Monday, December 9, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 366

பால் குடித்துக் கொண்டிருந்த போது, அம்மா இறக்கிவிட்டுவிட்டுப் போனாள் என்ற கோபத்தில் வீட்டிலிருந்த தயிர், மோர்ப் பானைகளை உடைத்துவிட்டு, வெண்ணெய்ப்பானை ஒன்றை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான் கண்ணன்.

யசோதை அவனைப் பிடிக்க வந்தபோது வெண்ணெய்யைக் காலி செய்துவிட்டு, அதையும் போட்டுடைத்துவிட்டு ஓடத்துவங்கினான்.

கையில் தடியோடு யசோதை பயந்தவன் போல் ஓடும் கண்ணனைத் துரத்தினாள்.

யோகிகளால்கூட மனத்தினாலும் பிடிக்கமுடியாத அவனை யசோதை துரத்திக்கொண்டு ஓடினாள். அவளால் பிடிக்க முடியுமா?

தலைமுடி அவிழ, பூக்கள் சிதற, சிறுத்த இடை கொண்ட அவள் பருத்த உடலால் நடை தளர, மூச்சு வாங்கிக்கொண்டு தொடர்ந்தாள்.

திரும்பிப் பார்த்த கண்ணனுக்கு மிகவும் பரிதாபமாகப் போய்விட்டது. ஓடும் வேகத்தைக் குறைத்தான். சட்டென்று அவனைப் பிடித்தாள் யசோதை.

அவ்வளவுதான். மையிட்ட கண்களைக் கைகளால் கசக்கிக்கொண்டு அழத் துவங்கினான்.

பயம் என்றால் என்னவென்றே அறியாதவன் கண்ணன். அப்படிப்பட்டவனுக்கு இப்போது ஏற்ற பாத்திரத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப பயந்தாகவேண்டிய கட்டாயம். என்ன செய்வதென்று யோசித்தான்.

ஒவ்வொரு உணர்விற்கும் ஒரு அதிதேவதை அவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது. தைரியத்திற்கு, கோபத்திற்கு, மகிழ்ச்சிக்கு என்று தேவதைகள் இருக்கும்போது, பயத்திற்கு இருக்காதா? அந்த தேவதையை அழைத்தான்.

ஈரேழு பதினான்கு புவனங்களையும்‌ படைத்த இறைவன், பிரஜாபதிகள், திக் பாலர்கள், கிரஹ தேவதைகள் அனைத்தையும் விட்டு தன்னை அழைப்பதைப் பார்த்து பயத்திற்கான அதிதேவதை சற்று தொலைவிலேயே நின்றுகொண்டு பயந்து நடுங்கிக்கொண்டே கண்ணனைப் பார்த்தது.

அது எப்படி பயப்படுகிறது என்று பார்த்து அதைப்போல் நடித்தானாம் கண்ணன்.

என்ன செய்தாலும் நடிப்பு என்று யசோதை கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது என்பதற்காக, கண்ணைக் கசக்கி, மையைக் கண்ணைச் சுற்றி அப்பிக்கொண்டுவிட்டான். கன்னத்திலிருந்த த்ருஷ்டிப் பொட்டும் ஈஷிக்கொண்டது.

ஏற்கனவே கண்ணன் கருமை நிறத்தவன் என்றாலும், இன்னும் கொஞ்சம் மையை அப்பிக்கொண்டால் பரிதாபம் வரும் என்று நினைத்தான் போல.

பின்னர் பரிதாபம் சொட்டும் முகத்துடன் யசோதையைப் பார்த்தான். அன்னையின் உள்ளமாயிற்றே. சாதாரணக் குழந்தை அழுதாலே அன்னை மனம் தாங்காது. இவனோ தெய்வக் குழந்தை. சட்டென்று கையிலிருந்த தடியை வீசினாள். முகத்திலிருந்த பொய்க்கோபத்தைச் சற்று குறைத்தாள்.

ஆனால்,
சிறியதாகவாவது ஏதேனும் தண்டனை தந்தாலொழிய இவனுக்குப் புரியாது. மற்றவரைத் தொந்தரவு செய்வதாக தினமும் புகார் வருகிறதே என்றெண்ணினாள். எனவே, சுற்றுமுற்றும் பார்த்தாள். கன்றுக் குட்டியைக் கட்டும் கயிறு அங்கிருந்தது. அதை எடுத்து

உன்னை இந்த உரலோடு கட்டிப்போடப் போகிறேன். சற்று நேரம் எங்கும் போகாமல் ஒரே இடத்தில் இரு. அதான் உனக்கு தண்டனை.

என்று சொல்லிக்கொண்டு, கண்ணனைக் கட்டத் துவங்கினாள்.

நீளமான கயிறுதான். ஆனால், மூன்று வயதுக் குழந்தையான கண்ணனின் இடுப்பைச் சுற்றி ஒரு முடிச்சுப் போட வரவில்லை. இரண்டு அங்குலம் குறைவாக இருந்தது.

அதற்குள் எல்லா கோபியரும் அங்கு கூடிவிட்டனர். ஒருத்தியைப் பார்த்து வேறு கயிறு கொண்டு வா என்று சொல்ல, அவள் ஓடிப்போய் இன்னொரு கயிறு எடுத்துவந்தாள். யசோதைக்குத் தெரியாமல் கண்ணன் அவளை முறைக்க, அவள் பயந்துபோனாள்.

அந்தக் கயிற்றை மீண்டும் இணைத்துக் கண்ணனைக் கட்ட முயன்றபோது, ஆச்சரியமாக இரண்டங்குலம் குறைந்தது.

நீளம் நீளமாக இருக்கும் கயிறுகள் கண்ணனின் இடுப்பைச் சுற்றியதும் எப்படிப் போதாமல் போகின்றன என்று யோசிக்கவிடாமல் மாயையால் அவர்களது அறிவைக் கட்டி வைத்திருந்தான் கண்ணன். அண்டம் உண்ட வயிற்றை அரையடித் தாம்பு கட்டுமா என்ன?

வீட்டிலுள்ள எல்லாக் கயிறுகளும் வந்துவிட்டன. ஆனால், எல்லாவற்றையும் இணைத்தாலும் கண்ணனின் இடுப்பை ஒரு சுற்று சுற்றி முடிச்சுப் போட வரவில்லை.

இதென்ன மாயம்? என்று மயங்கியவள்.

போடா, உன்னைக் கட்டக்கூட முடியல
என்று சலித்துப்போய் கயிற்றைக் கீழே போட்டாள்.

அன்னை மனம் வாடலாமா? உடனே,
அம்மா, உனக்கு என்னைக் கட்டணும்னு ஆசையா இருந்தா கட்டும்மா, நான் வயத்தை இப்படி எக்கிக்கறேன்.
என்று சொல்லி கயிற்றை எடுத்து அவள் கையில் கொடுத்தான். வயிற்றை எக்கிக் காட்டினான். கடலும் மலையும் சற்றே நெகிழ்ந்தன.

சின்னக் குன்று அசைந்து வருவதுபோல் நடக்கும் யானை ஒல்லிப்பீச்சானான பாகனின் பின்னாலேயே செல்லும். அவன் காட்டிய இடத்தில் நிற்கும். தன்னைக் கட்டவேண்டிய சங்கிலியை எடுத்துப் பாகன் கையில் கொடுக்கும்.  கட்டுவதற்காகத் தன் காலையும் தூக்கிக் காட்டும். எதற்காக என்றால் அதைப் பிடிக்கும்போது அதனிடம் சத்தியம் வாங்குவார்களாம். அதற்காகவும், பாகனின் அன்பிற்கு வசப்பட்டும், அவன் சொல்வதைக் கேட்டு பெரும்பலம் பொருந்திய யானை தன்னைக் கட்ட அனுமதிக்கிறது.

அதைப்போல் அனைத்துலகையும் படைத்து, நிர்வகித்து, அழிக்கும் இறைவன் தன்னலமற்ற பக்தி கொண்டவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நிற்கிறான்.

சட்டென்று கண்ணனிடமிருந்து கயிற்றை வாங்கி அவன் இடுப்பைச் சுற்றிக் கட்டி முடிச்சிட்டாள் யசோதை. கயிற்றின் மறுமுனையை அங்கிருந்த உரலுடன் கட்டினாள்.

இங்கேயே சற்று நேரம் கிட. அப்பதான் புத்தி வரும்
என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றாள். அங்கிருந்த கோபியரில் சிலர் அவனை நமுட்டுச் சிரிப்புடன் மாட்டிண்டியா என்பதுபோல் பார்த்தனர். அவர்களைக் கண்ணன் முறைத்ததும் பயந்துபோய் ஓடிவிட்டார்கள்.

மீதிபேருக்கு குழந்தையைப் போய் கட்டுவார்களா என்று யசோதைமேல் கோபம். எனவே, அவளிடம் சென்று கட்டை அவிழ்க்கச் சொல்வதற்காகச் சென்றனர்.

மேலேயிருந்து இந்த லீலையைப் பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள் ஹா என்று தம்மை மறந்து கத்திவிட்டனர்.
தலையை ஆட்டி அவர்களை அமைதி காக்கும்படி எச்சரிக்க, நமுட்டுச் சிரிப்புடன் வாயைப் பொத்திக் கொண்டனர்.

உரலில் கட்டுண்ட கண்ணன் தோட்டத்தில் தனிமையில் விடப்பட்டான்.
அடுத்த லீலைக்கு ஆயத்தமானான். யாராவது பார்க்கும்போது மட்டும் ஊம் ஊம் என்று விசும்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment