Sunday, September 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 566

ஒளிமயமாக இருக்கும் அவ்விடத்தில் நுழைந்ததும் மிகவும் கூசவே, கண்களை மூடிக்கொண்டான் அர்ஜுனன். பின்னர் பழகப் பழக மெதுவாகக் கண்களைத் திறக்க, ஆஹா.. கண்கொள்ளாக் காட்சி! 

பேரலைகள் மிகுந்த பெருங்கடலின் நடுவில் தங்க மயமான ஒரு மாளிகை இருந்தது. தேரிலிருந்து இறங்கி அர்ஜுனனை அழைத்துக்கொண்டு உள்நுழைந்தான் கண்ணன்.

ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தூண்களைக் கடந்து, உள்ளே சென்றனர்.

பளபளவென்ற திருமேனியுடன், மிகவும் பயங்கரமாக, ஆயிரம் தலைகளிலுள்ள பெரிய படங்களிலும் நாகரத்தினங்கள் ஒளிர, இரண்டாயிரம் கண்களும் அக்னிப் பிழம்புகள் போலிருக்க, வெள்ளிமலை போன்ற உடலும், கறுத்த கழுத்தும் உடைய பகவான் ஆதிசேஷன் வீற்றிருந்தார்.

அவரை மெத்தென்ற இருக்கையாகக் கொண்டு பரமபுருஷனான பகவான் அமர்ந்திருந்தார்.

மழைமேகம்போல் கறுத்த திருமேனி, மஞ்சள் பட்டாடை, காது வரை நீண்ட அழகிய திருக்கண்கள், ரத்தினக் கிரீடம், குண்டலங்கள் கன்னத்தில் பளீரிட, சுருண்ட கேசம் நெற்றியில் தவழ, மலர்ந்த திருமுகம், முழங்கால் வரை நீண்ட எட்டு திருக்கரங்கள், மார்பில் ஸ்ரீ வத்ஸம், திருக்கரங்களில் ஆயுதங்கள், அவரைச் சுற்றி நந்தன் மற்றும் ஸுநந்தன் என்ற பார்ஷதர்கள், புஷ்டி தேவி, ஸ்ரீ தேவி, கீர்த்தி தேவி, அஜை எனப்படும் மாயாதேவி ஆகிய நான்கு சக்திகள், சங்கநிதி, பதுமநிதி ஆகியவற்றின் தேவதைகள், அனைவரும் விளங்கினர்.

ப்ரமிப்பு நீங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் அர்ஜுனன்.

தன்னுடைய ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் அந்த பரமபுருஷனை கண்ணன் வணங்கினான். 
அவனைத் தொடர்ந்து அர்ஜுனனும் சுயநினைவு வந்தவனாக வணங்கினான்.

பரமபுருஷன் இடிபோன்ற கனத்த குரலில் பேசினார்..

உங்கள் இருவரையும் காணவே அந்தணர்களின் குழந்தைகளைக் கொண்டு வந்தேன். பூபாரம் தீர்க்கவும், தர்மத்தைக் காக்கவும் அவதாரம் செய்திருக்கிறீர்கள். சீக்கிரமாக உங்களுடைய பணிகளை முடித்துக் கொண்டு என்னிடமே வந்து சேருங்கள் என்றார்.

உலகில் தர்மத்தை ஸ்தாபிக்க நீங்கள் இருவரும் நர நாராயண ரிஷிகளாக அவதாரம் செய்யவேண்டும். 

என்றார்.

இருவரும் அப்படியே செய்கிறோம் என்று கூறி வணங்கினர். பின்னர் பரமபுருஷனிடமிருந்து அந்தணரின் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர். 

வந்த வழியே மீண்டும் திரும்பி அந்தணரிடம் அவரது குழந்தைகளை ஒப்படைத்தனர். அவர்களது பிறப்பிற்கேற்றபடி வயதும், அறிவும் வளர்ந்த குழந்தைகளாக அவை இருந்தன. 

அர்ஜுனன் கண்ணனால் தான் அவ்வளவும் நிகழ்ந்ததென்று எண்ணி எண்ணி நெகிழ்ந்தான். மனிதரின் ஆற்றலுக்கப்பால் எவ்வளவு ஆற்றல் உள்ளது என்றெண்ணும்போது அவனுக்கு மிகவும் மலைப்பாக இருந்தது. தன்னைப்போல் சிறந்த வில்லாளன் இல்லை என்ற எண்ணத்தை அக்கணமே விட்டொழித்தான்.

இவ்வாறு கண்ணன் அறநெறிகளைப் பின்பற்றுவதில் சான்றோரைப் போலவும், அற்புதங்களைச் செய்வதில் பகவானாகவும் விளங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment