Friday, September 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 568

ஸ்ரீ சுகர் கூறலானார்

ஹே அரசனே! 
ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைச் சுத்தம் செய்த தீர்த்தமான கங்கை எல்லாத் தீர்த்தங்களையும்  விட உயர்ந்தது. ஆனால் யது வம்சத்தில் பிறந்த கண்ணனின் புகழ் எல்லா உயர்ந்த விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. 

தேவதைகள் உள்பட அனைவரும் திருமகளை அடைய முயற்சிக்கின்றனர். ஆனால், அவளோ கண்ணனின் பாதசேவையை விரும்புகிறாள்.

கண்ணனின் திருநாமம் ஒரு முறை சொன்னாலும், சொல்லக் கேட்டாலும் எல்லாப் பாவங்களையும் போக்கிவிடுகிறது. 

இரண்டு பரார்த்த அளவு நீளமுள்ள காலசக்கரத்தைக் கையில் தாங்கும் பகவானுக்கு பூபாரம் களைவது ஒரு பெரிய வேலையா?

கண்ணனே அனைத்துயிர்களிலும் உள்ளும் புறமுமாகப் பரவி நிற்கும் பரம்பொருள். அனைத்திற்குமான புகலிடம் கண்ணனே. கண்ணனின் கிங்கரர்களான யாதவ வீரர்கள் தம் தோள் வலியாலேயே தீமைகளைக் களையவல்லவர். கண்ணன் வேறுபாடுகள் அற்றவர். தன் தாமரை முகத்தின் புன்சிரிப்பால் அனைவரையும் கவர்பவர்.

தான் வகுத்த அறநெறியைக் காக்கத் திருவுளம் கொண்டு லீலையாக அவதாரம் செய்தவர். அவரது லீலைகளை நினைப்பவரின் மூன்றுவிதமான கர்மவினைகளும் நீங்கும்.

ஒவ்வொரு நொடியும் ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு  இறைவனின் புகழைக் கேட்டு, பாடி, நினைத்து அதிலேயே மூழ்குகிறானோ அவ்வளவுக்கவ்வளவு பக்தியைப் பெற்று பரமபதத்தை அடைகிறான்.

எனவே கண்ணனின் கதையமுதத்தைச் செவியாறப் பருகுவதே முக்தியின்பத்தை அடையச் சுலபமான வழி என்றார்.

இத்துடன் ஸ்ரீமத் பாகவதம் பத்தாவது ஸ்கந்தம் முற்றிற்று.

தொண்ணூறு அத்யாயங்களைக் கொண்ட இந்தப் பத்தாவது ஸ்கந்தம் முழுக்க முழுக்க கண்ணனின் கதையை மட்டுமே கூறுகிறது. 

இதை ஆச்ரயம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர் பெரியோர்.

அனைவரும் தஞ்சமடையத் தக்கது கண்ணனின் லீலைகளைக் கூறும் இந்தப் பத்தாவது ஸ்கந்தமே என்று பொருள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment