Thursday, January 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 387

கண்ணன் மாடு மேய்த்துத் திரும்புவதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பர் கோபியர்.

சற்று பெரிய கோபிகள் காலை அவன் கிளம்பும் அழகைக் கண் கொட்டாமல் வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டு ரசிப்பார்கள். சின்ன கோபிகள் உப்பரிகையிலும், தூண்களுக்குப் பின்னாலும் நின்று கொண்டு கண்ணனுடன் கண்களால் பேசுவர்.

அவர்கள் மனத்தில் நினைப்பதைக் கண்ணன் மாலையில் கொண்டுவந்து கொடுப்பான். 

 காலை கண்ணன் சென்றது முதல், மாலை அவன் திரும்பும்வரை அங்கேயே நின்று கண்ணன் லீலைகளைப் பேசுவார்கள். ஒவ்வொரு வீட்டுக் குழந்தையும் அவரவர் தாயிடத்தில் ஒவ்வொரு விஷயம் சொல்லும். இவர்கள் தங்கள் பிள்ளைகள் சொன்னதையெல்லாம் கோர்த்து முதல் நாள் வனத்தில் நடந்த அனைத்தையும் அறிந்துகொள்வர்.

இப்படியாகவே அவர்களது காலம் ஓடிக் கொண்டிருந்தது.

ம்ம்ம்மா ம்ம்மா என்ற ஆயிரக் கணக்கான மாடுகளின் குரலொலியும், குளம்பொலியும் கேட்க, அதன் பின்னால் ஒரு புழுதிப்படலம் கிளம்பி வர, மாடுகளின் பின்னால் கண்ணனும் ஆயிரக்கணக்கான சிறுவர்களும் வருவார்கள். காலையில் எவ்வளவு உற்சாகத்துடன் சென்றார்களோ அதில்‌ சற்றும் குறையாமல் மாலையிலும் குதித்துக்கொண்டும் ஆடிப்பாடிக்கொண்டும் வருவார்கள். 

அவர்களுக்கு எப்படிச் சோர்வு வரும்? நாள் முழுதும் கண்ணனைக் காண்பதும், அவனோடு விளையாடுவதுமாக இருப்பவர்க்குச் சோர்வேது? மாறாகப் பல மடங்கு அதிகரித்த புத்துணர்வுடன் வருவார்கள்.

புழுதிப்‌படலத்தின் நடுவே கலைந்த தலையும், முண்டாசும், மயில் பீலியும், இடுப்பில் கொம்பு, குழல் ஆகியவையும், கையில் வேலும், அரையில் பட்டாடையும், உடல் முழுதும் புழுதி அப்பிக்கொண்டு, ஒயிலாகக் கண்ணன் நடந்துவரும் அழகைத் தங்கள் தெருவைக் கடக்கும் வரை கண் இமைக்காமல் ரசிப்பார்கள் கோபிகள்.

வீட்டை அடைந்ததும், அவனை எதிர்நோக்கியிருக்கும் யசோதையைக் கொஞ்சிவிட்டு, அவள் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டே உணவு உண்டு உறங்கிவிடுவான் கண்ணன். காட்டில் அவன் செய்யும் லீலைகளை மற்ற கோபியர் மூலம்தான் அறிவாள் யசோதை. 

ஒருநாள் காலை முன்பு செய்ததுபோலவே பலராமனைக் கிளம்பு நேரத்தில் கையில் அழுத்த அவனுக்கு உடம்பு சுட்டது. அவனை அனுப்ப முடியாதென்று பிடித்துவைத்துக்கொண்டாள் ரோஹிணி.

கண்ணன் மட்டும் வழக்கம்போல் சிறுவர்களுடனும் மாடுகளுடனும் கிளம்புவதை ஏக்கத்தோடு பார்த்த பலராமன், இன்றைக்கு ஏதோ புதிய லீலை செய்யப்போகிறான் என்று உணர்ந்துகொண்டான்.

அனைவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குச் சென்ற கண்ணன், வழக்கம்போல் நகைகளைக் கழற்றி மரப்பொந்தில் வைத்துவிட்டு குன்றிமணிமாலையும், காட்டுப்பூக்களுமாக  காட்டுமன்னார் கோலத்திற்கு மாறினான்.

மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டபின், நிறைய புதுப்புது விளையாட்டுக்களை ஆடினார்கள். அப்போது மாடுகள் தாகம் மிகுதியாக, அருகிலிருந்த யமுனையின் மடுவிற்குச் சென்று நீரைப் பருகின. 

இரண்டு உறிஞ்சலிலேயே மயங்கி மயங்கி விழுந்து இறக்கத் துவங்கின. சுற்றி இருந்த மாடுகள் மிரண்டுபோய் ம்ம்மா ம்மா என்று கூக்குரலிட்டுக் கண்ணனை அழைத்தன.

மாடுகளின் தீனமான குரல் கேட்டு, ஏதோ ஆபத்தென்று உணர்ந்து,  விளையாட்டைப் பாதியில் விட்டு ஓடொடி வந்தான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment