Monday, April 8, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 241 கடல் கடைந்த கடல்வண்ணன் - 5

பாற்கடலிலிருந்து ஆலஹால விஷத்திற்குப் பின் ஒவ்வொரு பொருளாய் வெளிவந்தன. காமதேனு, உச்சைஸ்ரவஸ், ஐராவதம், மரகதமணி, பாரிஜாதமரம், அப்ஸரப் பெண்டிர் ஆகியவைகளைத் தொடர்ந்து, அழகே திரண்டு வந்தாற்போல், மஹாலக்ஷ்மி தாயார் வந்தாள்.

அவளது மின்னல்போல் செம்பொன் நிறத்தில் ஒளிரும் திருமேனி, இளமை ஆகியவற்றின் சிறப்பால் தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகிய அனைவருமே அவளைப் பெற விரும்பினர்.

இந்திரனும், தேவர்களும் தாயாருக்கு, சிறந்த சிம்மாசனத்தையும், நதிகள் தூய்மையான நீரையும் கொண்டு வந்தன.

பூமிப்பிராட்டி, தாயாரின் அபிஷேகத்திற்காக மூலிகைகளைக் கொடுத்தாள்.

பசுக்கள், பஞ்சகவ்யத்தையும், வசந்தருது நறுமணப்பூக்களையும் கொண்டு வந்தன.

இந்தப் பொருள்களைக் கொண்டு மஹாலக்ஷ்மிக்கு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது.

மேகங்கள் உருவம் கொண்டு வந்து மங்கல வாத்யங்களை இசைத்தன.
பின்னர், திருமகள் சிங்காசனத்தில் அமர, அந்தணர்கள் வேதஸூக்தங்களை ஓதி, எண்டிசை யானைகளும் சேர்ந்து பட்டாபிஷேகம் செய்வித்தன.

கடலரசன் இரண்டு மஞ்சள் பட்டாடைகளையும், வருணன் வைஜயந்தி மாலையையும் அளித்தனர்.

விஸ்வகர்மா பலவித ஆடை ஆபரணங்களைக்‌ கொடுக்க, ஸரஸ்வதி நல்முத்து மாலைகளைக் கொடுத்தாள்.

ப்ரும்மா தாமரை மலர் கொடுத்தார். நாகங்கள் இரண்டு குண்டலங்களை அளித்தன.

அந்தணப் பெருமக்கள் வாழ்த்து கூற, தன் திருக்கரங்களில் வைஜயந்தி மாலையை ஏந்தி, அனைத்து குணநலன்களும் பொருந்திய புருஷோத்தமனைத் தேடினாள் மஹாலக்ஷ்மி.

சிறுத்த இடை, தளிரன்ன மேனி, சிலம்புகள் ஒலிக்க, தங்கக்கொடி அசைவதுபோல் இங்குமங்கும் நடந்து, குணக்குன்றாக தனக்கேற்ற ஒரு ஆடவனைத் தேடினாள்.

தேவர்கள், சித்த சாரணர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் ஆகிய எவரும் அவளுக்கேற்ற வண்ணம் இல்லை.

இவருக்குத் தவம் இருக்கிறது. ஆனால், கோபக்காரராய் இருக்கிறார் என்று துர்வாசரையும்,

இவரிடம் ஞானம் உள்ளது. ஆனால், பற்றும் உளதே. தேவகுரு, அசுரகுரு இருவரையும்,

மஹானாக இருந்தாலும் பெண்ணாசையை விடவில்லையே என்று ப்ரும்மனையும், சந்திரனையும்,

செல்வந்தனாய் இருப்பினும், பிறரை அண்டி வாழ்கிறார் என்று இந்திரனையும்,

தர்மம், அனுஷ்டாங்கள் இருப்பினும் ஜீவன்களிடத்து அன்பில்லை என்று பரசுராமரையும்,

கொடை வள்ளலாய் இருப்பினும், முக்தியில் விருப்பமற்று இருப்பதாக, சிபியையும்,

பராக்ரமம் இருப்பினும், அது காலத்திற்குட்பட்டதென்று கார்த்தவீர்யார்ஜுனனையும்,

நீண்ட ஆயுள் இருப்பினும் புலனடக்கம் மிகுந்தவர், எனவே என்னைப் பிரியமானவளாக ஏற்கமாட்டார் என்று மார்க்கண்டேயரையும்,

நிறைய நலன்கள் இருப்பினும் அழியத்தக்கவர் என்று ஹிரண்யகசிபுவையும்,

எல்லாம் நிறைந்திருந்தும் சாம்பல் பூசியிருக்கிறார், சுடுகாட்டில் வசிக்கிறாரே என்று பரமேஸ்வரனையும் தள்ளினாள்.

எல்லா குணங்களும் நிரம்பியும், என்னை விரும்பவில்லையே என்று ஸ்ரீமன் நாராயணனைப் பார்த்து வருந்தினாள்.

பின்னர் சற்று நேரம் யோசித்து, ஸ்ரீமன் நாராயணனையே மணாளனாகத் தேர்ந்தெடுத்தாள்.

ஏனெனில் அவரிடம்தான் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பியுள்ளன. அஷ்டமா சித்திகளும் அவருக்கு சேவை செய்த போதிலும், அவர் எதிலும் பற்றின்றி ஆத்மாராமராய் இருக்கிறார்.
அவர் எதையும் தள்ளவும் இல்லை. அதே சமயம் அவற்றில் ரமிக்கவும் இல்லை. என்று தெளிந்தாள்.

இவருக்கு சேவை செய்வது என் பெரும் பாக்யம் என்று எண்ணிக்கொண்டு கைகளில் இருந்த வண்டுகள் சூழ்ந்த வைஜயந்தி மாலையை திருமாலின்  அணிவித்துவிட்டு, வெட்கதுடன் கூடிய புன்சிரிப்புடன் அவர் எதிரில் நின்றாள்.

தானே தேடி வந்து மாலையிட்ட மங்கையை, அகில உலகத்தின் தாயான திருமகளை ஏற்று, அவளுக்கு தன் மார்புத் தடத்தில் என்றும் வசிக்குமாறு இடமளித்தார் எம்பெருமான்.

ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மி இறைவனின் திருமார்பில் அமர்ந்து தன் கருணை ததும்பும் கடைக்கண்களால், மூவுலகங்களையும் கடாக்ஷித்து செழிப்புறச் செய்கிறாள்.

ஸ்ரீ ஸ்வாமிஜியின் மதுரகீதம்
ராகம்: மத்யமாவதி தாளம்: ரூபகம்

01. வருவாய் வருவாய் மஹாலக்ஷ்மி தாயே
வந்து எங்கள் மனையில் நிலையாய் நிலைத்திடுவாயே நீயே

02. முல்லை மல்லி தலையில் தரித்து
குவலய மலரை கைகளில் தரித்து

03. மூக்குத்தி ராக்கொடி ஒட்டியாணம் நெத்திசுட்டி
காசு முத்து மாலைகள் பதக்கமும் தரித்து

04. நெற்றியில் திலகமும் கண்களில் கருமையும்
காதினில் தோடும் கைகளில் வளையல் மோதிரமும் சூடி

05. தாமரைக் கண்களும் தாமரை மாலைகளும்
தாமரைக் கைகள் தாமரைத் திருவடிகள் கொண்ட தாயே

06. குங்கும மஞ்சள் குழம்புகள் பூசிய கால்களில்
பாதஸரம் கொலுசு சலங்கைகள் தரித்து

07. குதிரை பசுக்கள் முன்னே நடந்து வர
ஆனை பிளிறி உன் வரவினில் மகிழ

08. குறைவில்லாத செல்வமும் நிறைவான வாழ்கையும்
ஏற்றமிக பெரு வாழ்வும் வெற்றிகரம் பல நல்கிட

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment