Sunday, May 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 262

பகவான் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த பலியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. கலங்கிய கண்களோடு, நா தழுதழுக்க இரு கரம் கூப்பி பகவானிடம் கூறலானான்.

நான் இன்னும் தங்களை வணங்கவே இல்லையே. முயற்சிதானே செய்தேன். தங்களையே எப்போதும் எண்ணும் பக்தர்களுக்கும் பெரும்பேற்றை நாயினும் கடையேனான எனக்கருளினீரே.

என்று கூறி பலமுறை வணங்கினான். வருணபாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, சுற்றம் சூழ மகிழ்ச்சியுடன் ஸுதல லோகம் சென்றான்.

தன் குலப்பெருமையை விளங்கச் செய்த பலியைக் கண்டு மகிழ்ந்த ப்ரஹலாதன் பகவானிடம் கூறினார்.

பகவானே! இது போன்ற திருவிளையாடலை ப்ரும்மாவும் பெற்றதில்லை. திருமகளுக்கும் இல்லை. பரமேஸ்வரனுக்கும் கூட இல்லை. அசுரர்களான எங்களுக்குப் போய் வாயிற்காப்போனாக நிற்கிறீர்களே.

எப்போதும் தங்கள் திருவடிகளைப் பற்றுபவர்களுக்கே இல்லாத பேறு எங்களைப் போன்ற தீயவர்க்கு எவ்வாறு கிடைத்தது? தங்களின் அருட்பார்வை கிட்ட நாங்கள் என்ன செய்துவிட்டோம்?

தாங்கள் அனைத்திலும் அந்தர்யாமியாக விளங்குபவர். தங்களுக்கு தெரியாதது ஒன்றுமே‌இல்லை. வேண்டுதல் வேண்டாமையற்றவர். சம நோக்குடையவர். இருப்பினும் தங்களது இந்த லீலை எனக்குப் புரியவில்லை.
என்றார்.

பகவான் கலகலவென்று சிரித்தார்.
ப்ரஹலாதா! நீ ஸுதல லோகம் செல். அங்கு உன் பேரனுடன் ஆனந்தமாய் இரு. உங்கள் அருகில் கையில் கதையேந்தி நிற்பவனாக என்னை எப்போதும் காண்பாய்.
என்றார்.

ப்ரஹலாதன் பகவானை வணக்கிவிட்டு பலியுடன் கிளம்பினார்.
அதன் பின் வாமன பகவான் ரித்விக்குகள் சூழ அங்கிருந்த சுக்ராசார்யாரிடம் யாகத்தைப் பூர்த்தி செய்யும்படி கூறினார். வேள்வியின் நடுவே ஏற்படும் தடைகளும் குறைகளும் ப்ரம்மவித்துகளின் கடாக்ஷத்தினால் நீங்கும். என்றார்.

சுக்ராசார்யார் கூறலானார்.
எம்பெருமானே! தாங்களே ஸகல கர்மாக்களின் நியாமகர். பயனை அளிப்பவர். வேள்வி ஸ்வரூபமும் தாங்களே. தன் எல்லாச் செல்வங்களையும் பலி மனமொப்பி  அளித்திருக்கும் போது குறை எப்படி ஏற்படும்? ஒருக்கால், மந்திரங்களின் ஸ்வரக்குறைபாடு, தவறாக உச்சரித்தல், இடம், காலம், தக்ஷிணை, தானம், ஹவிஸ் ஆகியவற்றால் குறைபாடு ஏற்படுமாயின் அவை தங்களுடைய திருநாமத்தைச் சொல்வதாலேயே நீங்கிவிடும்.

அனைத்துக் குறைகளையும் நீக்குவது தங்கள் திருநாமம் அல்லவா?
இருப்பினும் தங்கள் கட்டளைக்காக செய்கிறேன்.
என்றார்.

இவ்வாறு பகவான் உபேந்திரனாகப் பிறந்து பலியிடமிருந்து மூன்றடி மண் பெற்று அதை இந்திரனுக்கு அளித்தார்.

இதன் பின் ப்ரும்மதேவர், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், பித்ரு கணங்கள், மனுக்கள், ப்ரஜாபதிகள், பரமேஸ்வரன், ஆகியோர் சூழ, கச்யபர், அதிதி ஆகியோர் மனம் மகிழ, உலக நன்மைக்காக லோகபாலர்களின் தலைவராக வாமன பகவானுக்குப் பட்டபிஷேகம் செய்து வைத்தார்.

தேவர்கோனாகிய இந்திரன், ஸகல மரியாதைகளுடன் அவரை விமானத்திலேற்றி ஸ்வர்க லோகம் அழைத்துச் சென்றான்.

இந்திரனுக்கு ஸ்வர்கமும் கிடைத்தது. வாமனனின் நிழலில் வாழும் பாக்யமும் கிடைத்தது. நீங்காத மகிழ்ச்சி பெற்றான். அனைவரும் தத்தம் உலகங்களுக்குச் சென்றனர்.

ஸ்ரீ சுகர் கூறினார்.

பரீக்ஷித்! வாமனரின் சரிதத்தை முழுமையாக உனக்குக் கூறினேன். இதைக் கேட்பவர் ஸகல பாவங்களிலிருந்தும் விடுபடுவர்.

பகவானின் திருவிளையாடல்கள் எல்லையில்லாதவை. அவற்றை முழுதும் கேட்டு முடிக்க நினைப்பவன், பூமியிலுள்ள மண் துகள்களை எண்ணுபவனுக்குச் சமம்.

இவ்வாமன அவதாரக் கதையைக் கேட்பவன் உயர்ந்த கதியைப் பெறுகிறான். வேள்விக்கால விராமங்களில் இக்கதையைக் கேட்டால், அக்கர்மம் ஸத்கர்மம் ஆகிறது. அனைவர்க்கும் பயனளிப்பதாகிறது. அறநெறி வழுவாது செய்ததாகவும் ஆகிறது
என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment