Friday, December 6, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 364

கண்ணன் மண்ணை உண்ட லீலையைக் கேட்டதும் பரீக்ஷித் உள்ளம் கசிந்தான்.

மஹரிஷீ!

அவனது உள்ளத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீசுகர் வாஞ்சையுடன் பார்த்தார்.

யசோதைக்கு ஒரு கணம் ஞானம் வந்துவிட்டது. அதை பகவான் மாயையினால்‌ மறைத்துவிட்டானே.

ஆம் பரிக்ஷித்.

இத்தகைய பெருமை மிக்க லீலைகள் அவனைச் சுமந்து பெற்ற பெற்றோர்க்குக் காணக் கிடைக்கவில்லையே. நீங்கள் சொல்லிக் கேட்டாலும் கண்முன்னே நடப்பதுபோல் ஆனந்தம் மிகுகின்றதே. நேரில் கண்ட யசோதைக்கு எப்படி இருந்திருக்கும்? கண்ணன் அவளிடம் தாய்ப்பால் குடிக்கிறானே. யாருக்காவது கிடைக்குமா? பெற்றவளுக்கே கிட்டவில்லை. யசோதை அப்படி என்னதான் புண்ணியம் செய்தாள்? பகவானின் இத்தகைய பால லீலைகளைக் காண நந்தன் என்ன புண்ணியம் செய்தார்?
என்றான்.

ஸ்ரீ சுகர் அரசனின் கேள்வியைப் பாராட்டும் விதமாகத் தலையாட்டினார். பின்னர் கூறத் துவங்கினார்.

அஷ்டவசுக்களில் மிகச் சிறந்தவரான த்ரோணர் என்பவர். அவர் மனைவி தரை என்பவள். அவர்கள் இருவரையும் பூமியில் (கோஸம்ரக்ஷணம்) பசுக்களைப் பராமரிக்கும்படி ப்ரும்மதேவர் கட்டளையிட்டார்.

அப்போது த்ரோணர்,
புவி வாழ்வு மிகவும் துன்பமயமானது. அதைக் கடக்க வேண்டுமெனில் ஸ்ரீ ஹரியிடம் மிகச் சிறந்த பக்தி உண்டாகவேண்டும். அத்தகைய பக்தியை எங்களுக்கு அருளுங்கள். அப்போதுதான் நாங்கள் நிம்மதியாக புவியில் பசுக்களைப் பராமரிக்க இயலும். என்றார்.

ப்ரும்மாவும் அவ்வாறே ஆகட்டும் என்று வரமளித்தார்.

அதன் பயனாக த்ரோணர் நந்தனாகவும், தரை யசோதையாகவும் பிறந்தனர். கோப கோபியர்களும் அவர்களின் பரிவாரமாகப் பிறந்தனர்.‌ப்ரும்மாவிடம் பெற்ற வரத்தின் பயனாக அவர்களுக்கு பகவானிடம் நிலையான பக்தி சித்தித்தது. நிலையான பக்தியின் பயனாக இறைவன் அவர்கள் வீட்டில் எழுந்தருளி லீலைகள் செய்தான். என்றார்.

கணத்துக்கொரு லீலையும் பொழுதுக்கொரு புகாருமாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

பல நேரங்களில் புகார்களால் யசோதை மிகவும் சலிப்படைவாள். ஆனால், யார் என்ன சொன்னாலும், கண்ணன் வெண்ணெய் திருடினான் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டாள். எவ்வளவு சொன்னாலும் யசோதை கேட்பதில்லை என்று அறிந்தாலும் கோபிகள் தினமும் யசோதை வீட்டிற்குப் புலம்புவதற்காக என்றே செல்வார்கள்.

அப்படிச் சொல்லும்போது கண்ணன் யசோதையின் பின்னால் ஒளிந்து நின்று சொல்லாதே என்று கண்களால் கெஞ்சுவான். அல்லது மிராட்டுவான். அந்தக் காட்சியைக் காண்பதற்கென்றே தினமும் வருவார்கள்.

கண்ணன் எவ்வளவு அமர்க்களம் செய்தாலும் கோபிகளால் ஒரு நாள்கூட கண்ணனைப் பார்க்காமல் இருக்கமுடியாது.

இப்போது இன்னும் சற்று வளர்ந்துவிட்ட கண்ணனுக்கு ஏராளமான நண்பர்கள் சேர்ந்துவிட்டனர்.

வெண்ணெய் திருடப் போனாலும் சரி, விளையாடப் போனாலும் சரி, எப்போதும் எல்லாரையும் அழைத்துக்கொண்டுதான் போவான்.
எடுக்கும் வெண்ணெய்யை அனைவர்க்கும் கொடுப்பான்.

இவர்கள் கூட்டத்தில் ஒரு குரங்கும் உண்டு. வேறு யார்? சிறிய திருவடிதான். ராமாவதாரத்தில் தன்னலமற்ற சேவையின் ருசியை அனுபவித்தவராயிற்றே. இப்போது இறைவன் புவியில் பிறந்திருக்கும் சமயம் வாய்ப்பை விடுவாரா?

கண்ணனுடனேயே எப்போதும் இருப்பார். சில நேரங்களில் வெண்ணெய்க் களவிற்கு துப்பு கொடுப்பார். கண்ணன் எங்கு சென்றாலும் உடன் செல்வார்.

வெண்ணெய்யை நன்றாக நக்கிவிட்டு, கையலம்பும் பழக்கமெல்லாம் கண்ணனுக்குக் கிடையாது. அந்தக் கையை உடன் வரும் குரங்கின்மீது நன்றாகத் தடவுவான். இவரும் சுகமாகக் காட்டுவார்.

அவ்வாறு கண்ணன் தடவிவிட்ட பழக்கத்தாலேயே இன்றும் நாம் ஹனுமாருக்கு வெண்ணெய்க்காப்பு சாற்றுகிறோம். வெண்ணெய்யைத் தடவி க்ருஷ்ணாவதாரத்தை நினைவு படுத்தினால் அவருக்கு கண்ணன் அடித்த லூட்டிகளை நினைவிற்கு வந்து மனம் குளிவார். அவ்வமயம் நம் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றவும் செய்கிறார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment