Monday, May 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 257

தானம் கொடுக்கப்போன பலியை அசுர குருவான சுக்ராசார்யார் தடுத்தார். குரு சொல்வதைக் கேட்டு பலி மறுமொழி ஏதும் கூறாமல் சற்று நேரம் அமைதியாகச் சிந்தித்தான். பின்னர் கூறலானான்.

குருவே! தங்களுக்கு வணக்கம். நீங்கள் கூறியதனைத்தும் உண்மைதான். ஆனால், மஹாத்மாவான ப்ரஹலாதனின் பேரனாகிய நான், தானம் தருவதாக வாக்களித்துப் பின் எப்படி வஞ்சகனைப் போல் மறுக்க இயலும்?

பொய்யைக் காட்டிலும் பெரிய அதர்மம் இல்லை. வஞ்சக எண்ணத்துடன் பொய் சொல்பவனைத் தவிர மீதி அனைத்தையும் தாங்கும் சக்தி உண்டு என்று பூமாதேவியே கூறுகிறாள்.

கொடுத்த வாக்கை மீறுவதற்கே பயப்படுகிறேன். நரகத்திற்கோ, துன்பத்திற்கோ, அரச பதவி பறிபோகுமென்றோ, மரணம் நேருமென்றோ கூட அஞ்சவில்லை.

எப்படி இருந்தாலும் பணம் சொத்துக்கள் அனைத்துமே மரணத்தின்போது நீங்கத்தான் போகின்றன. அதை நான் உயிருடன் இருக்கும்போதே தானமாகக் கொடுப்பதில் என்ன தவறு? அப்படி தானம் கொடுப்பதால், ஒரு அந்தணனை மகிழ்விக்கமுடியவில்லை என்றால், நான் அரசனாயிருந்து என்ன பயன்?

ததீசி, சிபி முதலியவர்கள் தானமாக நான் என்பதின் ஆதாரமான தங்கள் உயிரையே கொடுத்தார்கள். அப்படியிருக்க, எனது என்பதன் ஆதாரமான சொத்தைக் கொடுக்க எனக்கென்ன தயக்கம்?

புறமுதுகு காட்டாத பல அரசர்களின் ஆயுளைத்தான் காலம் விழுங்கியது. புகழை அல்ல. ஆனால், ஸத்பாத்திரம் கிடைத்தும், தானம் செய்பவர்கள் வெகு சிலரே.

ஒரு யாசகன் விரும்பியதைக் கொடுத்து அதனால் ஏழ்மை வந்தால், அது புகழையே தரும். தங்களைப் போன்ற அந்தணர்களுக்குக் கொடுப்பதால் எனக்கு நன்மையே ஏற்படும்.

எனவே நான் இந்த ப்ரும்மச்சாரியின் விருப்பத்தை நிறைவேற்றப்போகிறேன்.

வந்திருப்பது பகவானே என்றாலும் நிச்சயம் கொடுப்பேன். குற்றமற்ற என்னை அவர் கட்டினாலும், எதிர்வினையாற்றமாட்டேன்.

பகைவரே ஆனாலும், ஸர்வேஸ்வரனான பகவானே வந்து யாசிக்கும்போது கொடாமல் இருக்கலாகுமா? அவர் போர் செய்தால் என்னை வெல்ல முடியாதென்று அறிந்தே தானம் கேட்டு வந்திருக்கிறார். எனவே, இதுவும் எனக்குப் பெருமைதான். என்றான்.

குற்றுயிரும் கொலையுயிருமாக அடிபட்டு தன்னால் காப்பாற்றப்பட்ட தன் சீடன் மரியாதையின்றி, கட்டுப்பாட்டை இழந்து தன் சொல்லை மீறி நடக்க முற்பட்டதும், அவன் மீது தவறில்லை என்றறிந்தபோதும்
அறிவிலியான நீ விரைவில் உன் அனைத்து செல்வங்களையும் இழக்கக்கடவாய்
என்று அவனைச் சபித்தார் சுக்ராசார்யார்.

அதைக் கேட்டும் மனம் கலங்காமல், தானம் கொடுக்க முற்பட்டான். வாமனரைப் பூஜித்து, மூன்றடி மண்ணை தானம் செய்ய நன்னீரை எடுத்தான். அப்போது பலியின் மனைவி விந்த்யாவளி தீர்த்த பாத்திரத்தை வாங்கிக்கொண்டு வாமனருக்கு பாதத்தில் நீர் வார்த்தாள்.

அகில உலகையும் புனிதமாக்கும் அத்திருவடிகளைக் கழுவி அப்புனித நீரை பலி தன் தலையில் தெளித்துக்கொண்டு, மனைவிக்கும் தெளித்தான்.
அப்போது வானத்திலிருந்து தேவர்கள் அவன் மீது மலர்மாரி பொழிந்தனர்.

பகைவன் என்ற உண்மையை அறிந்தபின்னும் மூன்றடி மண்ணைக் கொடுப்பதாகச் சொல்லி மூவுலகையும்‌ கொடுத்தானே என்று வியந்தனர்.

அப்போது அனைவரும் வியக்கும் வண்ணம், பகவானின் முக்குண வடிவான வாமன வடிவம் வளரத் துவங்கியது.
பேருருவம் கொண்ட அத்திருமேனியில், மண், விண், திசைகள், ஸ்வர்கம், பாதாளம் கடல்கள், விலங்கினங்கள், பறவையினங்கள், மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் அனைத்தும் தென்பட்டன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment