Wednesday, September 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 563

ஸ்ரீ சுகர் அடுத்த சரித்ரத்தைக் கூறத் துவங்கினார்.

அரசனே! ஒரு சமயம் துவாரகையில் ஒரு அந்தணர் வீட்டுக் குழந்தை பிறந்ததும் இறந்துபோயிற்று.

அந்த அந்தணர் குழந்தையின் சரீரத்தைத் தூக்கிக்கொண்டுவந்து அரண்மனையின் வாயிலில் கிடத்தி ஓலமிடத் துவங்கினார்.

என் குழந்தை இறந்ததன் காரணம் அரசன் செய்த தவறே ஆகும். பேராசைக்காரன், சிற்றின்பத்தில் மூழ்குபவன், வஞ்சகன் அந்தணரை வெறுப்பவன் ஆகியோரின் அரசாட்சியில்தான் இதுபோல் பிறந்த குழந்தை இறக்கும். 
ஒழுக்கம் கெட்டவனை அரசனாகக் கொண்ட மக்கள் தினந்தோறும் துயரக்கடலில் மூழ்குவர்.

என்று ஓலமிட்டார்.

யாரும் பதிலிறுக்காததைக் கண்டு திட்டிக்கொண்டே சென்றுவிட்டார்.

அதேபோல அடுத்தடுத்த குழந்தைகளும் இறந்துபட்டன. ஒவ்வொரு குழந்தையும் இறந்ததும் சரீரத்தைத் தூக்கிக் கொண்டு வந்து அரண்மனை வாயிலில் போட்டு கத்தி அழுதுவிட்டுப் போவார்.

ஒன்பதாவது குழந்தையின் மரணத்திற்கு அவர் ஓலமிடும்போது அர்ஜுனன் துவாரகையில் கண்ணனைக் காண வந்திருந்தான். அவனது காதில் இவரது அழுகைச் சத்தம் கேட்டதும், நேராக அவரிடம் வந்தான்.

எல்லாம் அறிந்த கண்ணன், பலராமன் ஆகியோர் அமைதியாக இருக்கிறார்கள் என்றால் காரணம் இருக்கலாம் என்று சற்றும் யோசிக்கவில்லை.

நீங்கள் ஏன் இப்படி அழுகிறீர்கள்? இவ்வூரில் க்ஷத்ரியர்கள் இல்லையா? இந்த யாதவர்களெல்லாம் அந்தணர்களா என்ன? ஒரு அந்தணன் வருந்தும்போது உதவ முன்வரவில்லையெனில் அவன் அரசன் வேடமணிந்த நடிகனேயாவான். உமது குழந்தையை நான் காப்பாற்றுவேன். இது சத்யம். என்னால் அது முடியாமல் போனால் தீக்குளித்து என் பாவத்தைப் போக்கிக்கொள்வேன். என்று சபதம் செய்தான்.

அதைக் கேட்ட அந்தணர், ஹே அர்ஜுனா! இவ்வூரில் கண்ணன், பலராமன், அநிருத்தன், ப்ரத்யும்னன் போன்ற சிறந்த வீரர்கள் உளர். அவர்களே இயலாதென வாளாவிருக்கும்போது நீ எவ்வாறு காப்பாற்றுவாய்? எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. வீணாக சபதமிட்டு உயிர் துறக்கப்போகிறாய். என்றார்.

சீண்டிவிட்ட பாம்பைப்போல் சீறினான் அர்ஜுனன்.

அந்தணரே! நான் கண்ணனில்லை. அவனது புதல்வனுமில்லைதான். ஆனால் பரமேஸ்வரனையும் என் தவத்தால் மகிழ்வித்தவன். என் ஆற்றல் பற்றித் தெரியாமல் இகழவேண்டாம். உங்கள் மனைவியின் அடுத்த பேறு காலம் வரும்போது எனக்குத் தகவல் தெரிவியுங்கள். என்றான்.

அந்தணரும் சற்று ஆறுதலடைந்து சரியென்று கூறிப் புறப்பட்டார்.

அனைத்தையும் உப்பரிகையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் விஷமச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment