Tuesday, September 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 552

#ச்ருதி_கீதை

வேதங்கள் பகவானைப் பார்த்துக் கூறுகின்றன.

தங்களை உள்ளது உள்ளபடி அறிவதென்பது இயலாது‌. இதைப் பற்றிப் பேசுவதில் பலரும் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கின்றனர். இவ்வுலகம் முன்பு இருந்ததில்லை.

ஆண் பெண் சேர்க்கையால் ஜீவன்கள் தோன்றின என்று சொல்லுகிறார்கள். இல்லாமலிருந்து புதிதாக ஒன்று தோன்றினாலும் அழிவதும் அதன் விதியே. 

ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு ஆன்மா உள்ளதென்கிறார்கள் ஸாங்க்யர்கள். 

கர்மாவும் அதன் பயனும் ஸத்யம் என்கின்றனர் மீமாம்ஸகர்கள். 

இவ்வாறு அவரவர் தத்தம் குணங்களுக்கேற்றவாறு தங்களை வரையறுத்து வாதிடுகின்றனர். 

சிலர் ஜீவன் முக்குணங்களுக்கு ஆட்பட்டவன் என்கின்றனர்‌ . உண்மையில் அனைத்தும் அஞ்ஞானமே. பரமா! தாங்கள் ஞானவடிவினர். ஜீவனும் ஞான வடிவினனே. ஆனால் அவன் தன் உண்மைத் தன்மையை மறந்து ப்ரக்ருதியான மாயையின்பாற்பட்டு சுழற்சியில் சிக்கித் தவிக்கிறான். ஞானியான தங்களிடம் குழப்பங்களே இல்லை.

ஜீவனும் புருஷனும் வெவ்வேறல்ல எனில் ஏன் தனித்துக் காணப்படுகின்றனர் என்ற கேள்வி எழலாம்.

பலவாகத் தோன்றும் இவ்வுலகம் வெறும் கனவுக் காட்சியாகும்‌. இது ஸத் அல்ல. ஆனால் ஸத் போன்று தோற்றமளிக்கிறது.

இவ்வுலகம் மெய்யெனத் தோன்றுகிறதே என்று கேட்டால், ஞானிகள் ப்ரும்மத்தை எங்கும் காண்கின்றனர். அதனால் ஸத் ஆகத் தோன்றுகிறது‌.

காரணப் பொருளான தங்களுக்கும், காரியப் பொருளான உலகிற்கும் வேறுபாடு இல்லை. பொன்னாலான குண்டலங்கள், வளை, மாலை போன்ற அணிகலன்களை விரும்பி அணிகின்றார்கள். ஆனால் திருடனோ அனைத்தையும் தங்கம் என்று எடுத்துச் செல்கிறான். இரண்டும் உண்மைதானே.

அதுபோல உங்களால் படைக்கப்பட்ட இவ்வுலகில் ஒவ்வொரு பொருளிலும் நீங்களே நுழைந்து பரவி நிற்கிறீர்கள். 

அவைகளுக்குச் செய்யும் பூஜை அனைத்தும் உங்களையே ‌சேர்கிறது. பக்தி செய்பவனின் அனைத்து செயல்களும் தங்களுக்கான ஆராதனையே. அவ்வாறு கருதும் சான்றோர்கள் எமனைத் துச்சமாக எண்ணி அவன் தலைமேல் பாதம் வைத்து ஏறிச்செல்கிறார்கள். மரணமிலாப் பெருவாழ்வு அடைகிறார்கள்.

உங்களிடம் பக்தியில்லாதவர்கள் எவ்வளவு செல்வந்தராக இருப்பினும், தளைகளில் மாட்டிக்கொள்கின்றனர்.

வினைப்பயன்களின் மேலுள்ள ஆசை அவர்களை மாட்டிவிடுகிறது. ஆடு மாடுகளை மேய்ப்பதுபோல தன் செயல்களின் பலனைக் கட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். 
தங்கள் பக்தன் தங்களையே அடைகிறான். மீண்டும் பிறப்பதில்லை. தன்னைச் சார்ந்தவர் களையும் தூய்மையாக்குகிறான். அவர்களையும் உலகியல் தளைகளிலிருந்து விடுவிக்கிறான்‌.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment