Thursday, May 23, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 260

வாமனரிடம் சமருக்குச் சென்ற அசுரர்கள் அனைவரையும் தடுத்து அவர்களை ரஸாதலம் அனுப்பினான் பலி.

பின்னர், பகவானது உள்ளத்தை அறிந்த கருடன், பலியை வருணபாசம் கொண்டு கட்டினார்.

பலியின் செல்வத்தைக் கவர்வதன் மூலம், அவனது மமதையை அழிக்கவும், அவன் உடலைத் தன் திருவடிகளால் அளப்பதன் மூலம், அவனது அஹங்காரத்தைச் சிதைக்கவும், சிறந்த ஸத்யசந்தன் என்று அவன் புகழை வளர்க்கவும் திருவுளம் கொண்டார் பகவான்.

பலி கட்டப்பட்டபோது, எட்டுத் திசைகளிலிருந்தும் அதிர்ச்சிக் குரல்கள் ஒலித்தன.

அவனைப் பார்த்து வாமனர் கூறினார்.
நீ எனக்கு மூன்றடி மண் தருவதாய் வாக்களித்தாயே. ஈரடிகளால் அனைத்து உலகங்களையும் அளந்துவிட்டேன். மூன்றாம் அடிக்கு மண் எங்கே? அதற்கென்ன செய்யப்போகிறாய்?

சூரியனின் வெப்பம் செல்லும் வரையிலும், சந்திரனின் ஒளி செல்லும் வரையிலுமான உலகங்கள் முழுதையும் அளந்தாயிற்று. மூன்றாவது அடி நிலம் தரவில்லையானால், நீ நரகம் செல்ல நேரிடும். உன் குருவுக்கும் நீ நரகம் செல்வது சம்மதம்தான்.

உலகங்கள் அனைத்தும் உன்னுடையவை. மூவுலகிற்கும் நீதான் ஒரே தலைவன் என்று கர்வம் கொண்டிருந்தாயே. இப்போது வாக்களித்தபடி, ஓரடி நிலம் தராததால் நரகம் செல்லப்போகிறாய். என்றார்.

இவ்வாறு பலியின் மனோபலத்தைக் குலைக்க முயன்றார் பகவான்.
ஆனால், வருணபாசத்தில் கட்டப்பட்டு, பகவானாலேயே மிரட்டப்பட்ட போதும், பயமின்றி தீரனாக நின்ற பலி, தைரியமாகப் பேசினான்.

தேவாதிதேவனே! என் சொற்கள் பொய்யாக வேண்டா. அவற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள். என் தலைமேல் தங்களது திருவடியை வைத்து, என்னை மூன்றாவது அடி நிலத்திற்கொப்பாய் தங்கள் சொத்தாய் ஏற்றுக்கொள்ளுங்கள். என் வாக்கு உண்மையாகட்டும்.

நரகத்தைக் கண்டு அஞ்சவில்லை. சொத்தும் பதவியும் பறிபோவதைப் பற்றியும் வருத்தமில்லை. தங்கள் தண்டனைக்கும் பயமில்லை. யாசகன் கேட்டதைத் தருகிறேன் என்று சொல்லி, பின் ஏமாற்றினேன் என்று உலகம் கூறும். அப் பழிச்சொல்லுக்கே அஞ்சுகிறேன்.

சான்றோர்கள் அளிக்கும் தண்டனை வாழ்விற்கு உகந்தது. அதை நண்பரோ, பெற்றோரோ, உடன் பிறந்தவரோ தரமாட்டார்கள்.

செல்வம், குடிப்பிறப்பு, வலிமை ஆகியவற்றால் செருக்குற்ற எங்களுக்கு ஆசானாகி வந்து நல்ல பாடம் புகட்டினீர்கள். என் கண்களைத் திறந்தீர்கள்.

யோகிகளும், பக்தர்களும் அனவரதமும் தங்களைப் போற்றி எந்நிலையை அடைகிறார்களோ, அவ்வுயர்ந்த நிலையை, பாரபட்சமின்றி, பகைமை கொண்ட எங்களுக்கும் அளிக்கிறீர்கள்.

எவரும் புரிந்துகொள்ள இயலாத வண்ணம் எதிர்மறையாக அருள்கிறீர்கள். தாங்கள் என்னைக் கட்டியதால் வெட்கமோ, துன்பமோ இல்லை. நான் தன்யனானேன்.

தங்களது பக்தர்களுள் முதல்வரான ப்ரஹ்லாதர் தன் தந்தையால் பலவாறு துன்புறுத்தப்பட்டபோதிலும், தன் வாழ்வைத் தங்களிடமே ஒப்புவித்திருந்தார்.
இவ்வுடல், செல்வம் ஆகியவை ஒருநாள் என்னைவிட்டுப் போகத்தான் போகிறது. உலகோரின் கண்களுக்குத் தாங்கள் என் பகைவரே‌ ஆனாலும், என் பூர்வ புண்யத்தாலும், முன்னோரின் ஆசியாலும், விதியாலும், என் கர்வத்தை அழிக்க தாங்கள் என் முன்னால் வந்துள்ளீர்கள். என்றான்.

இவ்வாறு பலி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்த ஸாம்ராஜ்ய சக்ரவர்த்தியான ப்ரஹ்லாதன் அங்கு வந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment