Wednesday, January 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 383

ஸத்யலோகத்திற்கும் பூமிக்குமாக அலைந்தலைந்து பார்த்துவிட்டு ப்ரும்மா மிகவும் குழம்பிப்போனார்.

 இரண்டு இடங்களிலுமே கன்றுகளும், சிறுவர்களும் இருந்தனர். ஸத்யலோகத்தில் அவர்களது அமர்க்களம் தாங்காமல் அனைவரையும் யோகநித்ரையில் ஆழ்த்திவிட்டிருந்தார்.

அவர்கள் எழுந்திருக்கவே இல்லை என்னும்போது, பூமியில் விளையாடுபவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தனர்? பூமியில் ஒரு வருடம் ஆகப்போகிறதே. இவ்வளவு நாள்களாக இயல்பாக இருக்கின்றார்களே. இவர்கள்தான் நிஜமான சிறுவர்களும், கன்றுகளுமா?

அப்படியெனில் நாம் தூக்கிக்கொண்டு போனவர்கள்?

தலைகள் வெடித்துவிடும் அளவிற்கு குழம்பினார்.

ஒரு வித்யாசம் கூட இல்லாமல் அப்படியே இருக்கின்றார்களே. ஒருமுறை எண்ணிப் பார்த்துவிட்டு வந்தார். எண்ணிக்கையும் சரியாக இருந்தது. 

கண்ணனைக் குழப்பிவிட வேண்டி தன் மாயையைப் பிரயோகம் செய்தவர், அதில் தானே மூழ்கிப்போனார்.

இதென்ன விபரீதம்? இடைச் சிறுவன் என்று எண்ணினோமே. இவனைச் சோதனை செய்ய வந்து இப்படி ஆகிவிட்டதே.
தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.  அப்போது அத்தனை சிறுவர்களும், கன்றுகளும் மஞ்சள் பட்டாடை உடுத்தி, நீல மேனியுடன், சங்கு சக்ரம், கதை பத்மத்துடன், வனமாலை அணிந்து காட்சி அளித்தனர்.
அவர்கள் அனைவரின் மார்பிலும் ஸ்ரீ வத்ஸம் இருந்தது. கங்கணங்கள், மகர குண்டலங்கள், கால்களில் நூபுரங்கள், தங்க அரைஞாண் என்று எல்லாவிதமான ஆபரணங்களுடன் ஒவ்வொருவரும் வைகுண்டபதியாகவே பகவானாகவே தெரிந்தனர்.

அதோடு மட்டுமன்றி, தன்னைப் போலவே பல ப்ரும்மாக்கள் வந்து அங்குள்ள ஒவ்வொரு ரூபத்தையும் வழிபடுவதையும் கண்டார்.

அணிமா, மஹிமா முதலிய ஸித்திகளின் தேவதைகளும், மாயை, வித்யை முதலிய சக்திகளும், மஹத்தத்வம் முதலிய இருபத்து நான்கு தத்துவங்களும் அவர்களைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர்.

எவரது ஒளியால் இவ்வுலகம் புலப்படுகிறதோ அப்பரம்பொருளாகவே அனைத்து உருவங்களையும் கண்ட ப்ரும்மா அதிலேயே ஒன்றிப்போய் உணர்விழந்துவிட்டார்.
சிலைபோல் மௌனமாக வெகுநேரம் நின்றார். (ப்ரும்மாவிற்கு ஏற்பட்ட இந்நிலைதான் ப்ரமை என்று வழங்கப்படுகிறதோ?)

வேதங்களுக்கெல்லாம் தலைவனானாலும் தன் நிலையை உணரமுடியாமல் மயங்கி நிற்கும் ப்ரும்மாவின் மீது கருணை கொண்ட கண்ணன் தன் மாயையை விலக்கினான்.

ப்ரும்மாவிற்குப் புற உலக நினைவு வந்தது. இப்போது சுற்றுமுற்றும்  ப்ருந்தாவனம் மட்டுமே தெரிந்தது. அனைவர்க்கும் விருப்பமான பழங்களையும் மரங்களையும் கொண்ட அழகிய வனம். இயல்பாகவே பகையான விலங்குகள் கூட கூடி வாழும் ப்ரேமை மிக்க வனமது. ஸ்ரீ வனத்தில் நுழைபவர் எவரானாலும் அவர்க்கு ப்ரேமையுடன் கூடிய ஞானம் சித்தித்துவிடும். இதற்கு விதியும் விலக்கல்ல. (விதி‌ என்பது ப்ரும்மாவின் பெயர்)

சற்று தொலைவில் ஒரு தமால மரத்தின் அடியில் தனியொருவனாக கையில் தயிர்சாதத்தையும், விரலிடுக்கில் ஊறுகாய்களையும் வைத்துக்கொண்டு, நண்பர்களைக் காணவில்லையென்று கண்ணீர் பெருக்கிக்கொண்டு  நின்றுகொண்டிருக்கும் கண்ணனைக் கண்டார்.

சொரேலென்று அடிவயிற்று பிரண்டு வர, ஸத்யப் பொருளை உணர்ந்து ஓடோடிச் சென்றார்.

கண்ணனின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து அவற்றைத் தன் கண்ணீரால் கழுவினார்.

சற்று முன் தான் கண்ட காட்சியை நினைந்து நினைந்து மீண்டும் மீண்டும் பன்முறைகள் வணங்கிக்கொண்டே இருந்தார்.

பின்னர் மெல்ல நடுங்கிக்கொண்டே  எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டார். நாத்தழுதழுக்கத் துதிக்கலானார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment