Friday, October 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 575

நிமிச் சக்ரவர்த்தி அடுத்த கேள்வியைக் கேட்டார்.

பகவானின் மாயை பற்றி அறிய விரும்புகிறேன். விளக்கிக் கூற இயலுமா?

இக்கடுமையான வாழ்க்கையில் தவித்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஹரிகதாம்ருதமே நல்ல மருந்து. தாங்கள் பேசுவதைக் கேட்க கேட்க ஆனந்தம் பெருகுகிறது. போதும் என்ற எண்ணமே வரவில்லை. 

இப்போது நவயோகிகளுள் ஒருவரான அந்தரிக்ஷர் திருவாய் மலர்ந்தார்.

பரம்பொருளான பகவான், பஞ்ச பூதங்கள் என்னும் ஐந்து மூலப்பொருள்களை, தன் ஆத்மஸ்வரூபத்தின் துளிகளுக்கேற்ப, அனைத்து ஜீவன்களாகவும் படைத்திருக்கிறார்.

பஞ்ச பூதங்களாலான உடல்களில் ஆத்மாவாகத் தானே ப்ரவேசிக்கிறார். அவரால் உருவான உடலிலோ, குணக்கலவையிலோ தான் சிக்கிக் கொள்வதில்லை. தனித்துச் சாட்சியாக நிற்கிறார். நான் என்னும் அஹங்காரமுடைய ஜீவன் தன்னை ஆத்மாவிலிருந்து வேறென்று எண்ணி குணக்கலவைகளைத் தன் ஸ்வரூபமாக எண்ணிக்கொண்டு மாட்டிக்கொள்கிறது.

பலனில் ஆசை கொண்டு காரியம் செய்கிறது‌. சுக துக்கங்களை அனுபவித்து இங்கேயே உழல்கிறது. அதனால் பல பிறவிகளை எடுக்கிறது. மஹாப்ரளய காலம் வரை பல்வேறு பிறவிகளில் சுழன்றபின் ப்ரளயகாலத்தில் பகவானிடம் ஒடுங்குகிறது. மீண்டும் படைப்புக்காலம் துவங்கும்போது முன்போலவே பிறவிச் சுழலில் விழுகிறது.

ப்ரளய காலத்தில் படைப்புகள் அனைத்தும் தத்தம் மூலப்பொருளில் ஒடுங்குகின்றன. 
அவ்வமயம், நூறாண்டுகள் தொடர்ந்து மழை பெய்யாது. சகிக்கமுடியாத வெப்பத்தால் சூரியன் வறுத்தெடுப்பான்.


ஸங்கர்ஷணரின் முகத்தில் தோன்றும் நெருப்பு, காற்றால் வளர்ந்து மூவுலகங்களையும் பொசுக்கும்.

அதன் பின் ஸம்வர்த்தக மேகங்கள் யானையின் துதிக்கையளவு நீர்த்திவலைகள் கொண்ட மழையைப் பொழியும். மாபெரும் அண்டம் முழுதும் நீரில் மூழ்கும்.

கட்டை முழுதும் எரிந்த பின் பற்ற வேறெதுவும் இல்லையெனில் நெருப்பு சிறியதாகி அடங்குவதுபோல, உலக வடிவமாய் நிற்கும் பேராற்றல் ஒடுங்கி, உருவற்ற நிலையை ஏற்கும்.

ப்ரளயத்தில் புவியின் வாசனை என்னும் தன்மாத்திரையை வாயு இழுத்துக்கொள்ளும். மண் தண்ணீரில்‌ மூழ்கியதும் நீரின் தன்மாத்திரையான சுவையையும் வாயு இழுத்துக்கொள்ளும். எனவே நீர் அக்னியில்‌ மறையும்.

அக்னியின் ஒளியாகிய தன் மாத்திரையையும் வாயு இழுத்துக்கொள்ள எங்கும் இருள் கவ்வும். வாயுவின் தன்மாத்திரையாகிய தொடுதல் ஆகாசத்தால் உறிஞ்சப்பட்டு லயமாகிவிடும்.

காலரூபமான பகவான் ஆகாயத்தின் தன்மாத்திரையான ஒலியை இழுத்துக் கொள்வார். ஆகாயமும் அஹங்காரத்தில்‌ மறையும். புலன்கள், புத்தி, மனம் ஆகியவற்றின் தேவதைகளும் அஹங்காரத்தில் ஒடுங்கும். அஹங்காரம் தன்னுடைய மூலவடிவான மஹத் தத்வத்தில் ஒடுங்கும்.

இவையே மாயையின் செயல்கள்.

ஒரு மனைவி காலையில் எழும்போது வீட்டின் ஒவ்வொரு கதவாகத் திறந்து குழந்தைகளை எழுப்பி, வ்யவஹாரங்கள் முடிந்ததும் அனைவரையும் படுக்கவைத்து கதவைப் பூட்டி தானும் கணவனின் அருகில் சென்று உறங்குவதுபோல்,
பகவானிடமிருந்து வெளிப்படும் மாயை எல்லா காரியங்களையும் நிகழ்த்திவிட்டு, ப்ரளய காலத்தில் அனைத்தையும் ஒடுக்கி தானும் பகவானிடம் ஒடுங்குகிறது.

என்றார் அந்தரிக்ஷர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment