Wednesday, December 12, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 170 புவனகோச வர்ணனை

பரீக்ஷித் கேட்டார்
முனிஸ்ரேஷ்டரே, சூரியனின் ஒளி படரும் எல்லை மற்றும் நக்ஷத்ரக் கூட்டங்கள் பரவியிருக்கும் எல்லை வரையிலான இப்புவி மண்டலத்தின் பரப்பளவு பற்றி முன்பே கூறினீர்கள்.
ப்ரியவ்ரதனின் தேர்ச்சக்கரங்களால் ஏற்பட்ட ஏழு பள்ளங்கள் ஏழு சமுத்ரங்களாகின. அவற்றால் இப்புவி மண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டன என்றும் கூறினீர்கள். அவற்றின் நீள அகலம், மற்றும் வடிவமைப்பு பற்றி முழுமையாகச் சொல்லுங்கள்.

பகாவனின் ஸ்தூலரூபமான இவ்ப்புவிமண்டலம் கண்களுக்குப் புலப்படுகிறது. அதன் முழு வடிவத்தையும் அறிய விரும்புகிறேன் என்றார்.

ஸ்ரீ சுக மஹரிஷி கூறலானார்.
எவ்வளவு நீண்ட ஆயுள் பெற்றாலும் பகவானின் மாயையின் எல்லையை மனத்தினாலும்கூட அடையமுடியாது.
எனவே, கண்களுக்குத் தெரியும்‌ ஸ்தூலரூபமான புவியை முதலில் பார்க்கலாம்.

பூமண்டலமாகிய தாமரையின் ஏழு இதழ்களும் ஏழு தீவுகள். இவற்றின் நடுவில் உள்ளது நாம் வசிக்கும் நாவலத்தீவு.(ஜம்பூத்வீபம்)
இதன் பரப்பளவு எட்டு லக்ஷம் யோஜனைகள். இது வட்டமானது.

இதில் ஒன்பதாயிரம் யோஜனை அளவுள்ள ஒன்பது வர்ஷங்கள் உள்ளன. அவை இமயமலை முதலிய எட்டு‌மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் நடுவில் இளாவிருதம் என்ற பத்தாவது வர்ஷம் உள்ளது. இதன் மத்தியில் மலைகளுக்கெல்லாம் அரசன் என்றழைக்கப்படும் மேரு மலை உள்ளது. இம்மலை ஒரு லக்ஷம் யோஜனை உயரம் கொண்டது. (பூமிக்கு வெளியில் தெரியும் உயரம் எண்பத்துநான்காயிரம் யோஜனைகள் மட்டுமே) முப்பத்திரண்டாயிரம் யோஜனை அகலமுள்ளது. பதினாறாயிரம் யோஜனை பூமிக்குள் பதிந்திருக்கிறது.

இளாவிருத வர்ஷத்தின் வடக்கில் நீலன், ஸ்வேதன், ச்ருங்காவன் என்ற மலைத்தொடர்கள் உள்ளன. அவை முறையே ரம்யகம், ஹிரண்மயம், குரு என்னும் வர்ஷங்களின் எல்லைகளாகும்.
கிழக்கிலும் மேற்கிலும் உப்புக்கடல்கள் உள்ளன. ஒவ்வொன்றின் அகலமும் இரண்டாயிரம் யோஜனைகள்.

இளாவிருத வர்ஷத்தின் தெற்கில் அடுத்தடுத்தாக நிஷதம், ஹேமகூடம், இமாலயம் என்ற மூன்று மலைகள் உள்ளன. இவை கிழக்கு‌மேற்காகப் பரவியுள்ளன. பத்தாயிரம் யோஜனை உயரமுள்ளவை.

ஹரிவர்ஷம், கிம்புருஷம், பாரதவர்ஷம் என்ற மூன்று வர்ஷங்களின் எல்லைகளாகின்றன.

இளாவிருத வர்ஷத்தின் கிழக்கிலும் மேற்கிலும் கந்தமாதன பர்வதமும், மால்யவான் என்ற பர்வதமும் உள்ளன. இவை இரண்டாயிரம் யோஜனைகள் அகலமுள்ளவை. இவை பத்ராச்வம், கேதுமாலம் ஆகிய வர்ஷங்களின் எல்லைகளாகும்.

மந்தரம், மேருமந்தரம், ஸ்பார்ச்வம், குமுதம் ஆகிய நான்கு மலைகளும் பத்தாயிரம் யோஜனைகள் உயரமும் அகலமும் உள்ளவை. இவை நான்கும் மேரு மலையின் நாற்புறமும் அஸ்திவாரக் கம்பங்கள்போல் உள்ளன.

இந்த நான்கு மலைகளின் உச்சியிலும் மாமரம், நாவல்மரம், கடம்பமரம், ஆலமரம் ஆகியவை விளங்குகின்றன
ஒவ்வொன்றும் ஆயிரத்துநூறு யோஜனை உயரமுள்ளவை. அகலவாக்கிலும் அதே அளவு அவற்றின் கிளைகள் பரவியிள்ளன.
இப்பர்வதங்களின் முகட்டில் பால், தேன், கரும்புச்சாறு, நன்னீர் கொண்ட தடாகங்கள் உள்ளன.இவற்றைப் பருகும் யக்ஷர்களும் கின்னரர்களும் இயல்பாகவே யோக சித்தி பெற்று விளங்குகின்றனர்.
இம்மடுக்களுக்கு அருகில் நந்தவனங்கள் உள்ளன.
மந்தராசலத்திலுள்ள மாமரத்தின் பழங்கள் மலைமுகடுகள் போல் பழுத்தவை. இன்சுவை கொண்டவை. இவற்றின் சாறு கிழக்கே அருணோதா என்னும் நதியாக ஓடுகிறது. இது இளாவிருதத்தின் கிழக்குப் பகுதியைச் செழுமையாக்குகிறது.

பார்வதிதேவியின் புண்ணியஜனம் எனப்படும் யக்ஷப் பணிப்பெண்கள் இந்நதியில் நீராடுகின்றனர்.
மேருமந்தரமலையின் உச்சிலிருக்கும் நாவல்மரத்தினின்று கொட்டைகளற்ற நாவல் பழங்கள் விழுகின்றன. இவற்றின் சாறு ஜம்பூ எனும் நதியாகப் பெருகுகிறது. மேருமந்தர மலைச் சிகரத்திலிருந்து கீழ் நோக்கிப் பாயும்‌ இந்நதி இளாவிருத வர்ஷத்தின் தென்பகுதியை வளமாக்குகிறது.

இந்நதிக்கரையிலுள்ள மண், நதிநீரில் நனைந்து, சூரியன் மற்றும் காற்றினால் உலர்ந்து ஜம்பூநதம் எனும் தங்கமாக மாறுகிறது.

இந்தத் தங்கத்தைத்தான் தேவர்களும், கந்தவர்களும், அவர்களின் மனைவிகளும் எடுத்து நகைகளாக அணிகிறார்கள்.
ஸுபார்ச்வ மரத்தின் உச்சியிலுள்ள கதம்ப மரத்தின் ஐந்து பொந்துகளிலிருந்து பெருகும் ஐந்து தேனருவிகள் இளாவிருதத்தின் மேற்குப் புறத்தை நறுமணத்தால் நிறைக்கின்றன.

குமுதமலையின் உச்சியிலுள்ளது சதவல்சா எனும் ஆலமரம். இம்மலையிலிருந்து அநேக ஆறுகள் கீழ்நோக்கிப் பாய்கின்றன. இவற்றில் நீராடுபவர்களுக்கு விரும்பியது அனைத்தையும்‌ அளிப்பன. இவை இளாவிருத வர்ஷத்தின் வடக்குப் பகுதிகளைச் செழுமையாக்குகின்றன. இந்நதிநீரில் செய்யப்படும் விவசாயத்தினால் உண்டாகும் விளைபொருளை உண்பவர்க்கு வாழ்நாளில் நோயே வராது.

இவற்றைத் தவிர மேரு மலையின் அடிப்புறத்தில் நாற்புறங்களிலும் குரங்கம், குரரம், குஸும்பம், வைரங்கம், திரிகூடம், சிஐரம், பதங்கம், ருசகம், நிஷதம், சீனிவாசம், கபிலம், சங்கம், வைடூர்யம், ஜாருதி, விஹங்கம், ஹம்சம், ரிஷபம், நாகம், காலஞ்சரம், நாரதம் ஆகிய இருபது மலைகள் உள்ளன.

இவற்றைத் தவிர ஜடரம், தேவகூடம், பவளம், பாரியாத்ரம், கைலாயம், கரவீரம், த்ரிச்ருங்கம், மகரம்‌ஆகிய எட்டு மலைகள் மேருமலையின் அரண்போல் உள்ளன. தங்கமலையான மேருமலை நாற்புறமும் தர்பைகள் சூழ்ந்த வேள்விகுண்டத்தில் ஒளிரும் வேள்வித்தீபோல் மிளிர்கிறது.

இதனடியில் எண்திசைக் காவலர்களின் நகரங்கள் உள்ளன. இவை ப்ரும்மதேவரின் நகரத்தின் அளவில் நான்கில் ஒரு பங்கு அளவு அதாவது இரண்டாயிரத்து ஐநூறு யோஜனை உள்ளவை.

தொடர்ந்து கங்கையின் பெருமைகளைக் கூறுகிறார் ஸ்ரீ சுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment