Thursday, October 11, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 120 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 64

பகவானைக் கண்டதும் பரவசத்தில் பேச்சற்றுப்போன துருவனை சங்கினால் அவன் கன்னத்தில் தொட்டார் பகவான்.

துருவனுக்கு அக்கணமே ஞானம் சித்திக்க, பகவானைப் பார்த்து ஸ்துதி செய்யத் துவங்கினான்.

எம்பெருமானே! தாங்கள் அனைத்து சக்திகளையும் உடையவர். நீங்களே என் அந்தக்கரணத்தினுள் நுழைந்து என் வாக் சக்தியையும், மற்ற புலன்களையும் உயிர்ப்பித்தீர்கள்.

அந்தர்யாமியான தங்களுக்கு வணக்கம்.

பகவானான தாங்கள் இரண்டற்றவர். ஒருவர். தங்களது அளவற்ற சக்தியான மாயையினால், அனைத்து ப்ரபஞ்சங்களையும் படைக்கிறீர். பின்னர் அவற்றுள் அந்தர்யாமியாக உள்நுழைந்து அவற்றைச் செயல்படவைக்கிறீர். புலன்களற்ற ஜடப்பொருள்களில் அவைகளின் உருவமாகக் காணப்படுவதும் நீரே. இவ்வாறு நீங்கள் பல்வேறு உருவங்களில்‌ தோற்றமளிக்கிறீர்.

வெவ்வேறு கட்டைகளைப் பற்றிக்கொண்டு எரியும் அக்னி எப்படிக் கட்டையின் உருவில் தெரிகிறதோ அப்படி.
ஆனால் அது எதிலும் ஒட்டுவதில்லை.

நாதா! படைப்பு துவங்கும்போது தாங்கள் ப்ரும்மாவைப் படைத்தீர்கள். அவர் தூங்கி எழுந்து காண்பதுபோல் ப்ரபஞ்சத்தைக் கண்டார்.

முக்தி வேண்டுபவர்கள் உம்மையே சரணடைகிறார்கள்.

நற்பிறவி கொடுத்துள்ளீர்கள். நன்றியுடைவர் தம்மை மறப்பரோ?

பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலையளிக்கக்கூடியவர் தாங்கள். ஆனால், கற்பகத்தருவான தங்களை உலக சுகங்களைப் பெற பூஜிப்பவர்கள் உண்மையில் தங்களது மாயையினால் மோசம் போனவர்கள்.

விஷய சுகம்‌ நரகத்தில் கூடக் கிடைக்கும் பெருமானே! உலகில் மக்களுக்குத் தங்களது திருவடித்தாமரைகளைத் தியானம் செய்வதாலும், போற்றிப் பாடுவதாலும் தங்களது சரிதங்களைக் கேட்பதாலும் ஏற்படும் ஆனந்தம் ப்ரும்மானுபவத்தில் கூடக்‌ கிடைக்காது.

அழிவற்றவரே! தங்களுடைய பக்தி வெள்ளத்தில் திளைக்கும் ஸாதுக்களின் சங்கம் எனக்கு எப்போதும் ஏற்படட்டும். நான் எப்போதும் தங்களைப் பற்றிய அமுதக் கதைகளை சான்றோர் வாயிலாகக் கேட்டுக்கொண்டே இருக்கவே விரும்புகிறேன். அதுவே ஸம்சாரக் கடலைக் கடக்கும்‌எளிய வழி.

தங்களுடைய சரணகமலத்தின் நறுமணத்தை அனுபவிப்பவர்களுக்கு எத்தகைய உலக சுகங்களும் இன்பம் அளிப்பதில்லை.

நான் ப்ரத்யக்ஷமாகத் தெரியும் தங்களுடைய இந்த ஸ்வரூபத்தையும், விராட் ஸ்வரூபத்தையுமே அறிவேன். தங்களுடைய ஸூக்ஷ்ம ரூபம்‌ எனக்குத் தெரியாது.

தாங்கள் எதற்கும் கட்டுப்படாதவர். ஸ்வதந்த்ரர். தோஷமற்றவர். ஞானஸ்வரூபர். ஸர்வக்ஞர். பரமாத்மா. தங்களை விடப் பெரியவர் எவருமில்லை. மாறுபாடற்ற ஆதிபுருஷர். தங்களுக்கு முன் இருந்தவர் யாருமில்லை.

முக்குணங்களை உடைய மாயையை அடக்கி ஆள்பவர். விழிப்பு, தூக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளையும் கடந்தவர். அந்தர்யாமி. யக்ஞஸ்வரூபி. இவ்வளவு இருந்தும் ஜீவாத்மாவிடமிருந்து தனித்தும் விளங்குகிறீர். எல்லையற்றவர். ஆனந்த வடிவானவர்.

தாங்கள் ஆனந்த வடிவானவர் என்று எண்ணித் துதிப்போர்க்கு அரசபோகங்களை வழங்குகிறீர். தங்கள் திருவடித் தாமரைகளை பெறுவதே பஜிப்பதின் பயன். பக்தர்களைக் காப்பதையே விரதமாக மேற்கொண்டவர். உலகப்பற்று மிக்க எங்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்து உலகியல் பயத்தை நீக்கி ஆட்கொள்கிறீர். தங்களையே நான் சரணடைகிறேன்.

விதுரா!
எடுத்த காரியத்தைச் சரிவர முடிக்கும் நோக்குடைய துருவன் இவ்வாறு கூற, பகவான் அகமகிழ்ந்து கூறலானார்.

அரசகுலத் திலகமே! உன் எண்ணத்தை நான் அறிவேன். கல்யாண குணங்கள் நிரம்பியவனே! உனக்கு இதுவரை யாரும் அடையாத ஒளி மயமான ஒரு உலகத்தைக் கொடுக்கிறேன்.

நெற்கதிர்களைப் போரடிக்கும் மாடுகள் தாங்கள் கட்டப்பட்டிருக்கும் முளையைச் சுற்றி வருவதுபோல், கோள்களும், மற்ற நக்ஷத்ரங்களும்‌ உன்னைச் சுற்றி வரும். அவாந்தர கல்பம் வரை வேறு ஸ்தானங்கள் அழிந்தாலும்‌ உன் இருப்பிடம் அழியாது.

ஸப்த ரிஷிகளும் உன் ஸ்தானத்தைச் சுற்றியே இருப்பார்கள்.

அந்த துருவ ஸ்தானத்தை உனக்களிக்கிறென்.

உன் தந்தை பூவுலகை விட்டுக் கானகம் சென்ற பின் முப்பத்தாறாயிரம்‌ ஆண்டுகள் இப்புவியை வலிமையுடன் தர்ம நெறி தவறாது ஆட்சி செய்.

உனக்கு ஏற்பட்டுள்ள இடர்கள் அனைத்தும் தானே விலகும். நிறைய வேள்விகள் செய். இவ்வுலக இன்பங்களை விருப்பம்போல் நன்றாக அனுபவித்துப் பின் என்னை நினைத்து என் இடமான வைகுண்டத்தையும் அடைவாய்.

இவ்வாறு குழந்தைக்கு அனுக்ரஹம்‌ செய்துவிட்டு அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வைகுண்டம்‌ கிளம்பினார் பகவான்.

பகவானைக் கண்ட பின் தன் விருப்பங்கள் நிறைவு பெற்றாலும், உலகியல் வாழ்வில் இருக்கும்படி ஆயிற்றே என்று சற்றே குறைப்பட்டான் துருவன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment