Friday, May 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 261

தன்னொளி பொருந்தியவரும், தாமரையிதழ் போன்ற அழகிய கண்களை உடையவரும், முழங்கால் வரை நீண்ட கைகளை உடையவரும் காண்பவரின் மனம் கவரும் தோற்றமுடையவரும் தன் பாட்டனாருமான ப்ரஹலாதனை மஹாபலி கண்டான்.

வருணபாசத்தால் கட்டப்பட்டிருந்ததால் அவனால் ப்ரஹலாதனை முறைப்படி வரவேற்க இயலவில்லை. அவருடைய பேரனாக இருந்துகொண்டு, அஹங்காரத்தால் தவறிழைத்ததை எண்ணி வெட்கித் தலை குனிந்து வணங்கினான்.

ப்ரஹலாதன், ஸாதுக்களை வாழ்விக்கும் பக்தவத்ஸலனான வாமன மூர்த்தியின் அருகில் சென்று விழுந்து வணங்கினார்.

பெருமானே! இந்திரப் பதவியை பலிக்குத் தந்தது தாங்களே தான். இப்போது பறித்துக்கொண்டவரும் தாங்களே. இரண்டுமே அழகு. ஆன்மாவை அரிக்கும் அஹங்காரத்திலிருந்தும், செல்வத்திலிருந்தும் பலியைக் காத்தீரே! இது தங்களது ஒப்பற்ற பேரருளேயாகும்.
தங்களை வணங்குகிறேன் என்றார்.

பலியின் மனைவி விந்தியாவளியும் பகவானைப் புகழ்ந்து வணங்கினாள்.
அனைத்தையும் கண்ட ப்ரும்மா கூறலானார்.

அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் எம்பெருமானே! இந்த பலி, தனது என்ற அனைத்தையும் தங்களுக்குக் கொடுத்து விட்டான். தன் ஆன்மாவையும் தங்களுக்கே அர்ப்பணித்தான். இவ்வளவு செய்தும் உறுதி குலையாமல் நிற்கிறான். இவன் தங்கள் கருணைக்கு ஏற்றவன். இவனைக் கட்டவேண்டாம். இவனது கட்டுக்களை அவிழ்த்துவிடுங்கள்.

நல்லெண்ணத்துடன் பூஜை செய்வதில் ஏழ்மையைக் காட்டாமல், அர்க்யம், பாத்யம் அளித்து அருகம்புல்லைக் கொண்டு தங்களைப் பூஜை செய்தாலும்கூட ஒருவன் முக்தியை அடைகிறான்.

அப்படியிருக்க, இந்த பலி, மன உறுதியோடு, மனமுவந்து தன்னுடைய அனைத்தையும் தங்களுக்குக் கொடுத்துவிட்டானே. பரமபாகவதனான அவன் துன்புறுத்தலுக்கு அருகதையற்றவன்.

வாமன பகவான் சிரித்தார்.
ப்ரும்மதேவரே! நான் யாருக்கு அருள் செய்ய விரும்புகிறேனோ, அவர்களது செல்வத்தை முதலில் பறித்துவிடுவேன்.

ஏனெனில் செல்வச் செருக்கினால்தான் மதம்‌கொண்டு, என்னையும், உலகத்தாரையும் அவமதிக்கத் துவங்குகிறான்.

ஜீவன் கர்மாக்களுக்காட்பட்டு கலங்கி அடிமையாகப் பற்பல பிறவிகள் எடுத்துச் சுழலும்போது ஏதோ ஒரு முறை எனதருளால் மனிதப்பிறவி எடுக்கிறான்.

மனிதப் பிறவி கிடைத்தாலும், நற்குடிப்பிறப்பு, நற்செயல், அழகு, கல்வி, நல்லறிவு, பெருஞ்செல்வம் ஆகியவை கிடைப்பது கடினம். இவையெல்லாம் கிடைத்தாலும் ஒருவன் செருக்கடையாமல் இருப்பானாகில் அது எனதருள் என்று அறிக.

மேற்சொன்ன அனைத்தும் மனிதனின் செருக்குக்குக் காரணமாகின்றன. இவற்றால் அவனது மேன்மைக்கான சாதனைகளிலிருந்து தவறுகிறான். என்னைச் சரண் புகுந்தவன் இவற்றால் மயங்கமாட்டான்.

தானவர்கள், தைத்யர்கள் ஆகிய இரு குலங்களுக்கும் ஒப்பற்ற தலைவனான இவன், மிகவும் முன்னேறியவன். அவர்களது புகழைப் பரவச் செய்தவன். சத்யசந்தன். மன உறுதி மிக்கவன். எனது மாயையையும் வென்றுவிட்டான்.

இவனுக்கு நான் பெரும்பதவி அளிக்கப் போகிறேன். எனது பக்தனான இவன் ஸர்வாணி மன்வந்திரத்தின் இந்திரனாக விளங்குவான்.

அதுவரை ஸுதல லோகத்தில் வசிப்பான். அங்கு வசிப்பவர்கள் என் கருணைக்குப் பாத்திரமானவர்கள். அவர்கள் நோயற்ற உடல், கவலையற்ற மனம், களைப்பின்மை, சோம்பலின்மை ஆகியவற்றுடன் பகைவர்களே இன்றி இன்பமாக வாழக் கூடியவர்கள்.

பலி! நீ உன் சுற்றத்தாருடன் ஸுதலலோகம் செல். இனி எந்த லோகபாலர்களாலும் உன்னை வெல்ல இயலாது. உன் கட்டளையை மீறுபவர்களை என் சுதர்சனம் தண்டிக்கும்.

உனக்கும் உன் சுற்றத்தாருக்கும், செல்வங்களுக்கும் நானே காவலாக உன் அருகிலேயே எப்போதும் நிற்பேன். என்னை எப்போதும் பார்ப்பதாலேயே உனக்கு தானவர்கள் சேர்க்கையால் ஏற்பட்ட அசுர குணங்கள் அடியோடு அழிந்துபோகும்
என்று அருளினார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment