Tuesday, December 31, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 377

உலகைக் காக்கும் இறைவன் இன்று கன்றுகளைக் காத்துக் கொண்டிருக்கிறான். கையில் உணவுப்‌பொட்டலத்துடன் காட்டில் அலைந்துகொண்டிருக்கின்றனர்.

துள்ளுபவை கன்றுகளா சிறுவர்களா என்று தெரியாதபடி உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

கன்றுகளுக்கு நீர் காட்டுவதற்காக அங்கிருந்த மடுவின் அருகே வந்தனர். எல்லாக் கன்றுகளும் நீர் பருக, சிறுவர்களும்‌ கைகளால் அள்ளி அள்ளி நீரைக் குடித்தனர்.

யமுனைக்கு, அவர்களோடு கண்ணனும் வந்து நீர் பருகுவது சந்தோஷம்தான் என்றாலும், கைகளால்‌ அள்ளிக் குடிக்கிறானே. திருவாயமுதம் கிடைக்காதா என்று ஏங்கினாள்.

அவளது ஏக்கம் கண்ணனுக்குத் தெரியாதா.. புதிய விளையாட்டைத் துவங்கினான்.

கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு  குனிந்து நேரடியாக கன்றுகளைப் போலவே வாயால் நீரை உறிஞ்சத் துவங்கினான்.

யமுனையின் சந்தோஷம் அவளது நீரோட்டத்தில் தெரிந்தது. கடகடவென்று எங்கிருந்தோ நிறைய பூக்களைக் கொண்டுவந்து கண்ணனிடம் சேர்த்தாள். திடீரென்று நிறைய நீரில் பூக்கள் வருவதைப் பார்த்ததும் கோபச் சிறுவர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து கண்ணனுக்குச் சூடிவிட்டனர். ஒரு பெரிய தாமரையை கண்ணனின் கையில் கொடுக்க, அதைக் கொண்டு அவன் விளையாடிக்கொண்டும் கன்றுகளையும் சிறுவர்களையும் அடித்துக்கொண்டும் வந்தான். 

வந்துகொண்டே இருந்தபோது வழியில் திடீரென்று ஒரு‌பெரிய மலை முகடுபோல் ஒரு பிராணி படுத்திருப்பது தெரிந்தது. கோபச் சிறுவர்கள் பயந்துபோனார்கள்.

மிகவும் வலிமை மிக்க பகன் என்ற அசுரன் கொக்கு வடிவத்தில் அங்கே அமர்ந்திருந்தான். கண்மூடித் திறப்பதற்குள் லபக்கென்று கண்ணனை விழுங்கிவிட்டான்.
அவ்வளவுதான் பலராமன் உள்பட அனைவரும் அதிர்ந்துபோய்  மூர்ச்சையாகி விழுந்தனர்.

கொக்கின் வாய்க்குள் சென்ற கண்ணன் பெரிய நெருப்புக் கோளம் போல் பகனின் தொண்டைக்குள் சுட ஆரம்பித்தான். நெருப்புக் கங்கை விழுங்கியதுபோல் தவித்த பகாசுரன் உடனே வெளியில் கக்கினான்.

வெளியே வந்ததும் கண்ணன் தன் அமுதப் பார்வையால் சிறுவர்களை எழுப்பிவிட்டான்.

பகன் மறுபடி கண்ணனை அலகால்‌ குத்துவதற்காக ஓடிவந்தான். கண்ணன் வெகு லாவகமாக ஒரே துள்ளலில் எழும்பி பகனின் அலகுகளைப் பிடித்தான். இரண்டு அலகுகளையும் இழுத்து ஓலையைக் கிழிப்பதுபோல் விளையாட்டாக பகாசுரனைக் கிழித்துப் போட்டான்.

அக்கணமே  வானத்திலிருந்து பூமாரி பொழிய, சிறுவர்களோ கண்ணனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு ஆடினர். கையிலிருந்த கொம்பு, சங்கு எல்லாவற்றையும் ஊதிக் கொண்டாடினர்.
போன உயிர் திரும்பி வந்ததுபோல மகிழ்ந்தனர். 

அன்றைக்கு வீட்டுக்குப் போன சிறுவர்கள் அனைவரும் தத்தம் அன்னையரிடம் பகாசுரனைக் கண்ணன் கிழித்த விதத்தைப் பலவாறு அபிநயம் பிடித்துச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர்.

கண்ணனுக்குத் தீங்கு நினைப்பவன் தன் தீங்கைத் தானே தேடிக் கொள்கிறான். விளக்கைத் தேடி விட்டில் பூச்சி வருவதுபோல் கண்ணனைத் தேடி அசுரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து தானே மாய்ந்துபோகிறார்கள்.

அன்று கர்காச்சாரியார் சொன்னது உண்மையாயிற்று என்று நந்தனும், இன்னும் பல கோபர்களும் பேசி பேசிப் பொழுது போயிற்று. இதனாலேயே அவர்களை சம்சாரம் பாதிக்கவே இல்லை.

புள்ளின் வாய்க்கீண்டானை 
பொல்லா அரக்கனை 
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடி..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment