Saturday, September 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 565

குழந்தையைக் காப்பாற்றுகிறேன் என்று அந்தணர்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத குற்றத்திற்காக தீக்குளிக்கத் தயாராக நின்றுகொண்டு அக்னியின் முன்பாக ப்ரார்த்தனை செய்து கொண்டிருந்தான் அர்ஜுனன்.

அதற்கு மேல் வேடிக்கை பார்க்க இயலாமல் கண்ணன் அவனருகில் சென்றான்.

அர்ஜுனா! வீணாக வாழ்வைக் கெடுத்துக் கொள்ளாதே. இந்த மனிதர்களே இப்படித்தான். இப்போது வசை பாடுபவர்கள், உதவி செய்தால் போதும், நமது புகழைப் பாடுவார்கள். அதேபோல எவ்வளவு முறை உதவினாலும், ஒரு முறை தவறினால் திட்டித் தீர்ப்பார்கள்.

என்னுடன் வா. அந்தணச் சிறுவர்களைக் காட்டுகிறேன். என்றான்.

தன் உயிரைக் காப்பாற்ற தான் வேண்டாமலே கண்ணன் வந்ததைக் கண்டு அர்ஜுனன் வெட்கினான். அந்தணர் புலம்பும்போது, அவரிடம் சென்று வீராவேசமாய்ப் பேசுவதை விடுத்து, ஏன் வாளாவிருக்கிறாய்? என்று கண்ணனையே கேட்டிருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

கண்கள் குளமாக மௌனமாகக் கண்ணணின் பின் சென்றான்.

கண்ணன் அர்ஜுனனைத் தன் தேரிலேற்றிக்கொண்டு மேற்கு திசையில் சென்றான்.

ஏழு தீவுகள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் அனைத்தையும் தாண்டிச் சென்றனர்.

குற்ற உணர்வினால் அர்ஜுனன் வழியெங்கும் ஒன்றும் பேசவில்லை. எளிமையே உருவான கண்ணன், அவன் கேளாமலே ஒவ்வொரு இடத்தையும் கடக்கும்போதும் அவைகளின் பெயர்கள், மற்றும் அவற்றைப் பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டே வந்தான். ஓரளவு இயல்பு நிலைக்கு அர்ஜுனனைக் கொண்டுவரும் மனோதத்துவப் பயிற்சி அது.

ப்ரும்மாண்டத்தின் எல்லையான லோகாலோகம் என்ற மலை வந்தது. அதையும் தாண்டி அண்டத்தின் பேரிருளில் ப்ரவேசித்தான்.

கண்ணனின் குதிரைகளான சைப்யம், ஸுக்ரீவம், மேகபுஷ்பம், பலாஹகம் ஆகிய நான்கு குதிரைகளும் இருட்டில் வழி தெரியாமல் தடுமாறின.

குதிரைகள் தவிப்பதைக் கண்ட கண்ணன் கோடி சூரியப் ப்ரகாசம் கொண்ட சுதர்சனத்தை தேருக்கு முன்னால் செல்லும்படி அனுப்பினான்.

ஒளியை வீசிக்கொண்டு ராமபாணத்தைப்போல் மனோவேகத்தில் சுழன்றுகொண்டே முன்னால் சென்றது சுதர்சனம்.

கண்ணனால் படைக்கப்பட்ட அடர்த்தி மிகுந்த அந்தப் பேரிருள் பயங்கரமாக இருந்தது. அர்ஜுனனுக்கு சற்று பயமாக இருந்தது. அதை உணர்ந்த கண்ணன் இயல்பாகப் பிடிப்பதுபோல் வேறு பக்கம் பார்த்துக்கொண்டே அவனது கையைப் பிடித்துக்கொண்டான். அர்ஜுனனின் பயம் நீங்கியது.

அவ்விருளின் எல்லையில் கண்ணைக் கூசும் பேரொளி வந்தது. எங்கும் பரந்திருந்த அவ்வொளியைக் காணவே அர்ஜுனனால் இயலவில்லை. கைகளால் இரு கண்களையும் மூடிக்கொண்டான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment