Friday, September 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 560

பகவான் ஸ்ரீ ஹரி ஒரு ப்ரும்மச்சாரியின் உருவில் வ்ருகனின் முன்பு நின்றார்.

ஓ! சகுனியின் மகன்தானே நீங்கள்? 

தந்தையின் பெயரைச் சொல்லவும் சற்று நின்றான் வ்ருகன்.

என் தந்தையைத் தெரியுமா? 

தெரியுமாவாவது? சரியாகப் போயிற்று. மூச்சு வாங்குகிறது பாருங்கள். சற்று இளைப்பாறுங்கள். இப்படி உடலை வருத்திக்கொள்ளலாமா? உடல்தானே எல்லா சுகங்களையும் அனுபவிக்கக் காரணமாகிறது. 

என்று கை காட்ட, அங்கே ஒரு பெரிய கல் இருந்தது. அதன் மீது அமர்ந்தான் வ்ருகன்.

பகவான் ஹரியின் தேஜோமயமான அழகில் சற்று மயங்கிப் போயிருந்தான்.

அவன் இளைப்பாறட்டும் என்று காத்திருந்த பகவான், சற்று நேரம் கழித்து, 

எதற்காக இப்படி ஓடிவந்தீர்கள்? உங்களுக்கு விருப்பமெனில் என்னிடம் உங்களது எண்ணங்களைப் பகிரலாம்.

என்றார்.

மிகவும் இனிமையாக ஆத்ம நண்பர்போல் பகவான் கேட்கும்போது சொல்லாமல் இருக்க எவரால் இயலும்?

வ்ருகன் நடந்த அத்தனை விஷயங்களையும் கூறினான்.

அதைக் கேட்ட பகவான், அவர் தக்ஷனின் சாபத்தால் மயானவாசியாகிவிட்டாரே. போயும் போயும் அவர் பேச்சையா நம்புகிறீர்கள்? யாராவது எதையாவது சொன்னால் அப்படியே நம்பலாமா? சோதித்துப் பார்க்கவேண்டாமா? இவ்வளவு சிறப்பான குலத்தில் பிறந்து, பல மேன்மைகளையும் அடைந்தும் கோட்டை விட்டுவிட்டீரே. அவர் சொல்கிறபடியெல்லாம் ஒன்றும் நடவாது. நீங்கள் வேண்டுமானால் உங்கள் தலையில் கை வைத்துப் பாருங்கள். பிறகு தெரியும். அவர் எப்படிப்பட்டவர் என்று.

வ்ருகன் சற்று யோசிக்க, அவனுக்கு சந்தேகம் வரக்கூடாதென்பதற்காக அடுத்த அஸ்திரத்தை விட்டார் ப்ரும்மச்சாரி.

அவர் சொல்வது பொய் என்று நீங்கள் உணர்ந்துகொண்டால் நீங்களே அவரைக் கொன்றுவிடலாமே. அதற்காகத்தான் சொல்கிறேன். என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் வேண்டாம்.

துஷ்டர்களிடம் இனிமையாகப் பேசினால் மயங்குவார்கள் என்பதற்கேற்ப, வ்ருகன் செயல் மறந்து அந்த அழகிய மணவாளன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்படியா சொல்கிறாய்? நான் தவமெல்லாம் செய்தேனே? அத்தனையும் வீணா? இந்த வரம் மட்டும் பொய்க்கட்டும். என்ன செய்கிறேன் பார் அந்த சிவனை. என்னை ஏமாற்றுபவர் எவரும் தப்பிக்க இயலாது. நீ எவ்வளவு அழகாகப்‌ பேசுகிறாய்? நீ சொன்னால்‌ சரியாகத் தான் இருக்கும். இப்போதே என் தலையில் கைவைத்துச் சோதிக்கிறேன்.

என்று சொல்லி கையைத் தன் தலையில் வைத்தான்‌. அடுத்த கணம் எரிந்து சாம்பலாகிப் போனான்.

வானுலகத்தோர் அனைவரும் ஜெய ஜெய, நன்று நன்று என்று கோஷமிட்டுக்கொண்டு பூமாரி பொழிந்தனர். 

பரமேஸ்வரன் பகவான் ஹரியின் முன் வந்தார்.

அவரைப் பேசவிடாமல் பகவான் பேசினான்.

ஓ! தேவதேவரே! மஹாதேவரே! இவன் ஒரு மஹாபாவி. தன்னுடைய பாவங்களாலேயே அழிந்துபோனான். பரம மங்கள விக்ரஹமான தங்களுக்கு அபராதம் செய்பவன் எவ்வாறு நலமுடன் இருக்க இயலும்? 
என்றான்.

பரமேஸ்வரன் பகவான் ஹரியின் விநயத்தையும் அன்பையும் கண்டு பேச்சற்று நின்றார். இருவரும் ஒருவர் இதயத்தில் ஒருவர் நீங்காமல் வசிக்கின்றனர் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

சைவ வைணவ ஒற்றுமையை கிரந்தம் முழுவதிலும் ஆங்காங்கே நிறுவுகிறது ஸ்ரீமத் பாகவதம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment