Thursday, February 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 392

காளியனை அடக்கிவிட்டுக் கண்ணன் கரைக்கு வரும் சமயம் நன்றாக இருள் சூழத் துவங்கிவிட்டிருந்தது.

இறைவன் கருணையால் கண்ணன் காக்கப்பட்டான் என்று மிகவும்‌ மகிழ்ந்த‌ நந்தன் அப்போதே நிறைய தானங்களைச் செய்தான்.

யசோதையின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்ணனை மடியிலமர்த்திக்கொண்டு பலவாறு கொஞ்சினாள். நாள் முழுதும் நீரில் நின்றுவிட்டு நனைந்து வந்திருந்த கண்ணனைத் தலை, உடல் எல்லாம் துவட்டினாள். உச்சி மோந்தாள். ஈர உடையைக் கழற்றி, வேறு உத்தரீயத்தை எடுத்து இடுப்பில் கட்டிவிட்டாள். வேண்டாம் என்றால் யசோதை விட்டாளா?  கரையில் கோபியர் உள்பட அனைவரும் சூழ்ந்திருந்ததால் கண்ணன் சற்று வெட்கத்தோடு உடை மாற்றிக்கொண்டான். 

அவனுக்கு எங்காவது அடி பட்டிருக்கிறதா என்று பார்த்தாள். ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

எமன் வாயில் சென்று மீண்டு வந்தான் என்றே எண்ணினாள்.

கோபர்கள் ஆங்காங்கே சென்று சில கிழங்குகளையும், பழங்களையும் கொண்டு வந்தனர்.  கோபிகள், அங்கேயே கல்லைக் கூட்டி, தீ மூட்டி, கிழங்குகளை வேகவைத்து அனைவர்க்கும் பகிர்ந்தனர்.

மிகவும்‌ இருளாகி விட்டபடியால்  பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காட்டு வழியில் வீடு செல்வது நல்லதல்ல என்று நந்தன் எண்ணினான். யமுனையின் மணல் திட்டு மிகவும் அகலமாக இருந்தது. சுற்றிக் காவல் போட்டு  அங்கேயே அன்றிரவு தங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

நள்ளிரவில் திடீரென்று சடசடவென்று சத்தத்துடன் பெரிய வெளிச்சம் தோன்ற, காட்டுத்தீ என்று உணர்வதற்குள் வேகமாகப் பரவிவிட்டது.

அந்தப் பக்கம் நெருப்பு, இந்தப்பக்கம் ஆழமான மடு. இடையில் சிக்கிக்கொண்டார்கள் இடையர்கள். காட்டுத்தீயின் வெம்மை தாங்காமல் அனைவரும் தவித்தனர். இருக்க இருக்க காற்றின் வேகத்தால் தீக்கங்குகளும், மரங்களும் அவர்கள் மேல் பறந்து வந்து விழுந்தன.

வேறு வழியின்றி அசந்து உறங்கிக்கொண்டிருந்த கண்ணனை எழுப்பினார்கள் சிறுவர்கள்.

கண்ணா! காட்டுத்தீ பரவிண்டே இருக்கு. எல்லாரும் கஷ்டப்படறாங்க. எப்டியாவது காப்பாத்து. 

கண்ணன் எழுந்து பார்த்தான்.

சுற்றிலும் வானளாவிய நெருப்பு, வேறொன்றும் இல்லை. இந்தப்பக்கம் மடுநீர் இருந்தாலும், அது ஆழமானது. 

சற்று யோசித்தான். பின்னர் எல்லாரையும் அங்குமிங்கும் ஓடாமல்  ஒரே இடத்தில் வந்து குழுமி நிற்கச் சொன்னான். எல்லாரும் ஓருடத்தில் வந்ததும், அனைவரையும் கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்றான்.

நந்தனுக்கு அவன் செய்வது விசித்ரமாக இருந்தாலும், கண்ணன் சொன்னதை மீற எண்ணம் எழவில்லை.

அனைவரும் கண்களை மூடியதும் ஹா வென்று கோட்டை வாசலைப் போல் தன் செப்புவாயைத் திறந்து அத்தனையும் நெருப்பையும் உறிஞ்சிவிட்டான்.

அவன் வயிற்றினுள்தானே அனைத்து பூதங்களும் அடக்கம்? 

ஓரிரு நிமிடங்களில் நெருப்பு முழுவதையும் கண்ணன் குடித்துவிட்டு,  கருகியிருந்த மரம் செடி கொடிகளைத் தன் அமுதப் பார்வையால் செழிப்புறச் செய்தான். அவை முன்போல் ஆனதும், இப்போது கண்ணைத் திறக்கலாம் என்று பலராமன் அறைகூவல் இட்டான்.

கண்ணைத் திறந்த இடையர்கள் ஆச்சரியமுற்றனர். அங்கே நெருப்பு எரிந்த சுவடே இல்லை.

முன்னைவிடவும் பசுமையாக, செடிகளும் கொடிகளும் மலர்களுமாகக் காட்சியளித்தது அவ்வனம்.

அதிகாலைப் பொழுதாகிவிட, மாடு கறக்கும் வேளை வந்துவிட்டதென்று அனைவரும் அவசரம் அவசரமாக இடைச்சேரி நோக்கிக் கிளம்பினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...




No comments:

Post a Comment