்கொண்டார்.

அவரது சரீரத்திலிருந்து வெளியேறும் கழிவுகள் பத்து யோஜனை தூரத்திற்கு நறுமணம் வீசின.

இவ்வாறு யோகநிலையை அனுஷ்டித்தார்.

இம்மாதிரி வாழ்க்கையை நமது காலத்திலும் கூட சில யோகீஸ்வரர்கள் அனுஷ்டானம் செய்து காண்பித்திருக்கிறார்கள்.

ஆகாயத்தில் சஞ்சாரம் செய்தல், மனோவேகத்தில் நினைத்த இடம் செல்லுதல், பரகாய ப்ரவேசம், திடீரென மறைதல், தொலைவிலுள்ள பொருளைப் பார்த்தல், கேட்டல், போன்ற அனைத்து சித்திகளும் அவருக்குப் பணிவிடை செய்யக் காத்திருந்த போதும் அவர் அவற்றை மனத்தாலும்‌ தீண்டவில்லை.

கவனமாகக் கதை கேட்ட பரீக்ஷித் சட்டென்று கேட்டார்.
மஹரிஷியே! அவருடைய கர்மவாசனைகள்தான் எரிக்கப்பட்டுவிட்டனவே. பின் சித்திகள் என்ன செய்துவிடும்? அவற்றை ஏற்று மக்களுக்கு‌ நன்மை செய்திருக்கலாமே.

கலகலவென்று சிரித்தார் சுகர்.
உண்மைதான் பரிக்ஷித். இவ்வுலகில் வேடன்தான் வலையில் பிடித்த விலங்கை நம்பி அது அடைபட்ட கூட்டைத் திறப்பானா? அதுபோல் மஹான்கள் ஒருபோதும் மனத்தை நம்புவதே இல்லை. மனம் ஒரு குரங்கு. எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் ஒரு கணத்தில் அலைபாயும் ஆபத்து உண்டு.

ஒருபோதும் மனத்தோடு உறவு கொள்ளவே கூடாது. அதை நம்பினால், வெகு காலமாகச் சேர்த்து வைக்கப்பட்ட சக்தி வீணாகும்.

தன் காதலனை நம்பி கட்டிய கணவனுக்குத் தீங்கிழைக்கும் மனைவி போன்றது. மனத்தை நம்பும் யோகி பாழாகிறான்.

ஆகவேதான், தேவர்களைக் காட்டிலும் சிறந்தவரான ரிஷபதேவர், சாதாரண மனிதன் போல் உணர்ச்சியற்றவராக அவதூதராக வேடம்‌ ஏற்றார்.

ரிஷபதேவரின் உடல் தென்கர்நாடகம், கொங்கணம், வேங்கடம், குடகு முதலிய பகுதிகளில்‌ திரிந்தது.

ஒருசமயம் பற்றிய காட்டுத்தீ ரிஷபதேவரின் உடலை ஆவலோடு உண்டது.

கலியுகத்தில் அதர்மம் தலைதூக்கும்போது அரசனாகும் அர்ஹன் என்னும் மூடன், ரிஷபதேவரைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தானும் அது மாதிரி இருக்க விரும்பி நடித்து தீய வழியான நாத்திகத்தை தன் மனம்போல் பரப்புவான்.

அதனால், பல மக்கள் ஆசார அனுஷ்டானங்களையும், வேத மார்கத்தையும் விடுத்து, அவற்றை நிந்தித்து பாவத்தைத் தேடிக்கொள்வார்கள். தாங்களாகவே தேடிக்கொண்ட மார்கத்தில் மூடநம்பிக்கை கொண்டு நடத்தைகளால் நரகத்தில் வீழ்வார்கள்.

பகவான் ரிஷபதேவரின் அவதாரம் ரஜோ குணம் நிரம்பி, கர்ம மார்கத்தில் சிக்கித் தவிப்போருக்கு மோக்ஷ மார்கத்தைக் காட்ட ஏற்பட்டது.

அக்காலத்துக்கேற்ற சுலபமான மோக்ஷ மார்கத்தை அனுசரித்துக் காண்பிப்பதற்காக ரிஷபதேவரின் அவதாரம் மிக அவசியமாய் இருந்தது.

இவரது நிலையை மற்ற யோக புருஷர்களால்கூடப் புரிந்துகொள்ளமுடியாது.

இவரது சரித்ரம் கேட்பவரையும், சொல்பவர்களையும் வாசுதேவனிடம் நிலையான பக்தியில் ஆழ்த்தும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment