Tuesday, January 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 388

மாடுகளின் குரலைக் கேட்டுக் கண்ணன் ஓடிவருவதற்குள் வேறு சில கோபர்களும் சிறுவர்களும் தாகம் மிகுதியால் அறிவிழந்து மடுவின் நீரைக் குடித்துவிட்டனர்.

கண்ணன் வந்து பார்க்கும்போது உயிரற்ற சில‌ மாடுகள், சிறுவர்கள், மற்றும் கோபர்கள் மடுக்கரையில் இறந்து கிடக்க மற்றவர்கள் அரற்றிக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே, அந்தப் பக்கம் செல்ல வேண்டாம் என்று நந்தன் காவலர்களை விட்டு எச்சரித்திருந்தபோதிலும் அறியாமல் வந்துவிட்டனர்.

அம்மடுவினுள் கொடிய விஷமுள்ள காளியன் என்ற கருநாகம் வசித்து வந்தது. அதன் விஷத்தால் யமுனையின் அந்த மடு நீர் முழுவதும் விஷமாகிவிட்டிருந்தது. அந்த நீரின் மேல் பட்ட  காற்று பட்டால் கூட அவ்வழிச் செல்லும் பறவைகளும் விலங்குகளும் மயங்கி உயிரிழந்து வந்தன. மடுக்கரையில்  மிக உயரமான மரங்கள்‌ தவிர சிறிய தாவரங்கள் எதுவும் உயிர்ப்புடன் இல்லை.

தீயோரை அடக்குவதற்காகவே அவதாரம் செய்திருந்த கண்ணன், தன் மாடுகள்,  சிறுவர்கள், மற்றும் கோபர்களைத் தன் அமுதப் பார்வையால் எழுப்பினான்.

எமலோகம் வரை சென்று மீண்டு வந்த அவர்களுக்கு மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அனைவரும் இது கண்ணன் செயல்தான் என்றுணர்ந்து அவனைக் கொண்டாடினர்.

கண்ணன் தன் பீதாம்பரத்தை மூலக் கச்சமாக ஏற்றிக் கட்டிக்கொண்டான். முண்டாசை அவிழ்த்து இடுப்பில் இறுக்கிக் கட்டினான். கீழே விழுதுவிடாதபடி புல்லாங்குழலை மட்டும் செருகிக் கொண்டான்.

அருகில் இருந்த ஒரு உயரமான கடம்ப மரத்தில் ஏறினான். தோள்களையும் தொடைகளையும் தட்டிக்கொண்டு வில்லிலிருந்து புறப்படும் அம்பைப்போல் விஷ நீரில் வேகமாகக் குதித்தான். 

பாம்பின் விஷத்தால் ஏற்கனவே கொதித்துக்கொண்டிருந்த மடுவின் நீர்,‌ கண்ணனின் வேகத்தால் இன்னும்‌ உயரமாக மேலெழும்பியது.

விஷ நீரினால் கண்ணனுக்கு ஒன்றும் ஆகாதது அதிசயம் அல்ல. ஏனெனில் அத்தனை விஷ ஜந்துக்களுக்கும் விஷத்தை அளித்ததும் அவனேயன்றோ.

மடுவினுள் பாய்ந்த கண்ணன், மதயானை போல் கைகளை வீசி வீசி நீரைக் கலக்கினான்‌. அதனால் பேரலைகள் எழும்பின. 

நதியின் அடிப்புறத்தில் உறங்கிக்கொண்டிருந்த காளியனுக்கு மிகுந்த கோபம் வந்தது. தன் இருப்பிடத்தில் வந்து தொந்தரவு செய்பவன் யாரென்று பார்க்க மேலெழும்பி வந்தான்.

அங்கே மேக வண்ணன், மார்பில் ஸ்ரீ வத்ஸம், சிறிய இடை, அரையில்‌ மஞ்சள்‌ பட்டாடை, சிவந்த சரணங்கள், அழகிய திருமுகம் இவ்வளவும் கொண்ட அழகிய சிறுவன் பயமின்றி நீரில் விளையாடுவதைக் கண்டான். தன் விஷக்காற்று பட்டாலே மனிதர்கள் மடிந்துவிடுவர். அப்படியிருக்க, விஷநீரில் ஆனந்தமாக விளையாடுகிறானே என்று ஆச்சரியம் வந்தாலும், அவனை அடக்க எண்ணி முழுவதுமாய்க் கண்ணனின் உடம்பைச் சுற்றிக் கொண்டான்.

கண்ணனைத் தீண்டும் இன்பத்திற்காக ஆயிரவர் ஏங்கித் தவமிருக்க, இங்கே காளியனுக்கு இந்தா எடுத்துக்கொள் என்பதுபோல் தன்னைக் கொடுத்தான் கண்ணன்.

கண்ணனுக்கு என்னவாயிற்றோ என்று பயந்த கோபர்களும், சிறுவர்களும் கரையிலேயே மூர்ச்சையடைந்து விழுந்தனர். மாடுகள் பயத்தினால் அரற்றின.

நந்தனுக்கு செய்தி பறந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment