Friday, January 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 384

தன் நான்கு தலைகளும் மண்ணில் புரள விழுந்து விழுந்து பலமுறை கண்ணனை வணங்கினார் ப்ரும்மா.

இறைவா! நீருண்ட மேகம் போல் மேனியும் மின்னல் போல் ஆடையும், குந்துமணி குண்டலங்களும், மயில்பீலி தாங்கிய முகமும், காட்டுப்பூக்களால் ஆன மாலையும் அணிந்த நந்தகுமாரனான தங்களை வணங்குகிறேன்.

கையில் ஒரு பிடித் தயிற்சோறும், விரலிடுக்குகளில் ஊறுகாய்களும், கையிடுக்கில் பிரம்பு, கொம்பு ஆகியவையும், இடையில் புல்லாங்குழலுமாக விளங்கும் தங்கள் அழகுத் திருவுரு காணக் காண இன்பம் அளிப்பது.

எனக்கு பிரத்யேகமாக அருள் செய்வதற்காகவே தாங்கள்‌ இத்தகைய கோலத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். தங்கள் திருமேனி பஞ்ச பூதங்களாலானதல்ல. அது சுத்த ஸத்வமானது. என் அறிவால் இதை உணர இயலவில்லை. உமது பெருமையை அறிய ஒருவராலும் இயலாது. 

சான்றோர் உம்மை ஆராயும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. அவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே தங்களது லீலைகளைப் பற்றிய அமுதக் கதைகளைச் சொல்லியும் கேட்டும் தங்கள் வாழ்நாளைக் கழித்து விடுகின்றனர். உடலாலும் உள்ளத்தாலும் வாக்காலும் எப்போதும் உம்மையே அடையும் அவர்களுக்கு தாங்கள் எளிதில் வசப்படுகின்றீர்கள். அன்பினால் கட்டுப்படுப்படுகிறீர்கள்.

சிலர் பக்தியை விட்டுவிட்டு ஞானமடைவதற்காகத் தம்மை வருத்திக்கொள்வர். அவர்கள் அரிசியை விட்டு உமியைக் குத்துபவர்கள்.

தங்கள் நிலை வடிவமற்றது. தன்னொளி கொண்டது. எவராலும் விளக்க இயலாதது. அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடியது. தூய உள்ளம் கொண்டவரால் மட்டுமே தம்மை அணுக இயலும். தாங்கள் எங்கும் நிறைந்தவர். 

பூமியின் ஒவ்வொரு அணுக்களையும் யார் எண்ண இயலுமோ, வானிலுள்ள நட்சத்திரங்களை எவரால் எண்ண இயலுமோ, அவரே தங்களது குணங்களையும் எண்ண இயலும்.

என் தீய எண்ணத்தைப் பாருங்கள்.
மாயாவிக்கு மாயாவியான தங்களிடமே என் மாயையைப் பயன்படுத்தி என் பெருமையைக் காட்டத் துணிந்த நான் எத்தகையவன்? சூரியன் முன்னால் சிறு விளக்கு எம்மாத்திரம்?

என் ரஜோ குணத்தினால் தங்கள் மஹிமையை அறியவில்லை. நான் என்ற இறுமாப்புக் கொண்டு பெருந்தவறு இழைத்த என்னை நீங்கள், 'இவன் எனது பணியாள், என்னைச் சேர்ந்தவன், என் இரக்கத்துக்குரியவன்' என்றெண்ணிப் பொறுத்தருளுங்கள்.

ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், பூமி ஆகிய மூலதத்துவங்களால்  செய்யப்பட்ட குடம் போன்ற ஏழடுக்குக் கொண்ட சரீரம் உடைய நான் எங்கே?

காலதரின் வழியே வரும் சூரிய கிரணத்தில் பரவித் தெரியும் பரமாணுக்களைப் போல் எங்கும் வியாபித்திருக்கும் தாங்கள் எங்கே?

புலன்களுக்கு எட்டாதவரே! கருவிலுள்ள சிசு காலைத் தூக்கி உதைப்பது தாய்க்கு குற்றம் செய்ததாகுமா? நான் உள்பட  எல்லா விதமான தத்துவங்களும் தங்கள் வயிற்றுக்குள் அடக்கம்.

நான் தங்களிடமிருந்து தோன்றியவன்தானே? நீங்களே என் தாய்.

நீங்கள் இந்த அவதாரத்தில் தங்களது தாய்க்கு தங்கள் வயிற்றினுள்ளேயே  ப்ரபஞ்சம் முழுவதையும் காட்டினீர்களே.

கோகுலத்திலுள்ள அனைத்துப் பெண்மணிகளும் பாக்யம் செய்தவர்கள். நீங்கள் அவர்கள் அனைவரிடமும் தாய்ப்பால் பருகியுள்ளீர்கள். கோகுலத்துப் பசுக்களும் தன்யமானவை. நீங்களே கன்றாகி அவைகளின் மடியில் பாலைக் குடித்துள்ளீர்கள்.

வேள்விகளால் கூட தங்களுக்கு இத்தகைய மனநிறைவு கிட்டாது. நந்தகோபரின் பாக்யம் சொல்லுக்கெட்டாதது. ஆயர்கள் எவ்வளவு மேன்மை பொருந்தியவர்கள்? ஏனெனில் அவர்களது  தோழன் பரம்பொருளான தாங்களே அல்லவா?

அவர்கள் தங்கள் இந்திரியங்கள் மூலம் தங்களை அனுபவிக்கும் ஆனந்தத்தை உண்மையில்‌ இந்திரியங்களின் தேவதைகளான நாங்களும் உணர்கிறோம்.

இந்த கோகுலத்தில் மரம் செடி கொடியாகப் பிறந்திருந்தாலும் கூட பாக்யமே. ஏனெனில் இந்த ஆயர்களின் பாததூளி அவைகள் மேல் படும். இவர்களது அன்பிற்கு தம்மாலும் கைம்மாறு செய்ய இயலாது. உங்கள் அடியார்களாக இல்லாதவர்கள் திருடர்களைப் போன்றவர்கள். தாங்கள் அளித்திருக்கும் பூமி, முதலிய  அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு தங்களைப் போற்றாதவர்கள் நன்றியுள்ளவர்கள் ஆகமாட்டார்கள்.

அரக்கர்களின் பகைவரே! எப்போதும் தங்கள் நினைவு எனக்கு இருக்கட்டும்.  தங்களுக்கு வணக்கம். 

மேலும் பலவாறு துதி செய்த ப்ரும்மா மீண்டும் கண்ணனை வலம் வந்து வணங்கினார். பின்னர் தன் இருப்பிடம் சென்றார்.

ப்ரும்மா அழைத்துச் சென்ற கன்றுகளும் சிறுவர்களும் மணல் திட்டில் உணவருந்திக் கொண்டிருக்க, கண்ணன் தன் மாயையை விலக்கிக் கொண்டான். பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான்.

இவ்விஷயம் நடந்து முடிய ஒரு வருடம் ஆனபோதும், அச்சிறுவர்களுக்கு சில நிமிடங்களே ஆனதுபோல் இருந்தது. எனவே ஒரு வருடத்திற்கு முன் நிகழ்ந்த அகாசுர வதத்தை அன்று நடந்ததுபோல் வீட்டில் அன்னையரிடம் சொன்னார்கள். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment