Thursday, October 18, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 125 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 69

ஸ்ரீ மத் பாகவத பழம் - 125
விதுர மைத்ரேய ஸம்வாதம் - 69

நாடு திரும்பிய துருவன் பல்வேறு வேள்விகளால் பகவானை ஆராதித்தான். 

வேள்வியில் பயன்படும் பொருள்களும், செயல்களும், செய்பவர்களும் பகவானே. பலனை அளிப்பவனும் பகவானே.

எனவே ஸர்வம் விஷ்ணுமயம் என்று கண்டான் துருவன். எனவே அனைவரையும் அன்புடன் நடத்தினான்.

துருவன் நன்னடத்தையின் நாயகன். அந்தணர்களின் அடியவன். வேதத்தின் பொருள் உணர்ந்த வேதியன். அறநெறிக் காவலன். ஆகவே, மக்கள் தந்தையெனப் போற்றினர்.

உலகியல் சுகங்களை அனுபவிப்பதன் மூலம் புண்ய பலன்களையும்  யாக யக்ஞங்கள் செய்வதன் மூலம் பாவங்களையும் கழித்தான் த்ருவன்.

இந்த பூமண்டலத்தை முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் ஆண்டான் த்ருவன்.

பின்னர் தன் மகன் உத்கலனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான்.
நிலையாமையை நன்கு மனத்தில் சிந்தித்து பதரிகாஸ்ரமம் சென்றான்.

அங்கு தூய்மையான புண்ய நதியில் நீராடி பொறிபுலன்களைத் தூய்மையாக்கி, அமைதியாக ஸ்திரமான ஆசனத்தில் அமர்ந்து ப்ராணாயாமத்தால் மூச்சுக்‌காற்றை அடக்கி, மனத்தை வெளியுலகிலிருந்து இழுத்து நிறுத்தி, ஸ்தூலப்ஸ்வரூபமான விராட் ஸ்வரூபத்தில் புத்தியைச் செலுத்தினான்.

அந்த ஸ்வரூபத்தையே மனத்தில்  நினைத்து நினைத்து தியானம் செய்பவன், செய்யப்படும்‌ பொருள் என்ற பேதம்‌ நீங்கி நிர்விகல்ப ஸமாதியில் நிலைத்து நின்றான்.

அவனது இதயம்‌ பக்தியினால் உருகி ஆனந்தக்கண்ணீர் பெருகி, மயிர்க்கூச்செறிந்து  தான் என்பதை மறந்தான்.

அப்போது பூரண நிலவு போல் பத்து திசைகளையும் ஒளிமயமாக்கிய வண்ணம் ஒரு விமானம் இறங்கி வந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment