Monday, October 8, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 117 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 61

குழந்தை துருவனுக்கு துவாதசாக்ஷரி மந்திரத்தையும் தியான முறையயும் உபதேசம் செய்து, அவனை மதுவனத்திற்கு அனுப்பிவிட்டு உத்தானபாதனின் அரண்மனைக்குச் சென்றார் நாரதர்.
எதற்காக?

உத்தம குருவானவர், தன் சீடனது ஸாதனையில் அந்தர்முகமாக ஏற்படும் தளைகளை மட்டுமின்றி பஹிர்முகமாக ஏற்படும் அதாவது வெளியில் ஏற்படும் தளைகளையும் நீக்குகிறார்.

என்னதான் உதாசீனப்படுத்தினாலும் அரசனின் வாரிசு. காணவில்லை எனில், அரசனுக்கு இழுக்கு. வீரர்களை அனுப்பி தேடித் தூக்கிக்கொண்டு வரச்செய்து விட்டால்?

எனவே உத்தானபாதனிடம் சென்றார் நாரதர்.

அவர் நினைத்தது போலவே, அவன் துருவனைத் தேடிக் கண்டுபிடித்துக்கொண்டுவர வீரர்களுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்தான்.

கவலை இருந்தபோதிலும், நாரதரை வரவேற்று உபசரித்தான்.

அரசே! உங்கள் முகம் வாடியிருக்கிறதே. ஏதேனும் கவலையா? குறையா? ஒன்றுமறியாதார்போல் கேட்டார்.

அரசன் சொன்னான்.
ப்ரும்மரிஷியே! என் மகன் துருவனுக்கு ஐந்தே வயது. பெண்பித்து பிடித்த நான் அவனை அவனது தாயாருடன் விலக்கி வைத்தேன். காட்டில் துணை யாருமின்றி பசியால் முகம் வாடிப் படுத்திருக்கும் அந்தக் குழந்தையை ஓநாய்கள் வந்து கடிக்காமல் இருக்கவேண்டும்.

அவன் அன்போடு என் மடியில் அமர வந்தான். நான் அவனை மடியில் இருத்திக்கொள்ளவில்லை. என்னைப்போலத் தீயவன் உண்டா? என்று வருந்தினான்.

நாரதர் கூறினார்.
குழந்தையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். பகவான் அவனைக் காப்பாற்றுகிறார். அவனது பெருமையை நீ அறியமாட்டீர். உம் புதல்வன் திறமை மிக்கவன். இந்திரன் முதலியவர்களாலும் செயற்கரிய செயலைச் செய்துவிட்டு உம்மிடம் திரும்பி வருவான்.

எனவே அவனைத் தேடும் பணியைக் கைவிடுங்கள் என்றார்.

நாரதர் கூறியதைக் கேட்ட உத்தானபாதன் அரசாங்கத்தில் கவனமின்றி துருவனையே நினைத்துக் கொண்டிருந்தான்.

துருவன் மதுவனம் சென்று யமுனையில் நீராடி, அன்றைய இரவு உபவாசமேற்றான்.



பின்னர் நாரதர் கூறியபடி பகவானை மனத்தில் இருத்தி உபாசிக்கலானான்.

முதல் ஒரு மாதம் மூன்று தினங்களுக்கொரு முறை விளாம்பழம், இலந்தைப்பழம்‌ முதலியவற்றை உண்டு பகவானைப் பூஜித்தான்.

இரண்டாம்‌மாதம் ஆறு தினங்களுக்கொரு முறை உலர்ந்த இலைகளையும், சருகுகளையும் புற்களையும்‌ உணவாகக் கொண்டு பகவானை ஆராதித்தான்.

மூன்றாவது மாதத்தில் ஒன்பது நாள்களுக்கொரு முறை யமுனை நீரை மட்டும்‌ உட்கொண்டு மீண்டும்‌ தியானத்தில் ஆழ்ந்தான்.

நான்காவது மாதம் பன்னிரண்டு நாள்களுக்கொரு முறை சுவாசித்தான்.

ஐந்தாம்‌ மாதம் அவனது நிஷ்டை கலையவே இல்லை. ஒற்றைக்காலில் தூண்போல் அசையாமல் நின்று தியானிக்கலானான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment