Sunday, December 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 607

பகவான் தொடர்ந்தான். உடலுக்குள் இதயத்தாமரை தண்டு மேலாகவும் மொட்டு கீழாகவும் அதன் எட்டு தளங்களும் மேல் நோக்கி மலர்ந்திருப்பது போலவும் நடுவில் ஒரு காய் இருப்பது போலவும் பாவனை செய்யவேண்டும். அந்தக் காயில் சூரியன் சந்திரன் அக்னி ஆகியவை ஒன்றன்மேல் ஒன்றாக இருப்பதாகக் கொண்டு அதன் மேல் என்னுடைய இந்த உருவத்தைப் பார்க்கிறாயல்லவா? இதை தியானம் செய்யவேண்டும்.

அழகாக அளவாக அமைந்த உறுப்புகள், அமைதி கொண்ட அழகிய முகம்,‌ நீண்ட நான்கு கைகள், அழகிய கழுத்து, செவ்வரியோடும் கன்னங்கள், மனம் மயக்கும் புன்னகை, மின்னும் மகர குண்டலங்கள், பட்டாடை, கார்மேக வர்ண மேனி, மார்பில் ஸ்ரீ வத்ஸம், சங்கு, சக்ரம், கதை, வனமாலை பாதங்களில் நூபுரம், கழுத்தில் கௌஸ்துபம், கிரீடம், கங்கணம், அரைஞாண், தோள்வளை, அழகிய பார்வை, இத்தகைய மனம் மயக்கும் வடிவத்தின் ஒவ்வொரு அங்கமாக தியானம் செய்யவேண்டும். புலன் நுகர் பொருள்களிலிருந்து மனத்தைத் திருப்பி என்னிடம் செலுத்த வேண்டும். பூரண வடிவத்தியானம் கைகூடியபின், ஏதேனும் ஒரு அங்கத்தில் மனத்தை நிறுத்தவேண்டும்.

வேறு அங்கங்களை விட முகத்தில்‌ நிறுத்துவது சிறந்தது. முகத்தில் நிலைபெற்ற சித்தத்தை ஆகாயத்தில் செலுத்தி, பின்னர் எதைப் பற்றியும் நினைக்காமல் இருக்கப் பழகவேண்டும்.

என்னிடம் மனத்தைச் செலுத்தும் யோகிக்கு மற்ற எல்லாவற்றின் மேலுள்ள பற்று விட்டுவிடும்.

இவ்வாறு தியானம் கைகூடி சித்தத்தை என் மேல் நிறுத்தி அதை வெற்றி கொண்டவுடன் அவனுக்கு எல்லா சித்திகளும் கைவரப்‌பெறும்.

உத்தவர் இடைமறித்தார். கண்ணா! சித்தி என்றால் என்ன? எந்த விதமான தாரணையினால் (மனப்பயிற்சியால்) சித்தி வரும்? சித்திகள் எத்தனை? உன்னால்தான் தெளிவாகக் கூற இயலும். ஏனெனில் நீதான் யோகிகளுக்குப் பலனைக் கொடுப்பவன்.

பகவான் பொறுமையுடன் பதில் கூறத் துவங்கினான்.

உத்தவா! யோகத்தில் முழுமை பெற்ற யோகிகள் சித்திகள் பதினெட்டு வகைப்படும்‌ என்கிறார்கள். அவைகளுள் எட்டு சித்திகள் என்னை மையமாகக் கொண்டவை. மீதி பத்தும் ஸத்வகுணத்தினால் அடையத் தக்கவை. 

அணிமா, மஹிமா, லஹிமா ஆகிய மூன்றும் உடலைச் சார்ந்தவை. விரும்பியதை அடையும் சித்தி ப்ராப்தி ஆகும். அது பொறிகளைச் சார்ந்தது. நேரில் பார்த்ததும் கேட்டதுமான விஷயங்களை அனுபவிப்பது பிராகாம்யம் எனப்படும். மாயையும் அதன் காரியங்களையும் கையாளுவது ஈஷிதா எனப்படும். புலன் இன்பங்களில் பற்றற்று இருப்பது வஶிதா எனப்படும். தான் விரும்புவதின் எல்லை வரை சென்று அனுபவிப்பது எட்டாவது சித்தி. இவை எட்டும் என்னிடம் இயற்கையாகவே உள்ளவை. 
இவைகளைத் தவிரவும் பல சித்திகள் உண்டு.

பசி, தாகம், காமம், குரோதம் ஆகியவை இல்லாமல் இருப்பது, தூரத்திலுள்ள பொருளைப் பார்ப்பது, ஒலிகளைக் கேட்பது, மனம்போல் வேகமாகச் செல்வது, விரும்பிய வடிவம் எடுப்பது, பிற உடலில் நுழைவது, விரும்பிய நேரத்தில்‌ மரணம், தேவர்களைப் பார்ப்பது, மனத்தில் நினைத்ததை அடைவது, தன் எண்ணம் ஒருபோதும் தடைபடாமல் இருப்பது, ஆகியவை பத்து சித்திகள். 

இவை தவிர யோகதாரணையால் உண்டாகும் சித்திகள் ஐந்து. அவை, மூன்று காலங்களில் நடப்பவற்றையும்‌ அறிவது, விருப்பு, வெறுப்பு, தட்ப வெப்பம், சுக துக்கம், ஆகியவற்றை வெல்வது, மற்றவர் நினைப்பதைத் தெரிந்துகொள்வது, அக்னி, சூரியன், தண்ணீர், விஷம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, எவராலும் வெற்றிகொள்ள இயலாமல் இருப்பது ஆகியவையாகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. .

1 comment:

  1. ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    அருமையான அற்புதமான பதிவுகள்.
    கிருஷ்ணரின் பேரருள் அனைவருக்கும் கிடைக்க வழி செய்துள்ளீர்கள். ஹரேகிருஷ்ணா.

    ReplyDelete