Tuesday, September 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 562

கைலாயத்திலிருந்து கிளம்பிய ப்ருகு மஹரிஷி நேராக ஸ்ரீ வைகுண்டம் சென்றார்.

மஹாலக்ஷ்மியின் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்தார் பகவான்.

வழக்கமாக ரிஷிகள் யார் வந்தாலும் எழுந்து வரவேற்பார் ஸ்ரீஹரி. ஆனால், அதற்கெல்லாம் அவகாசம் கொடாமல் வேகமாக விடுவிடுவென்று சென்று படுத்திருந்த ஸ்ரீ ஹரியின் மார்பில் ஓங்கி ஒரு உதை விட்டார் ப்ருகு.

பகவான் சட்டென்று எழுந்து மஹாலக்ஷ்மி தாயாருடன் முனிவரை வணங்கினார்.

வாருங்கள் மஹரிஷி. இப்படி அமருங்கள். என்னைப் பொறுத்தருளுங்கள். தாங்கள் வந்ததை நான் உணரவில்லை.

கடினமான பாறைபோல் இருக்கும் என் நெஞ்சில் தமது ம்ருதுவான பாதங்கள் பட்டால் நோகுமே. வலிக்கிறதா.. என்று கேட்டுப் பாதங்களைப் பிடித்து விட்டார்.

பின்னர் பல புண்ணிய தீர்த்தங்களுக்கும் க்ஷேத்ரங்களுக்கும் சென்று அவற்றைப் பாவனப் படுத்துகிறீர். இவ்வைகுண்டத்தில் தேவரீர் எழுந்தருளியது என் பாக்யமாகும்.‌ இன்று தங்கள் திருவடி பட்டதால் இவ்விடமே புனிதமாயிற்று. தங்கள் திருவடி பட்டதால் என் நெஞ்சில் ஏற்பட்ட மச்சத்தில் இனி மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள். என்றான் பகவான்.

பகவானின் எளிமையையும், பொறுமையையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி மேலிட, பக்தியினால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் மல்க, மேனி சிலிர்க்க பேச்சற்றுப் போய் சிலைபோல் நின்றார் ப்ருகு.

பின்னர் பகவானிடம் விடை பெற்று யாகம் நடக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கிருந்த முனிவர்களிடம் நடந்தது அனைத்தையும் விவரித்தார்.

அவர்கள் அனைத்தையும் கேட்டு ஐயம் நீங்கி அமைதியும் பொறுமையும் உடையவர் மஹாவிஷ்ணு என்ற முடிவுக்கு வந்தனர்.

அவரிடமிருந்தே பகவத் தர்மம், ஞானம், வைராக்யம், அஷ்டமா சித்திகள், பாவமில்லாத புகழ், அனைத்தும் தோன்றுகின்றன.

தீய எண்ணமற்றவர்கள், கிடைத்ததைக் கொண்டு மனநிறைவடைபவர்கள், ஸ்வர்கம், நரகம், முக்தி ஆகியவற்றில் சம எண்ணம் உள்ளவர்கள், சூது வாது அறியாத முனிவர்கள் ஆகியோர்க்கு பகவான் ஸ்ரீஹரியே பற்றுக்கோடு ஆவார். ஸத்வ குணம் நிரம்பிய பகவானையே அவர்கள் எப்போதும் வழிபடுகிறார்கள். 

முக்குணங்கள் கொண்ட மாயை அவரது வடிவமாகவே தேவர்கள், அசுரர்கள், ராக்ஷஸர்கள் அனைவரையும் படைத்தது. இவற்றுள் ஸத்வ குணமே பகவானை அடையும் வழி.

இவற்றை உணர்ந்தவர்தாம் அந்த முனிவர்கள். இருப்பினும், உலகின் ஐயத்தைப் போக்கவே இந்தச் சோதனையை நிகழ்த்தினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment