Saturday, October 13, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 121 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 65

விதுரர் கேட்டார்.

துருவனுக்கு கிடைத்த பேறு மிகவும் பெரியது. கிடைத்தற்கரியது. இருப்பினும் அவன் ஏன் வருந்தவேண்டும்?
அவனுக்கு ஸாரம் எது ஸாரமற்றது எது என்று நன்கு தெரியுமே.

மைத்ரேயர் பதில் கூறலானார்.

துருவன் சிற்றன்னையின் சொல்லம்புகளால் காயப்பட்டிருந்ததால், அதைக்‌ கருத்தில் கொண்டிருந்தான். பகவானைக் கண்ணெதிரே கண்டபோதும் முக்தியை வேண்டவில்லை. பகவானைக் கண்ணெதிரே கண்டதும் சித்த சுத்தி ஏற்பட்டுவிட்டது. அதனால், முக்தியை வேண்டாது போனோமே என்று வேண்டினான்.

புலனடக்கம் கொண்டவர்களும், யோகிகளும் பல பிறவிகள் எடுத்துப் பலகாலம் தவம் செய்து பகவானைக் கண்டு முக்தியை வரமாகப் பெற்றிருக்கிறார்கள்.

நானோ ஆறே மாதங்களில் பகவானின் திருவடித்தாமரைகளைக் கண்டேன். இருப்பினும் உலகியல் வாசனைகளால் பகவானிடமிருந்து வெகுதூரம் தள்ளப்பட்டேன்.

என்னே ! என் அறியாமை! பகவானை நேருக்கு நேர் கண்ட பின்பும் இப்படிக் கோட்டை விட்டேனே. மாயையில் மாட்டிக்கொண்டேனே,
என்று வருந்தினான்.

விதுரரே! தானாகவே கிடைத்ததைக் கொண்டு த்ருப்தியுறும் தங்களைப் போன்ற பக்தர்கள் பகவானின் திருவடித் தாமரைகளின் மகரந்தத்தையே உண்டு களிப்பவர்கள். பகவானின் பாதஸேவையைத் தவிர வேறெதுவும் வேண்டுவதில்லை.

யமனுலகு சென்றவன் திரும்பி வந்தான் என்றால் யாராவது நம்புவார்களா? அதுபோல் பகவானைக் கண்ட பின் துருவன் நாடு திரும்புகிறான் என்ற செய்தியை உத்தானபாதன் நம்பவே இல்லை. பின்னர் நாரதரின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்து உண்மைதான் என்று பெருமகிழ்ச்சி கொண்டான்.

காடு சென்ற மகன் திரும்பி வரும் அளவிற்கு பாக்யம் செய்திருக்கிறேனா எனக்கு அந்த பாக்யம் கிட்டுமா என்றும் மருகினான்.

பகவானைக் கண்டு திரும்பி வரும் மகனைக் காணப் பேராவல் கொண்டான்‌ உத்தானபாதன்.

அந்தணர்கள், மந்திரி ப்ரதானிகள், தன் குலத்து மூத்தோர், உற்றார் உறவினர், புடைசூழ, பெரிய குதிரைகள் பூட்டிய தங்கத்தேரில் ஏறிக்கொண்டு நகரிலிருந்து கிளம்பினான்.

அரசனின் ஆர்வத்தைக் கண்ட ஸுருசியால் ஏதும் சொல்ல முடியவில்லை போலும். அரசன் ஸுநீதி, ஸுருசி இருவரையும் பல்லக்கில் அழைத்துக்கொண்டு உத்தமனுடன் தேரில் சென்றான் உத்தானபாதன்.

நகரத்தின் அருகிலுள்ள பூங்காவின் அருகில் துருவன் வருவதைக் கண்ட உத்தானபாதன் தேரிலிருந்து கீழே குதித்து பெருமூச்செறிய ஓடிச்சென்று மகனை ஆரத் தழுவிக்கொண்டான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.

இப்போதுள்ள துருவன் முன்பு கண்டவன் அல்லவே. பகவானின் தரிசனம்‌ பெற்று பாவங்கள் அனைத்தும் தொலையப்பெற்று பரம பவித்ரனாக கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் விளங்கினான் குழந்தை.

அவனைக்‌கட்டிக்கொண்டு பலமுறை உச்சி மோந்தான் அரசன். ஆனந்தக் கண்ணீரால் அவனை நீராட்டினான்.

ஆனந்தக்கண்ணீர் குளுமையாகவும்‌ இனிப்பாகவும்‌ இருக்கும். துன்பத்தினால் வரும் கண்ணீர் சூடாகவும் உவர்ப்பாகவும் இருக்கும்.

இவ்வாறு வரவேற்கப்பட்ட துருவன் ஸாதுக்களில் சிறந்தவன் அல்லவா? தந்தையின் பாதங்களிலும் சிற்றன்னை மற்றும் தாயின் பாதங்களிலும் விழுந்து வணங்கி ஆசி பெற்றான்.

தன்னால் வெறுப்புடன் துரத்தப்பட்ட துருவனைக் கண்டு இப்போது ஸூருசிக்குப்‌ பொறாமை ஏற்படவில்லை.

ஏன் அப்படி?

ஒருவர் ஸ்வாமியையோ குருவையோ தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினால் அவருடன் அந்த ஸ்வாமியின் ஸாந்நித்யம்‌ கூடவே வரும். ஸ்வாமி ஸாந்நித்யம் கூடவே இருக்கும்போது அவரைக்‌கண்டு வெறுப்போ மற்ற உணர்வுகளோ தோன்றாது. அவர்கள் வரவேற்கப்படுவர்.

இதே காரணத்தினால் தான் நம் பெரியோர் கோவிலுக்குப் போனால் வழியில் எங்கும் செல்லாமல் நேராக வீடு திரும்பவேண்டும் என்று கூறுவார்கள். அப்படி வந்தால் நம்முடன் வரும் பகவானின் ஸாந்நித்யத்தோடு மஹாலக்‌ஷ்மியும் வருவார். எனவே இருவரையும் நேராக வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்பதாக கர்ணபரம்பரையாக நம்பிக்கை உண்டு.

துருவனும் உத்தமனும் அன்பு‌மிகுந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

ஸுநீதி துருவனைக் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள். அந்தணரும்‌ மற்ற பெரியோரும் தாயே! நீ உலகைக்‌காக்கும் பெருவீரனை மகனாகப் பெற்றாய் என்று அவளைப் போற்றினர்.

உத்தானபாதன் துருவனையும் உத்தமனையும் ஒரு பெண் யானை மேல் ஏறச்செய்து ஸகல மரியாதைகளுடன் நகருக்குள்‌ அழைத்து வந்தான்.

நகரெங்கும் தோரணங்கள், வாழைமரங்கள், தென்னங்குலைகள், ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எல்லா வீட்டு வாயில்களிலும் குத்து விளக்குகள்‌ ஒளி வீசின. அழகழகான கோலங்கள்‌ போடப்பட்டிருந்தன. வீடுகளில் தங்ககோபுரங்கள் விளக்குகளால் ஒளிர்ந்தன. மாடவீதிகளும் மற்ற வீதிகளும் நன்கு அலங்கர்க்கப்பட்டு சந்தன மணம் கமழ புஷ்பங்கள் வாரி இறைக்கப்பட்டிருந்தன.

வீதிகளில் ஆங்காங்கு பெண்கள் நின்றுகொண்டு வெண்கடுகு, அக்ஷதை, மற்றும் புஷ்பங்களை துருவன் மீது தூவி மனதார ஆசி வழங்கினர்.

அரண்மனைக்குத் திரும்பிய துருவன் ஸ்வர்கத்தில் வாழும் தேவர்கள் போல் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வாழ்ந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment