Saturday, February 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 397

கண்ணன் வேணுகானம் செய்யும் அழகை ஒரு அத்யாயம்‌ முழுதும் வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

ஒரு புகழ்பெற்ற கலைஞரின் இசை நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்றால், அவர் வருவதற்கு முன் அரங்கத்தைத் தயாராக வைப்பார்கள். மற்ற அனைத்து ஏற்பாடுகளும் பார்த்து பார்த்து செய்யப்படும். அரங்கம் குளிரூட்டப்பட்டு, வாசனை திரவியங்கள் மணக்க சித்தமாயிருக்கும்.

 அதுபோல் கண்ணன் குழலூதுவதற்காக வரப்போகிறான் என்றால் இயற்கை அவனுக்காக வனத்தைத் தயார் படுத்திவிடுகிறது.

மழைக்காலம் முடிந்து எங்கும் பசும்புற்கள் முளைத்திருக்கின்றன. மரங்களும் கொடிகளும் நன்கு பூத்து அவற்றின் நறுமணம் ப்ருந்தாவனம் முழுதும் வீசுகிறது. ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான பூக்கள் மலர்ந்தால் அவற்றின் நறுமணம் எப்படி இருக்கும்? அதைச் சுமந்து கொண்டு மெல்லிய இதமான காற்று வீசி‌ எங்கும் பரப்பிவிடுகிறது.

வண்டுகள் பூக்களின் மீது அமர்ந்து ரீங்காரமிடுவது ஸ்ருதி சேர்த்து ஆரோஹணம் அவரோஹணம் பாடுவது போல் உள்ளது.

பறவைகள் சேர்ந்திசைக்குத் தயாராக கூவிப் பார்த்துக்கொள்கின்றன. நீரோடைகளும் அருவிகளும் அவற்றை எதிரொலிக்கின்றன.

இவை அனைத்தையும் கேட்ட கோபியர் 
கண்ணன் எப்படி அழகாகக் குழலூதுவான் என்று வர்ணிக்கத் துவங்கினர்.

தலையில் மயில்பீலி அசைகிறது. காதுகளில் கொன்றைப்பூ, ஐந்து விதப் பூக்கள் மற்றும் இலைகளால் ஆன வைஜயந்தி மாலை கழுத்தில் அசைகிறது. 
(வைஜயந்தி மாலை என்பது செடியில் மலரும் மலர், கொடிகளில் மலரும்‌ மலர், நீரில் மலர்வது, மரங்களில் மலரும் மலர் வகை, மற்றும் இலை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பதாகும்)

சுற்றி கோபச் சிறுவர் கூட்டம், முல்லைப்பூப் போன்ற விரல்கள் புல்லாங்குழலின் துவாரங்களில் விளையாட மிக ஒயிலாக நடந்து கண்ணன் ப்ருந்தாவனத்தில் நுழைகிறான்.

இவ்வாறாக அவனை தியானம் செய்த கோபிகள் மானசீகமாக கண்ணனை அணைத்துக்கொண்டனர்.

கண் பெற்றதன் பயன் இந்தக் கண்ணனைக் காண்பதேயாகும். அவனது கடைக் கண் பார்வை நம் மேல் விழுவதும், புல்லாங்குழலைப் போல் அவனோடு ஒட்டுவதுமே பிறவி எடுத்ததன் பயன்.

பசுக்களின் குளம்படியால் எழும் புழுதி படர்ந்த முகம், கலைந்த தலை, முத்து முத்தாய் வியர்வை பூக்கும் முகம், அசையும் குண்டலங்கள், தலையில் மாந்தளிரும், மயிலிறகுக் கொத்தும், அல்லிப்பூ மாலையசைய ஒரு தேர்ந்த கலைஞனைப்போல் ஆடிப்பாடிக்கொண்டு வருகின்றனர் பலராமனும் கண்ணனும்.

ஆண்டாள் பெருமாளைக் காதலித்ததால் சங்குடன் வழக்குப் படித்தாள். இங்கு கோபியர் புல்லாங்குழலுடன் வழக்குப் படிக்கின்றனர்.

இந்தப் புல்லாங்குழல் என்ன பாக்யம் செய்ததோ.‌ கோபிகைகளான நம் எல்லாருக்கும் சொந்தமான கண்ணனின் இதழமுதத்தை தான் மட்டுமே இஷ்டம்போல் பருகுகிறது. மூங்கில் மரங்கள் தம் இனத்தில் ஒருவனுக்கு வந்த பேற்றை நினைத்து மேனி சிலிர்க்கின்றன.

ப்ருந்தாவனம் முழுவதும் கண்ணன் தன் பாத அச்சுக்களை வைத்திருக்கிறான். அதனால் பெரும் செல்வம் பெற்று விளங்குகிறது. மயில்கள் கண்ணனுக்கு முன்பாக நின்று அவனது குழலிசைக்கேற்ப தோகை விரித்து ஆடுகின்றன.

மற்ற விலங்குகளும் பறவைகளும் குழலிசையில் மயங்கி அசைவற்று நிற்கின்றன.

பெண்மான்கள் தங்கள் அன்பு முழுவதையும் வெளிப்படுத்துமாறு கண்ணனை நோக்குகின்றன. ஹரிணி என்றால் பெண்மான். க்ருஷ்ண ஸாரம் என்பது ஆண்மான். அவை தங்கள் கணவர்களையும் கண்ணனைக் காண அழைக்கின்றன. 

வானத்தில் செல்லும் தேவர்களும் கந்தர்வர்களும் குழலிசையைக் கேட்டு மயங்கி மயங்கிக் கீழே விழுகின்றனர்.

காட்டிலுள்ள அனைத்து விலங்குகளும் கண்ணனின் திருவடியைச் சுற்றி அமர்ந்திருக்கின்றன.
பசுக்கள் காதுகளை மேலே‌ நிமிர்த்தி  கிண்ணம்‌போல் ஆக்கிக்கொண்டு ஆடாமல் அசையாமல்  குழலிசையைப் பருகுகின்றன. மேய்ந்த புற்களை விழுங்கும் நினைவின்றி கடைவாயில் வழியவிடுகின்றன.

முனிவர்கள் எல்லாரும் பறவை உருக்கொண்டு வந்தார்களோ என்னும்படியாக அவை மரங்களின் மீது அசையாமல் கண்களை மூடி இசையை ரசிக்கின்றன.

யமுனை தன் வேகத்தை அடக்கிக்கொண்டு இசைக்கு ஏற்றபடி சலசலக்கிறாள். கண்ணனின் திருவடியில் சேர்க்க மலர்களைக் கொண்டுவருகிறாள். 

மேகங்கள் பன்னீர் தெளிப்பதைப் போல் இதமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சாரல் தெளிக்கின்றன.

கண்ணன் நடந்த புற்களின் மீது அவன் பாதங்களில் பூசிய நலங்கின் சிவந்த சாந்துப்பொடி ஆங்காங்கே விழுந்திருக்கிறது.
வனத்தில் வசிக்கும் வேடுவப் பெண்கள் அந்தக் குங்குமத்தை எடுத்துப் பூசிக்கொள்கின்றனர்.

கண்ணன் செல்லும் பாதையில் இருக்கும் முட்களை காற்று அப்புறப்படுத்துகிறது. கண்ணன் அவ்வழிச் சென்றது அம்முட்கள் அழுகின்றனவாம். காற்றை அழைத்து எங்களைக் கண்ணனின் பாதம் பட்ட இடத்தில் மீண்டும் கொண்டு சேர்த்துவிடு என்று கெஞ்சுகின்றனவாம்.

கோவர்தன மலையை பெரிய ஹரி பக்தர் என்று குறிப்பிடுகின்றனர் கோபியர்.

பக்தரின் ஹ்ருதயத்தில் பகவான் இருப்பான். அதுபோல் கோவர்தன மலையில் நடுவில் ஒரு குகை உண்டு. கண்ணன் அடிக்கடி அதனுள் சென்று அமர்ந்து கொள்வானாம். பக்தருக்கு பகவானின் லீலைகளை நினைந்து அடிக்கடி புளகாங்கிதம் ஏற்படும். அதுபோல் மலைமேல் வளந்ர்திருக்கும் புற்கள் கோவர்தனம் புளகாங்கிதமடைவதால் விளைகின்றனவாம். பக்தனுக்கு அடிக்கடி பகவத் குணத்தை நினைந்து  ஆனந்தக் கண்ணீர் வரும். அதுபோல் கோவர்தனத்திலிருந்து  அருவி கொட்டுகிறதாம். ஹரி பக்தர் எப்போதும் தன்னை நாடி வருபவர்க்கு உணவளித்து உபசாரங்கள் செய்வார். கோவர்தனமும் தன்னை நாடி வருபவர்க்கு மரங்களிலிருந்து பழங்களையும், கிழங்குகளையும் கொடுக்கிறதாம். எப்போதும் கண்ணனின் பாத ஸ்பர்ச சுகத்திற்காக ஏற்கும் பக்தனாக கோவர்தன மலை வர்ணிக்கப்படுகிறது.

கண்ணனின் குழலிசை கேட்டு அசையும் விலங்குகள் எல்லாம் சிலையாகி நிற்க, அசையாத மரங்களும், மலைகளும் புல்லரித்து நிற்கின்றன. இது விந்தையிலும் விந்தை அல்லவா?

காலையில் மாடு‌மேய்க்கக் கிளம்பும் கண்ணனைக் கண்‌மறையும் வரை கண்டபின், 
அவன் குழலூதும் அழகை கோபியர் மாற்றி மாற்றிப் பாடிக்கொண்டிருந்தனர். அவ்வாறிருக்கையில் அவர்களுக்குப் பொழுது போவதே தெரியவில்லை. மாலையானதும் கண்ணன் திரும்பி வரும்வரை உள்ளேயே செல்லாமல்  வாசலிலேயே நின்றுகொண்டு கண்ணன் புகழைப் பாடுவதிலேயே அவர்களது நாள் கழிந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment