Sunday, May 5, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 253

பிறப்பே இல்லாத பகவான் அதிதிதேவியிடம் நான்கு கரங்களுடன் அவதாரம் செய்தார். தாமரை போன்ற அவயவங்கள். அரையில் மஞ்சள் பட்டாடை. நீலமேக வண்ணம், மகரகுண்டலங்கள் ஒளி பட்டு மிளிரும் அழகிய கன்னங்கள். தலையில் ரத்னகிரீடம், தோள்வளைகள், திருமார்பில் ஸ்ரீ வத்ஸம் என்னும் மரு. இடுப்பில் தங்க ஒட்டியாணம், கால்களில் கொலுசுகள். கழுத்தில் அழகிய வனமாலை, கழுத்தில் பளீரிடும் அழகிய கௌஸ்துப மணி, இவ்வாறு பகவானின் ஒளியால் கச்யபரின் ஆசிரமத்தில் இருள் நீங்கியது.

பகவான் அவதாரம் செய்தபோது எண்டிசைகளும் தெளிவாக இருந்தன. நதிகள், தடாகங்கள் ஆகியவை தெளிந்திருந்தன. எல்லாப் பருவங்களுக்கேற்ற பூக்களும் ஒரே சமயத்தில் மலர்ந்திருந்தன. அனைத்து லோகங்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தன. ஆவணி மாத வளர்பிறை துவாதசியில் சந்திரன் திருவோண நட்சத்தில் இருக்கும் திருநாளில் பகவான் வாமனராகத் திருவவதாரம் செய்தார். அச்வினீ முதலிய நட்சத்திரங்களும், குரு சுக்ரன் முதலிய கோள்களும், மங்கலமளிக்கும் ஸ்தானங்களில் இருந்தன.

வாமனர் பிறந்த நன்னாள் விஜய துவாதசி என்று அழைக்கப்படுகிறது. பகவான் அவதரித்தது உச்சி வேளை. சூரியன் உச்சியில்‌ ப்ரகாசித்தது.

சங்கம், துந்துபி, ம்ருதங்கம், பணவம் ஆனகம்‌ முதலிய வாத்யங்கள் ஒலித்தன. கந்தர்வர்கள் பாட, அப்ஸரஸ்கள் ஆடினர். ரிஷிகள், தேவர்கள், மனுக்கள், பித்ருக்கள் ஆகியோர் துதித்தனர்.

அனைவரும் அதிதி தேவியின் மேல்‌பூமாரி பொழிந்தனர்.
அதிதியும் கச்யபரும் மிகவும் மகிழ்ந்தனர். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பகவான் வாமனராகத் தன் உருவை மாற்றிக்கொண்டார்.


ஐந்து வயதுக் குழந்தையாக வாமனராகத் தோன்றிய பகவானைக் கண்டு மகிழ்ந்த முனிவர்கள், கச்யபரை முன்னிட்டுக்கொண்டு குழந்தைக்கு ஜாதகர்மா முதலியவற்றைச் செய்துவைத்தனர்.

பின்னர் அனைவரும் சேர்ந்து அந்த தெய்வக் குழந்தைக்கு உபநயனம் செய்துவைத்தனர்.

காயத்ரியின் தேவதையான சூரியனே ப்ரும்மோபதேசம் செய்வித்தார். தேவகுருவான ப்ருஹஸ்பதி பூணூலையும், கச்யபர் மேகலையையும், பூமாதேவி மான் தோலையும், சந்திரன் பலாசதண்டத்தையும், அதிதி தேவி கௌபீனத்தையும், விண்ணுலக தேவதை குடையையும் கொடுத்தனர்.

ப்ரும்மா கமண்டலுவையும், ஸப்தரிஷிகள் தர்பைகளையும், ஸரஸ்வதி அக்ஷமாலையையும், குபேரன் பிக்ஷா பாத்திரத்தையும் வழங்க லோகமாதாவான அன்னபூரணி பிக்ஷையிட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment